16 ஆவது ஐபிஎல் போட்டியில் சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், மறுநாள் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து களத்தில் இறங்கிய சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 171 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. வெற்றியின் மூலம் சென்னை அணி 5 ஆவது முறையாக கோப்பையை வென்றது.
14 ஐபிஎல் சீசன்களில் விளையாடியுள்ள சென்னை அணி 12 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதில் தோனி தலைமையில் 10 முறை இறுதிப் போட்டிக்குச் சென்று நேற்றுடன் 5 முறை கோப்பையையும் கைப்பற்றியுள்ளது. ஐபிஎல் தொடரில் 250 போட்டிகள் விளையாடிய வீரர் என்ற பெருமையையும் தோனி பெற்றுள்ளார். அதில் 349 பவுண்டரிகளுடனும் 239 சிக்ஸர்களுடனும் மொத்தமாக 5,082 ரன்களைக் குவித்துள்ளார். தோனிக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தோனி அரசியலுக்கு வர வேண்டும் என பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்த்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த அவர், தோனி அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் அவர் அரசியலுக்கு வரவேண்டும். பாஜகவின் தேசிய துணைத் தலைவர் ஜெய்பாண்டாவின் என்.சி.சி. ஆய்வுக் குழுவில் தோனியுடன் தான் பணியாற்றியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த அவரது பதிவு, “தோனி ஐபிஎல்லில் இன்னும் ஒரு வருடம் விளையாடலாம் என்று கேள்விப்பட்டதில் பெரும்பாலான மக்களைப் போலவே, நானும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனாலும் அவர் தனது அரசியல் களத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். நான் அவருடன் ஜெய் பாண்டா தலைமையிலான என்சிசி மறு ஆய்வுக் குழுவில் பணியாற்றியுள்ளேன். அப்போது அவரது சுறுசுறுப்பான செயல்பாடுகள், களத்தில் அவர் மேற்கொள்ளும் செயல்பாடுகளைப் போலவே இருந்தது. அவர் குழுவினருக்கு ஒத்துழைப்பவராகவும், பணிவாகவும் புதுமையான முயற்சிகளைச் செய்வதில் இன்னும் உறுதியானவராகவும் இருந்தார். அவர் ஒரு வெளிப்படையான எதிர்காலத் தலைவர்” எனக் கூறியுள்ளார்.
தோனி 2017 ஆம் ஆண்டு இந்திய அணியில் தனது கேப்டன் பதவியை துறந்ததில் இருந்து அவர் அரசியலுக்குள் வருவார் என பல்வேறு தரப்புகளில் இருந்தும் கூறப்பட்டது. ஆனால் கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கிய தோனி 2019 ஆம் ஆண்டு ராணுவத்தில் இணைந்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 2020 ஆம் ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தொடர்ந்து தற்போது வரை ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். தற்போது தோனியின் அரசியல் விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்த்ராவின் ட்வீட் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.