Skip to main content

அனைத்து அரசியல் கட்சிகளும் களமாடிய சிதம்பரம் தொகுதி; ஒரு பார்வை!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 view of Chidambaram Parliamentary Constituency

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தனி தொகுதியாகும். இந்த தொகுதியில் கடலூர் மாவட்டத்தில் இருந்து  சிதம்பரம். காட்டுமன்னார்கோவில்(தனி). புவனகிரி. அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம். அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. முதன் முதலில் 1957 ஆம் ஆண்டு பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சியை சார்ந்த கனகசபைப்பிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த தொகுதியில் 6  முறை காங்கிரஸ் கட்சியும், 4  முறை திமுக,  2 முறை அதிமுக, 3 முறை பாமக, 2 முறை விசிக சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி தொகுதி காவிரி டெல்டா பகுதியின் கடைமடையாக உள்ளது. இதனால் இங்கு பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாய கூலி தொழிலை நம்பியே பொதுமக்கள் அதிகளவில் உள்ளனர். முக்கிய பிரதான சின்னங்களாக சிதம்பர நடராஜர் கோயில், பிச்சவரம் சதுப்பு நிலக்காடுகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், புவனகிரி சட்டமன்ற தொகுதியில் பெட்ரோல் எடுக்கப்படுகிறது, ராகவேந்திரர் மற்றும் ராமலிங்க அடிகளார் பிறந்த இடமாகவும் உள்ளது.  காட்டுமன்னார்கோயில் தொகுதியில் தமிழகத்தின்  மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியால் 47 ஆயிரம்  ஏக்கர் விலை நிலங்கள் பாசனம் வசதி பெறுகின்றன. சென்னை குடிநீருக்கு இதன் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

 view of Chidambaram Parliamentary Constituency

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழன் கட்டிய  கங்கைகொண்ட சோழபுரம் கோயில், அரியலூர் தொகுதியில் கலியுக வரதராஜ பெருமாள் கோயில், கரைவெட்டி பறைவைகள் சரணாலயம் உள்ளது. அரியலூர் ஜெயங்கொண்டம் பகுதியில் ஏராளமான சுண்ணாம்பு படிவுகள்  உள்ளதால் சிமெண்ட் தொழிற்சாலைகள் மாவட்டத்தில் அமைந்துள்ளன.  ஜெயங்கொண்டம் மற்றும் அருகில் உள்ள இடங்களில் பழுப்பு நிலக்கரி கிடைப்பது இயற்கையாக உள்ளது.

இந்தப் பகுதியில் சாதாரண சிமெண்ட் முதல் தரம் மிகுந்த சிமெண்ட் வரை சுண்ணாம்பு கற்கள் மூலம் சிமெண்ட் ஆலைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது.  தீ களிமண், தரையோடுகள், சுடு மண் குழாய்கள், செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அரியலூர் கனிம வளங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. குன்னம் சட்டமன்ற தொகுதி பெரும்பாலும் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. குன்னம் பகுதிகளில் பருத்தி, மக்காச்சோளம், மஞ்சள், முந்திரி, உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன.  கல் குவாரிகளும் அதிக அளவு செயல்பட்டு வருகிறது.  தமிழ் தாத்தா உ.வே சாமிநாத ஐயர் தனது பெற்றோருடன் தங்கி கல்வி பயின்றதும் இந்த தொகுதியில் தான். அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சொந்த ஊரான அங்கனூர் இந்த தொகுதியில் தான் உள்ளது.

இப்படிப்பட்ட சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் பெண் வாக்காளர்கள் பெரிய வித்தியாசம் இல்லாமல் உள்ளனர். மாற்று பாலினத்தவரும் 100-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.  தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் 2-வது முறையாக இந்த தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

இந்த தொகுதிக்கு 18-வது மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் போட்டியிடுவதால், இது நட்சத்திரத் தொகுதியாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் வரும் தேர்தலிலும் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் அவரே போட்டியிடுகிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் தொகுதியில் அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
vck president thirumavalavan anoounced 20204 ambedkar sudar award to prakash raj

பிரகாஷ் ராஜ், நடிப்பைத் தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என மற்ற தளங்களிலும் பயணித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் ஏழு கட்ட வாக்குப்பதிவில், இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த வகையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது, பெங்களூருவில் வாக்களித்த பிரகாஷ் ராஜ், மாற்றத்திற்காக மற்றும் வெறுப்பிற்கு எதிராக வாக்களித்ததாக கூறினார். 

இந்த நிலையில் வி.சி.க. சார்பில் பிரகாஷ் ராஜுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வி.சி.க. சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறப்பாக தொண்டாற்றும் நபர்களுக்கு, ‘அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு’ ஆகிய பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

2007ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 2024ஆம் ஆண்டிற்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதை பிரகாஷ்ராஜுக்கு வழங்குவதாக வி.சி.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வி.சி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவர் பிரகாஷ்ராஜ்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விருதுகள் அடுத்த மாதம் 25ஆம் தேதி, (25.05.2024) சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது திருமாவளவனும்,பிரகாஷ் ராஜும் சந்திப்பு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யாவிற்கு வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.