Skip to main content

“இது மக்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி.. கூவத்தூர் ஆட்சி கிடையாது..” - இ.பி.எஸ்.க்கு பதிலடி கொடுத்த உதயநிதி

Published on 16/02/2022 | Edited on 16/02/2022

 

Udhayanidhi Stalin election campaign in dindigul district

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

 

அந்தவகையில், திண்டுக்கல் மாநகராட்சியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மாநகராட்சி முன்பாக பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், “தலைவர் ஆட்சிக்கு வந்து 9 மாதம் தான் ஆகிறது. ஆட்சிக்கு வந்த சமயத்தில் இரண்டாவது கரோனா அலை மூலம் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதை போர்க்கால அடிப்படையில் தீர்த்து வைத்தார்.

 

முதல் அலையின் போது அதிமுக அரசு ஒரு கோடி பேருக்கு தான் தடுப்பூசி போட்டனர். ஆனால் நாம் கடந்த ஒன்பது மாதத்தில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டது மூலம்தான் மூன்றாவது அலையில் எந்த ஒரு பாதிப்பும் மக்களுக்கு ஏற்படவில்லை. அதுபோல் கடந்த அதிமுக ஆட்சி 5 லட்சம் கோடி கடன் சுமையை தமிழ்நாடு மக்கள் மீது வைத்து விட்டு சென்றது. அப்படி இருந்தும் கரோனா நிவாரண நிதி 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் முதல்வர் கூறியதன் பேரில் இரண்டு தவணையாக தலா 2000 வீதம் கொடுத்தோம். அதுபோல் ஆவின்பால், பெட்ரோல் ஆகியவற்றின் விலையை குறைத்து இருக்கிறோம். 

 

இந்த மாநகராட்சியை அதிமுக பெயரளவிலேயே அறிவித்தது. ஒரே ஒரு தட்டியை மட்டும் வைத்துவிட்டு தரம் உயர்த்தியதாக கூறினார்களே தவிர;  தரம் உயர்த்தப்படவில்லை. இங்கு ஒரு கட்டமைப்பும் இல்லை. ஒரு கிராமம் போல்தான் காட்சி அளிக்கிறது. இந்த மாநகராட்சி தேர்தலில் போட்டி போடும் மேடையில் உள்ள நாற்பத்தி எட்டு பேரில் தான் ஒரு பெண் முதல் மேயராக வர இருக்கிறார். அதன் மூலம் உங்களுடைய பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். 

 

எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி, கடந்த 2 நாட்களாக திமுக சட்டமன்றத்தை முடக்கப் போகிறோம் என்று சொல்லிவருகிறார். தைரியம் தெம்பு இருந்தால் முடக்கிப் பார் தற்பொழுது திமுக கூட்டணியில் 159 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறோம். மீண்டும் தேர்தல் வைத்தால் ஒரு சீட்டு கூட அதிமுக வராது. இது இரண்டு அமாவாசைகளுக்கும் புரியமாட்டேங்குது. அது போல் ஐந்து நாட்களாக உதயநிதியை  காணவில்லை என்று சொல்கிறார். கடந்த ஒரு வாரமாக பிரச்சாரம் செய்து கொண்டுதான் வருகிறேன். நீட் தேர்வு குறித்து சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடந்தபோது அவர் எதிரே தான் நான் உட்கார்ந்து இருந்தேன். இந்த திமுக ஆட்சி மக்களால் உருவாக்கப்பட்டதே தவிர கூவத்தூர் போய் சசி காலில் விழுந்து ஆட்சி அமைத்தது மறந்து விடவேண்டாம்” என்று கூறினார். 

 

இந்தக் கூட்டத்திற்கு முன்பாக பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், உதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளி வால் ஒன்றை பரிசாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி கலந்துகொண்டார். மேலும், இதில் மாவட்ட துணைச் செயலாளர்கள் நாகராஜ், தண்டபாணி, மாநகரச் செயலாளர் உட்பட பல திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்