Skip to main content

“பிரதமருக்கு மக்களை விட அதானியின் மீது தான் அக்கறை இருக்கிறது” - திருமாவளவன் எம்.பி.

Published on 03/03/2023 | Edited on 03/03/2023

 

thirumavalavan talk about adani

 

திருச்சி புனித வளனார் கல்லூரியில் தமிழாய்வுத்துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் இன்று நடைபெற உள்ளது. மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் இந்த கருத்தரங்கில் மலேசிய தமிழ் எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்புரையாற்ற நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் திருச்சிக்கு வருகை தந்துள்ளார்.

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முதலமைச்சர் அகில இந்தியப் பார்வையோடு அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார். பா.ஜ.க.வை வரும் நாடாளுமன்றத் தேர்த்தலில் வீழ்த்த வியூகம் வகுத்துள்ளார். முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்று பிறந்தநாள் விழா என்று மட்டும் இல்லாமல் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான அரசியல் பரப்புரையின் தொடக்கவுரையாகப் பேசி உள்ளார். விசிகவுடைய குரலுக்கு வலு சேர்க்கும் வகையில் முதலமைச்சருடைய பேச்சு இருந்துள்ளதை வரவேற்கிறோம்.

 

அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக உள்ள அணிகளை இணைக்கும் பணியில் முதல்வர் ஈடுபட வேண்டும். நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணமாகச் சென்று மாநில அரசியல் தலைவர்களைச் சந்திக்க வேண்டும். ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர் ராவ், உத்தவ் தாக்கரே, மமதா பானர்ஜி போன்ற தலைவர்களையும் சந்திக்க வேண்டும். அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரணி தான் அதிகம். ஆனால், அவற்றை ஒருங்கிணைப்பதில்தான் தேக்கம். அந்த தேக்கத்தை உடைப்பதற்கான ஒரு பிரகடனம் தான் முதல்வருடைய உரை.

 

அகில இந்திய அளவில் மு.க.ஸ்டாலினின் பங்களிப்பு தேவை என்று பலரும் கூறி உள்ளனர். திமுக அதற்கான முன்னெடுப்பை எடுக்கும் என்பதற்கு உதாரணமாக மு.க.ஸ்டாலின் செயல்பட்டுள்ளார்.  பா.ஜ.க.வை வீழ்த்த மு.க.ஸ்டாலின் திடீரென எந்த முடிவும் எடுக்கவில்லை. அவர் இதற்கு முன்பாகவே வியூகம் வகுத்துவிட்டார். காங்கிரசுடன் இணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பது ஏற்கனவே எங்கள் தரப்பிலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தான்” என்றார்.

 

சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து பேசியவர், “சாமானிய மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த அரசு கார்ப்பரேட்டுக்கானது என்பதை அவர்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர். அதானி வீழ்ந்து போகாமல் பாதுகாப்பதில் தான் மோடிக்கு அக்கறை இருக்கிறது. மக்களின் நலன் மீது இல்லை. மத்திய அரசு சமையல் கேஸ் விலை உயர்வு அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
vck president thirumavalavan anoounced 20204 ambedkar sudar award to prakash raj

பிரகாஷ் ராஜ், நடிப்பைத் தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என மற்ற தளங்களிலும் பயணித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் ஏழு கட்ட வாக்குப்பதிவில், இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த வகையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது, பெங்களூருவில் வாக்களித்த பிரகாஷ் ராஜ், மாற்றத்திற்காக மற்றும் வெறுப்பிற்கு எதிராக வாக்களித்ததாக கூறினார். 

இந்த நிலையில் வி.சி.க. சார்பில் பிரகாஷ் ராஜுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வி.சி.க. சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறப்பாக தொண்டாற்றும் நபர்களுக்கு, ‘அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு’ ஆகிய பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

2007ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 2024ஆம் ஆண்டிற்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதை பிரகாஷ்ராஜுக்கு வழங்குவதாக வி.சி.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வி.சி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவர் பிரகாஷ்ராஜ்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விருதுகள் அடுத்த மாதம் 25ஆம் தேதி, (25.05.2024) சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது திருமாவளவனும்,பிரகாஷ் ராஜும் சந்திப்பு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யாவிற்கு வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.