நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரைகளைக் கட்சிகள் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் மக்களவையில் 'பாஜக தனது வாழ்நாளில் ஒருமுறைக் கூட தமிழக மக்களை ஆள முடியாது' என ராகுல்காந்தி ஆவேசமாகப் பேசினார். அதனைத் தொடர்ந்து அதே மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் மோடி, '1962லிருந்து காங்கிரஸ் கட்சியே தமிழகத்தை ஆளவில்லை, பல மாநிலங்களில் ஆட்சியை இழந்து இருந்தாலும் காங்கிரசிற்கு அகங்காரம் குறையவில்லை'' என பதிலடி கொடுத்தும் பேசியிருந்தார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கிய நிலையில் ராகுல் காந்தி மற்றும் மோடியின் இந்த பேச்சுக்கள் தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் 'ராகுல்காந்தி சொன்னால் அந்த கட்சிக்கு சுக்கிர திசைதான்'' என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். ''எந்த கட்சியைப் பார்த்து தோற்கும் என ராகுல் காந்தி கூறுகிறாரோ அந்த கட்சிக்கு சுக்கிர திசை தொடங்கும். ராகுல் காந்தி சொன்னதால் அதிக மெஜாரிட்டியில் மோடி பிரதமரானார். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வராது என ராகுல் கூறியதும் கட்சி நிர்வாகிகளுக்கு லட்டு வாங்கி கொடுத்தேன்'' என தெரிவித்துள்ளார்.