Skip to main content

தேமுதிகவை அதிர்ச்சியடையச் செய்த அமைச்சர் ஜெயகுமார்... கூட்டணியில் என்ன நடக்குமோ?

Published on 29/02/2020 | Edited on 29/02/2020

இந்தியாவில் 17 மாநிலத்தில் உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான  தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. திமுக மற்றும் அதிமுகவில் தலா 3 ராஜ்யசபா சீட்டுகளுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.

 

Minister Jayakumar about Rajya Sabha seat

 



இதற்கிடையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், "தே.மு.தி.க.விற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தொடர்ந்து அதிமுகவிடம் கேட்டு வருகிறோம். இது குறித்து அ.தி.மு.க., தலைமை மூத்த உறுப்பினர்களுடன் ஆலோசித்து வருவதாக கூறியுள்ளது. அவர்கள் நல்ல முடிவை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். தே.மு.தி.க.விற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என கூட்டணி அமைக்கும் போதே பேசியுள்ளோம்" என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் நேற்று சந்தித்துப் பேசினார். ஆனால் எம்பி பதவி குறித்த எந்த அறிவிப்பும் வரவில்லை. இந்நிலையில் அமைச்சர் ஜெயகுமார் "தேமுதிகவுக்கு எம்பி பதவி தருவதாக அதிமுக ஒப்பந்தம் ஏதும் செய்யவில்லை. பாமகவுக்கு மட்டுமே எம்பி பதவி தருவதாக கூட்டணி அமைக்கும் போது அதிமுக ஒப்பந்தம் செய்தது" என்று தெரிவித்து தேமுதிகவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.     


 

சார்ந்த செய்திகள்