Skip to main content

“தெரிந்தே ஏற்பட்ட தவறு; பலிகடா ஆக்கப்பட்ட முதன்மை ஆய்வாளர்” - ஓ.பன்னீர்செல்வம்

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

OPS Condemns Tamil Nadu Students Not Participating In National Games

 

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் கலந்து கொள்ளாதது தெரிந்தே ஏற்பட்ட தவறு என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டு இளைஞர்களிடையே உள்ள திறமையை வெளிக்கொணரும் வகையில், விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்கி, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் மாணவர்களை கலந்து கொள்ளச் செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கு உண்டு. ஆனால், இந்தக் கடமையை செய்யத் தவறியதன் காரணமாக, இந்த ஆண்டு தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவ, மாணவியர் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 

அகில இந்திய மாணவர் விளையாட்டு அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் நீச்சல், கூடைப்பந்து, மல்யுத்தம் உள்ளிட்ட 32 விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களைத் தேர்வு செய்து அனுப்பும் பொறுப்பு மாநில அரசிற்கு உண்டு. இதன்படி, நடப்பாண்டிற்கான விளையாட்டு போட்டிகள் 6-ஆம் தேதி ஆரம்பித்து 12-ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. இம்மாதம் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் பெறும் மாணவர்களுக்கு 190 புள்ளிகளும், வெள்ளிப் பதக்கம் பெறும் மாணவர்களுக்கு 160 புள்ளிகளும், வெண்கலப் பதக்கம் பெறும் மாணவர்களுக்கு 130 புள்ளிகளும், பங்குபெற்ற மாணவர்களுக்கு 50 புள்ளிகளும் வழங்கப்படும். இதன்மூலம், விளையாட்டிற்கான இடஒதுக்கீடு மூலம் மாணவ, மாணவியர் மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற படிப்புகளில் சேரமுடியும்.

 

இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடிய மாணவர்களின் பட்டியலை அனுப்புமாறு தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையை இந்திய மாணவர் விளையாட்டு அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் மாணவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு அனுப்பவில்லை என்றும், இதன் காரணமாக இந்த ஆண்டிற்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட படிப்புகளில் விளையாட்டிற்கான இட ஒதுக்கீட்டினை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இதனை நிரூபிக்கும் விதமாக கல்வித் துறையின் விளக்கமும் அமைந்துள்ளது.

 

இது தொடர்பாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் அளித்த பேட்டியில், காணொளிக் காட்சி உரையாடலில் அரசு அதிகாரிகள், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்றிருக்கிறார்கள் என்றும், தொடர்ந்து நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டார்கள் என்றும், இது ஒரு தகவல் தொடர்பு இடைவெளியால் ஏற்பட்டது என்றும் கூறியிருக்கிறார். இதன்படி பார்த்தால், தெரிந்தே இந்தத் தவறு நடந்திருப்பது தெளிவாகிறது. எது எப்படியோ, விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவ, மாணவியரின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற தவறுகளுக்கு காரணம் பல நாட்கள் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பணியிடம் காலியாக இருந்ததும், பல அதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை வகிப்பதும்தான். இந்த விஷயத்தில் உடற்கல்வி முதன்மை ஆய்வாளர் பலிகடா ஆக்கப்பட்டு இருக்கிறார். இந்தத் தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பு.

 

இதில் உள்ள உண்மைத் தன்மையை வெளிக்கொணரும் வகையில், தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பட்டியலை அனுப்புமாறு அகில இந்திய மாணவர் விளையாட்டு அமைப்பு எழுதிய கடிதத்தையும், அந்தக் கடிதம் யாருடைய மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்றும், இதுபோன்ற தவறு இனி வருங்காலங்களில் நிகழாது என்பதை உறுதி செய்ய வேண்டுமென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்