Skip to main content

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா? - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்!

Published on 16/03/2023 | Edited on 16/03/2023

 

Is the 11th public exam cancelled? Minister Anbil Mahesh's answer!

 

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கியது. அதேபோல் மார்ச் 14 ஆம் தேதி பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது.

 

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 2022 - 2023 கல்வியாண்டிற்கான 12 ஆம் வகுப்புத் தேர்வினை 8.5 லட்சம் மாணவர்களும், அதே போல 11 ஆம் வகுப்புத் தேர்வினை 7.8 லட்சம் மாணவர்களும் எழுத உள்ளனர். 3,225 மையங்களில் இந்த பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் இந்த தேர்வுப் பணிகளிலும் விடைத்தாள் திருத்தும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 12 ஆம் வகுப்பில் தமிழ் மொழி பாடத்தேர்விலும் ஆங்கில மொழி பாடத்தேர்விலும் மாணவர்கள் அதிக அளவில் ஆப்சென்ட் ஆனதால் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் துறை உயரதிகாரிகளிடமும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடமும் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

 

ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பொதுத்தேர்வில் மொழிப்பாடத்திற்கே வராத குழந்தைகள் எப்படி பிற பாடத்தேர்வுகளுக்கு வருவார்கள் என்ற சந்தேகம் உள்ளது. அவர்களையும் அழைத்து வந்து தேர்வு எழுத வைக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம். இடைநின்ற மாணவனை கண்டுபிடித்து மீண்டும் அவனை பள்ளியில் சேர்த்துவிட்டோம். ஆனால், அவன் மீண்டும் பள்ளிக்கு வரவில்லை என்பது உண்மையிலேயே வேதனை அளிக்கக்கூடிய செயல்தான். அதனால் தான் பெற்றோர்கள் சற்று ஒத்துழைப்பு கொடுங்கள் எனக் கேட்கிறோம். பள்ளிக்கு சரியாக வராத மாணவர்களை அப்படியே விட்டுவிடக் கூடாது என்பதற்காக ஏதோ ஒரு விதத்தில் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என நினைக்கிறோம்.

 

பள்ளிக்கு மாணவர்கள் வராதது குறித்து ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் ஒவ்வொரு காரணத்தினை சொல்கிறார்கள். அதிகபட்ச மாவட்டங்களில் வேலைக்காக வேறு இடங்களுக்குச் சென்றவர்கள் பள்ளிக்கு வராமல் இருக்கிறார்கள். 10 ஆம் வகுப்பில் அனைவரும் தேர்வு என்று சொன்னதால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பயத்தில் பல மாணவர்கள் தேர்வு எழுதாமல் உள்ளனர். 11 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அஞ்சுகிறார்கள். 11 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு என்பது மாற்றப்படாது. கல்லூரி முதலாம் ஆண்டு பாடங்களில் 11 ஆம் வகுப்பு பாடத்திட்டங்கள் இருப்பதால் தான் 11 வகுப்பில் பொதுத்தேர்வு கொண்டுவரப்பட்டது” எனக் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்