நேற்று (18.08.2021) பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரமில்லா நேரத்தில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாட்டில் நடந்த கொள்ளை, கொலை தொடர்பாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கை மீண்டும் தற்போதுள்ள அரசு கையிலெடுத்துள்ளது” என்று பேசினார். இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார். கொடநாடு கொள்ளை, கொலை தொடர்பாக முதல்வர் பேசுகையில், ''கொடநாடு கொலை வழக்கில் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல நீங்களே அந்தப் பிரச்சனையைக் கிளப்புகிறீர்கள். அந்த மாதிரிதான் அதிமுகவினரின் போக்கு உள்ளது'' என்று கூறினார். இதனையடுத்து, அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். வரும்போதே கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
சட்டமன்றத்தைப் புறக்கணித்த எதிர்க்கட்சியினர், சாலையில் அமர்ந்து 'பொய் வழக்குகளைப் போடாதே' என்ற முழக்கங்களை எழுப்பி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ''அதிமுக ஆட்சியில் முடிக்கும் தருவாயில் இருந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை தற்போது திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் கையில் எடுத்துள்ளது. என்னையும் சில அதிமுக நிர்வாகிகளையும் அந்த வழக்கில் சிக்க வைக்க சதி நடக்கிறது'' என கூறினார். அதனையடுத்து, இரண்டு நாட்களுக்கு சட்டப்பேரவையைப் புறக்கணிப்பதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவித்தார். இதற்கு விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், ''இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு எதுவும் கிடையாது. தேர்தல் வாக்குறுதிகளில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிப்போம் என்பதும் ஒன்று'' என விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைத் தலைவர் ஓபிஎஸ் ஆகியோர் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்க இருக்கின்றனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 11:30 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெற இருக்கிறது.