Skip to main content

“கத்தியைக் கூர்மையாக வைத்திருங்கள்; என்ன நிகழும் என யாருக்கும் தெரியாது” - சாத்வி பிரக்யா சிங் சர்ச்சை பேச்சு

Published on 27/12/2022 | Edited on 27/12/2022

 

“Keep the knife sharp; Nobody knows what will happen” Sathvi Pragya Singh Controversy Speech

 

போபால் பாஜக எம்.பி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் கர்நாடக மாநிலம் ஷிவ்மோகாவில் நடந்த இந்து ஜாக்ரனா வேதிகே தெற்கு மண்டல வருடாந்திரக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

 

கூட்டத்தில் பேசிய அவர், “இந்த உலகில் பாவம் செய்பவர்களையும் அடக்குமுறை செய்பவர்களையும் அப்புறப்படுத்துங்கள். அவர்களை அப்புறப்படுத்தும் வரை அன்பின் உண்மையான அர்த்தம் வாழாது என சந்நியாசிகள் கூறுவார்கள். அதனால், லவ் ஜிகாத்தில் ஈடுபடுபவர்களையும் பாவிகளைப் போலவே நடத்த வேண்டும்.

 

உங்கள் பெண் குழந்தைகளை லவ் ஜிகாத் செய்பவர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு நற்பண்புகளைச் சொல்லிக்கொடுங்கள். அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் ஜிகாத் செய்கிறார்கள். அது அவர்களின் பாரம்பரியம். ஏதும் செய்ய முடியாவிட்டால் லவ் ஜிகாத் செய்கிறார்கள். இந்துக்களும் தான் அன்பு செய்கிறோம். ஒரு சந்நியாசி இறைவனை அன்பு செய்கிறார். ஆனால், அவர்கள் அன்பிலும் ஜிகாத் செய்கிறார்கள்.

 

உங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருங்கள். ஆயுதங்கள் இல்லாவிட்டால் காய்கறி வெட்டும் கத்தியையாவது கூர்மையாக வைத்துக் கொள்ளுங்கள். எப்போது என்ன விதமான சூழல் நிகழும் என யாருக்கும் தெரியாது. ஒவ்வொருவருக்கும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உரிமை இருக்கிறது. உங்களது வீடுகளில் யாராவது நுழைந்து உங்களைத் தாக்கினால் அவர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பது உங்கள் உரிமை.

 

கிறிஸ்தவ மிசினரிகளால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு உங்கள் குழந்தைகளை அனுப்பாதீர்கள். அங்கே உங்கள் குழந்தைகள் உங்களுடையதாக இருக்க மாட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.

 

பாஜக எம்.பி.யின் இந்த பேச்சிற்குப் பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. காங்கிரஸ் தலைவர் டெஹ்சீன் பூனாவாலா காவல்துறையில் பிரக்யா சிங் மேல் புகாரளித்துள்ளார். மேலும், சாத்வி பிரக்யா சிங் மீது காவல்துறையில் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்