Skip to main content

"தடுப்பூசி இருப்பு குறித்த தரவுகளை வெளியிடக்கூடாது" - மாநிலங்களை அறிவுறுத்திய ஒன்றிய அரசு!

Published on 10/06/2021 | Edited on 10/06/2021

 

covid 19 vaccine

 

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது. வரும் 21ஆம் தேதி மாநிலங்களுக்குத் தாங்களே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து தரப்போவதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. இந்தநிலையில், ஒன்றிய அரசு, தடுப்பூசி இருப்பு குறித்த விவரங்களை மாநிலங்கள் பகிரக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

 

இதுதொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம், தேசிய சுகாதார மிஷனின் மாநிலத் திட்ட இயக்குநர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "தடுப்பூசி இருப்பு மற்றும் தடுப்பூசிகள் சேமித்துவைக்கப்பட்டுள்ள வெப்ப நிலை குறித்து மின்னணு தடுப்பூசி நுண்ணறிவு வலையமைப்பு (eVIN) உருவாக்கும்  தரவுகளும் மற்றும் பகுப்பாய்வும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு சொந்தமானது. அவற்றை வேறு எந்த நிறுவனங்களுடனோ, ஊடகத்துடனோ, பொதுமக்கள் மன்றங்களிலோ அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் பகிர்ந்துகொள்ளக் கூடாது" என கூறப்பட்டுள்ளது.

 

மேலும் அந்தக் கடிதத்தில், தடுப்பூசி இருப்பு மற்றும் அது சேமித்து வைக்கப்பட்டுள்ள வெப்பநிலை குறித்த தரவுகள் மிகவும் முக்கியமானது என்றும், திட்டத்தின் முன்னேற்றத்திற்காக மட்டுமே அதனைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள், தடுப்பூசி இருப்பு குறித்த தகவல்களை அவ்வப்போது வெளியிட்டுவரும் நிலையில் மாநிலங்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்