தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப். 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டனர். அதேசமயம், வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
அதன்படி இன்று சென்னையின் பல்வேறு கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
சென்னையில் நுங்கம்பாக்கம் பகுதி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய நுங்கம்பாக்கம் மண்டல அலுவலகத்திற்கு வந்தனர். நுங்கம்பாக்கம் மண்டலத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் அனைத்து வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை மாநகராட்சி ஊழியர்கள் சோதனை செய்து பெற்று வருகின்றனர். 113வது வார்டு திமுக பிரேமா சுரேஷ், 114 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் மதன்மோகன் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்ய நுங்கம்பாக்கம் மண்டல அலுவலகத்திற்கு வந்தனர்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி இன்று மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் மண்டல அலுவலகம் சுற்றிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவும் பரபரப்பாகவும் காணப்படுகிறது. அந்த வகையில் கடைசி நாளான இன்று 8 வது மண்டல அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்ய அனைத்து கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் காலையிலிருந்து வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.