
அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் விஷ்வரூபம் எடுத்த நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதோடு, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து கூண்டோடு நீக்கப்பட்டனர். ஓபிஎஸ் வசமிருந்த பொருளாளர் பதவி திண்டுக்கல் சீனிவாசன் வசமும் எதிர்கட்சித் துணைத்தலைவர் பதவி ஆர்.பி.உதயகுமாரிடமும் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும், ஓ.பன்னீர்செல்வம் தன்னை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்றே அடையாளப்படுத்திவருகிறார்.
நேற்று புதிதாக 14 மாவட்டச் செயலாளர்களை நியமித்து ஓபிஎஸ் உத்தரவிட்டிருந்த நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர்கள், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வேலை இல்லை என்று முடிவெடுத்து எடப்பாடி பழனிசாமியை கட்சியைவிட்டு நீக்கிவிட்டோம். அதனால் அவரைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. கட்சியே எங்களுடையது எனும் போது நாங்கள் ஏன் போட்டி பொதுக்குழு நடத்த வேண்டும். ஓபிஎஸ் பின்னால் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர். பணத்துக்கு விலை போனவர்கள்தான் எடப்பாடியார் பின்னால் உள்ளனர்” எனத் தெரிவித்தனர்.