Skip to main content

"இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே தெரிவிக்கவும்" - கோவிஷீல்ட் பயனர்களுக்கு இந்திய அரசு வேண்டுகோள்!

Published on 19/05/2021 | Edited on 19/05/2021

 

covishield

 

இந்தியாவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவருகின்றன. இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுவந்த நிலையில், கோவிஷீல்ட் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் 10 லட்சம் பேரில் 0.61 பேருக்கு இரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்படுவதாக நோய்த் தடுப்புக்குப் பிந்தைய பக்கவிளைவுகளுக்கான தேசிய ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. 

 

இதனையடுத்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், கோவிஷீல்ட் தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டவர்களுக்கு குறிப்பிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால், அது இரத்தம் உறைதலுக்கான அறிகுறியாக இருக்கலாம் என்றும், அவ்வாறான அறிகுறிகள் ஏற்பட்டால் எங்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களோ அந்த மையத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும், சுகாதாரத்துறை அமைச்சகம் கோவிஷீல்ட் தடுப்பூசி எடுத்துக்கொண்ட இருபது நாட்களுக்குள் கீழ்கண்ட அறிகுறிகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளது. 

 

மத்திய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ள அறிகுறிகள்:  

 

1. மூச்சுத் திணறல்


2. மார்பில் வலி


3. கைகால்களில் வலி / கைகால்களை அழுத்துவதில் வலி அல்லது கைகால்களில் வீக்கம்


4. தடுப்பூசி செலுத்திய இடத்திற்கு அப்பால் சிவப்பு புள்ளிகள் தோன்றுவது. தோலில் சிராய்ப்பு ஏற்படுவது.

5. வாந்தியுடன் கூடிய அல்லது வாந்தி இல்லாமல் தொடர் வயிற்று வலி.


6. இதற்கு முன்பு இல்லாமல், அதாவது முதன்முறையாக வலிப்பு ஏற்படுதல் (வலிப்பு வாந்தியுடனோ, வாந்தி இல்லாமலோ ஏற்படலாம்)


7. இதற்கு முன்பு ஒற்றைத் தலைவலி அல்லது நாள்பட்ட தலைவலி ஏற்படாத நிலையில், தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு வாந்தியுடனோ அல்லது வாந்தி இன்றியோ தொடர்ச்சியான தலைவலி ஏற்படுதல்.

 
8. கை, கால்களோ அல்லது முகம் உள்ளிட்ட உடலின் பகுதியும் பலவீனமடைதல் அல்லது முடக்கமடைதல்

 
9.  எந்தவொரு சரியான காரணமுமின்றி தொடர்ந்து வாந்தி எடுத்தல்.

10. மங்கலான பார்வை அல்லது கண்களில் வலி அல்லது இரட்டை பார்வை இருப்பது

11. மன நிலையில் மாற்றம் அல்லது குழப்பம் அல்லது மனச்சோர்வின் நிலை


12. தடுப்பூசி எடுத்துக்கொண்டவருக்கு, கவலையளிக்கும் விதத்திலோ, அல்லது அவரது குடும்பத்தினருக்கு கவலையளிக்கும் விதத்திலோ ஏதேனும் அறிகுறி ஏற்படுதல். 


இந்த அறிகுறிகள் எதாவது ஏற்பட்டால், கோவிஷீல்ட் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள், உடனே தங்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மையத்திடம் தெரிவிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்