Skip to main content

“சிறுமி ஜெயஸ்ரீயை எரித்துக் கொன்ற ஆளுங்கட்சியினர் கடுமையாகத்  தண்டிக்கப்பட வேண்டும்!” மு.க.ஸ்டாலின்! 

Published on 11/05/2020 | Edited on 11/05/2020

 

mk stalin


திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமி ஜெயஸ்ரீயை எரித்துக் கொன்ற ஆளுங்கட்சியினர் கடுமையாகத்  தண்டிக்கப்பட வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.,வின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் - முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் பழிவாங்கும் உணர்ச்சியுடன், வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில், ஜெயபால் என்பவரின் மகளான பள்ளி மாணவி ஜெயஸ்ரீயின் கை - கால்களைக் கட்டிப்போட்டு, வாயில் துணி வைத்து அழுத்தி, மூச்சுத் திணறவைத்து;  கலியபெருமாளும் முருகனும் சிறுமியைத் தீவைத்துக் கொளுத்திய கொடூரச் சம்பவம் தமிழகத்தையே பதற வைத்திருக்கிறது. 
 

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயஸ்ரீ, நீதித்துறை நடுவரிடம் இதுகுறித்து மரண வாக்குமூலம் அளித்துள்ளார். 95% தீக்காயத்துடன் போராடிய ஜெயஸ்ரீ, சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டார் என்ற செய்தி இதயமுள்ள எவரையும் துடிதுடிக்கவே செய்யும்.
 

கோவை வேளாண் கல்லூரி மாணவியர் சுற்றுலா சென்ற பேருந்தைத் தருமபுரியில் தீக்கிரையாக்கி, மாணவியர் மூவரையும் கருக்கி, கதறக் கதறக் கொன்றதற்குக் காரணமானவர்கள் அ.தி.மு.க.,வினர் சிலர். அதற்கு அடுத்த கொடிய சம்பவம் இது.
 

சிறுமியை இழந்து வாடும் ஜெயபால் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் அதேவேளையில், குற்றவாளிகளுக்குச் சட்டரீதியாக வழங்கப்படும் தண்டனையே இனி ஜெயஸ்ரீகள் போன்ற சிறுமிகளையும் பெண்களையும் காப்பாற்றும். இந்தக் கொடூர கொலைக் குற்றத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.,வினர் சம்பந்தப்பட்டுள்ளதால், காவல்துறையினர் பெயரளவிற்குச் செயல்படாமல், சட்டத்தின் முழு வலிமையையும் நியாயமாகவும் வேகமாகவும் பயன்படுத்த வேண்டும். விரைந்து உச்சபட்ச தண்டனை கிடைக்கும்படிச் செய்ய வேண்டும். 
 

ஏற்கனவே, பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் சம்பந்தப்பட்ட பலர் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவியுள்ள நிலையில், விழுப்புரத்திலும் அந்த நிலைமை ஏற்படக்கூடாது என்பதையும், ஜெயஸ்ரீயின் கொடூர மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க தி.மு.கழகம் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் இதுபோன்ற கொடிய நிகழ்வுகள், மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்பதை உணர்ந்து காவல் துறையினர், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் சாய்ந்துவிடாமல், நடுநிலையோடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்''. இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.