Skip to main content

"ஸ்டாலினுக்கு படிப்பறிவு இருக்கிறதா என்றெனக்கு சந்தேகம்" - ஹெச்.ராஜா 

Published on 19/04/2018 | Edited on 19/04/2018

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலர் ஹெச்.ராஜா, 'இந்துக் கோவில்கள் மீட்புக் குழு' என்று ஒரு குழுவை அமைத்து அதன் செயல்பாடுகளில் ஒரு பகுதியாக மாநிலமெங்கும் உள்ள கோவில்களுக்குச் சென்று பார்வையிடுகிறார். நேற்று செம்பரம்பாக்கம் அருகிலுள்ள கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியது...   

 

H.raja temple


"அறநிலையத் துறையும் ரெவின்யூ துறையும் இணைந்து கூட்டு சதி செய்து இந்துக் கோவில்களை திருடுகிறது. அமைச்சர்களோ, அதிகாரிகளோ இந்துக் கோவில்களுக்கு என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. நான் சொல்றேன், உங்களால் திறம்பட செயலாற்ற முடியவில்லை. அதை எங்களிடம் கொடுத்துவிடுங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். இந்துக் கோவில்களில் பல அரசு அதிகாரிகள் ரௌடிகள் போல் நடந்துகொள்கின்றனர். அவர்கள் என்ன இந்து கோவில்களுக்கு எஜமானா? இவர்கள் பக்தர்களை மதிப்பதில்லை, சேவகர்களை இவர்கள் வீட்டு வேலைக்காரர்கள் போல் நடத்துகிறார்கள். என்னிடம் பல புகார்கள் வந்துகொண்டு இருக்கிறது. இந்து மக்கள், அதிகாரிகளிடம் சென்று கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று கேட்டால், அதற்கு அனுமதிகொடுக்க இந்த அதிகாரிகள் காசு கேட்கிறார்கள். தமிழகம் முழுவதும் இவ்வாறுதான் நடைபெறுகிறது. டாஸ்மாக்கும், கோவில்களும் தான் இந்த அரசு அதிகாரிகளுக்கு முதலீட்டில்லாமல் கொள்ளை அடிக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. 
 

இந்து கோவில்களுக்கு என்று 4,78,000 ஏக்கர் நன்செய், புன்செய் நிலங்கள் இருக்கின்றன. 33,000 கட்டிடங்கள் இருக்கிறது. 22,000க்கும் மேற்பட்ட மனைகள் இருக்கிறது. அதையெல்லாம் அவர்கள் காட்ட வேண்டாமா? கோடிக்கணக்கில் கோவிலை வைத்து சம்பாரிக்கிறார்கள். ஆனால், கோவில்களின் கட்டிடங்களைப்  பாருங்கள் எவ்வாறு இருக்கிறது என்று. அப்படி சரியாக செய்யமுடியவில்லை என்றால் ஓடிவிட வேண்டும். அரசாங்கம் கோவில்களை வைத்திருக்கக் கூடாது. இன்று இருக்கும் நிலையில் இந்துக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும். இந்த இந்துக் கோவில்கள் மீட்புக்குழு அமைந்ததற்கு காரணமே இந்த திராவிட அமைப்புகள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் போன்ற கொள்ளைக் கூட்டத்திடம் இருந்து கோவில்கள் மீட்கப்பட வேண்டும். செம்பரம்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்து, கோவில் நிலத்தையும் ஆக்கிரமித்து இந்த செயின்ட் ஜான்ஸ் பள்ளி கட்டிடம் இருக்கிறது. நம் இந்து பிள்ளைகளை அவர்கள் மதம் மாற்றுகிறார்கள். அவர்களுக்கு நாம் நிலம் தரவேண்டுமா? இந்து கோவில்களை சரியாக பராமரித்தால், அதில் கிடைக்கும் லாபத்தில் இந்து ஏழை குழைந்தைகளுக்கு கல்வி வசதி செய்து தரலாம். சர்க்கார் கொடுக்காது எம்பெருமான் கொடுப்பார். 

 

Banwarilal governors guide


ஸ்டாலினுக்கு படிப்பறிவு உள்ளதா என்று எனக்கு தெரியவில்லை. நேற்றைக்கு ஆளுநர் 'கவர்னர்ஸ் கைடு' புத்தகத்தை எடுத்து பத்திரிகையாளர் சந்திப்பில், கவர்னரின் வேலைகள் என்னென்ன என்று சொல்லியிருக்கிறார். பல்கலைக்கழகத்தின் வேந்தரை நியமிக்க மட்டுமல்ல ஒரு பியூனைக் கூட நியமிக்க மாநில அரசுக்கு உரிமையில்லை. ஒருவேளை அவர் ஆங்கிலத்தில் படித்ததால் தெரியவில்லை போல. இதற்கு முன் இருந்த கவர்னர்கள் போன்று ரிப்பன் கட் செய்பவர் என்று நினைத்துவிட்டார் போல. 
 

காவிரி பிரச்சனைக்கு தமிழ்நாட்டுக்கு உதவ மத்திய அரசாங்கம் நினைக்கிறது. ஆனால், நதி மாநிலங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அது ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறது. இந்த உண்மைகளையெல்லாம், மறக்கடித்து இந்த ஊடகங்கள் மக்களிடம் தூண்டிவிடுகின்றன. இதற்கு தான் ட்வீட் செய்துள்ளேன். இதற்கு முன்னர் இந்த திராவிடர்கள் எவ்வளவோ கேவலமாக பேசியிருக்கிறார்கள். அப்போது எல்லாம் கோபப்பட்டிருக்கிறோமா? இன்று ஒரு நல்லவரை கேள்வி கேட்கிறீர்கள். ஓஎஸ் மணியன், கோவில் இடங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு பட்டா வாழங்கப்படும் என்கிறார். சட்டம் தெளிவாக இருக்கிறது. கோவில் இடங்களை யாராலும் பராதீனம் செய்ய முடியாது. 500 ஏக்கரில் மணியன் ஊர் பக்கத்தில் சசிகலா நிலம் இருக்கிறது. அதை வேண்டுமானாலும் ஏழை விவசாயிகளுக்கு பட்டா போட்டு கொடுங்களேன். நான் வேண்டுமானாலும் விவசாயிகளை அழைத்து வருகிறேன்".          

 

சார்ந்த செய்திகள்