புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டி பல்வேறு கோரிக்கைகள் நீண்டகாலமாகவே வலியுறுத்தப்பட்டு வருகிறது. மத்திய ஆட்சியாளர்களின் தயவிலேயே புதுச்சேரி மாநில அரசு இருப்பதால் மாநில அந்தஸ்து வேண்டி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில்., மாநில அந்தஸ்து வேண்டிப் போராடும் போராட்டக் குழுவினர் வெள்ளிக்கிழமை முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்துப் பேசினர்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, உச்சநீதிமன்றம் தெளிவாகச் சொன்ன பிறகு நமக்கு மரியாதையே இல்லாத நிலை உருவாகியுள்ளது. அதிகாரம் இல்லாததால் அரசு ஊழியர்கள் சம்பந்தமாக நிறைவேற்றக்கூடிய திட்டங்களைக் கூட நிறைவேற்ற முடியவில்லை. இதனால் மன உளைச்சல்தான் ஏற்படுகிறது. நிர்வாகம் செய்வதில் சிரமமாக உள்ளது என ஆள்பவர்களுக்கு மட்டுமே தெரியும். திட்டத்தைச் செய்யக்கூடாது என உடனடியாக அறிவிப்பாணைகள் வெளியிடப்படுகிறது.
ரங்கசாமிக்கு அதிகாரம் வேண்டும் என்பதால் மாநில அந்தஸ்து கேட்பதாகச் சிலர் கேலி செய்கின்றனர். மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும். எதிர்காலத்தில் அரசியலுக்கு வருபவர்களுக்குச் சிரமம் இருக்கக்கூடாது என்பதால் மாநில அந்தஸ்து கேட்கின்றேன்” என்றார்.