தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் நடிகை குஷ்புவை ஆதரித்து திறந்தவெளி வாகனத்தில் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இன்று (29/03/2021) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது. "திரைத்துறையைப் போன்று அரசியலிலும் நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் குஷ்பு. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என நினைக்கும் கட்சி தி.மு.க. பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்தது குறித்து தவறான அவதூறுகள் பரப்பப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு விரைவாக நன்மைகள் கிடைக்கவும், தமிழ்நாடு வளர்ச்சி பெறவும் பா.ஜ.க.வோடு கூட்டணி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சாலை வசதிக்காக மத்திய அரசு ரூபாய் 1 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. அ.தி.மு.க. தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்களை விமர்சிப்பதையே ஸ்டாலின் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
மத்திய அரசுடன் இணக்கமான சூழல் இருந்தால்தான், மாநில வளர்ச்சிக்குத் தேவையான நிதி கிடைக்கும். ஒரே நேரத்தில் ரூபாய் 62,000 கோடி மதிப்பிலான மெட்ரோ ரயில் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் ரூபாய் 62,000 கோடிக்கு அடிக்கல் நாட்டப்பட்டதாக இதற்கு முன் வரலாறு இல்லை. இதே போன்ற திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் ஏதும் கொண்டு வரப்பட்டதா? தி.மு.க. ஆட்சியில் சென்னை மக்களுக்கும் எதுவும் செய்யவில்லை, சென்னையின் வளர்ச்சிக்காகவும் எதுவும் செய்யவில்லை" இவ்வாறு முதல்வர் பேசினார்.