Skip to main content

“இப்படிப்பட்ட ஒருவரையா கடவுள் அனுப்பி வைத்தார்?” - ராகுல்காந்தி விமர்சனம்

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
Rahul Gandhi Criticizes pm modi

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டமாக 430 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, சாதாரண மனிதர்களைப் போல நான் பயலாஜிகலாக பிறக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறிய கருத்து சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி வந்தது. இது குறித்து பிரதமர் மோடி அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த போது, “நான் பயலாஜிகலாக பிறக்கவில்லை என்று நம்புகிறேன். என் தாயார் உயிரோடு இருக்கும்வரை, இந்த உலகிற்கு என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந்தேன். 

ஆனால், என் தாயாரின் மரணத்திற்கு பிறகு, நான் பலவற்றை சிந்தித்துப் பார்த்தேன். இப்போது நான் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். சிலர் இதற்கு எதிராக பேசலாம். ஆனால், நான் இதை முழுமனதாக நம்புகிறேன். என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. நான் மனிதப்பிறவி அல்ல. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்தப் பூமிக்கு அனுப்பியிருக்கிறார்” என்று தெரிவித்தார். இதற்குப் பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.

அந்த வகையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ இந்தியப் பிரதமர் ஒரு நேர்காணலின் போது, நான் பயலாஜிகல் ரீதியாக பிறக்கவில்லை, கடவுள் என்னை ஒரு பணிக்காக அனுப்பியுள்ளார் என்று வெளிப்படையாகக் கூறுகிறார். ஒரு சாதாரண நபர் இதையே சொன்னால், அவர்கள் நேராக மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டிருப்பார்.

கொரோனா பாதிப்பின் போது கடவுளால் அனுப்பப்பட்டவர் என்ன செய்து கொண்டிருந்தார். கோவிட் தொற்றுநோய்களின் போது இந்தியர்கள் கங்கை கடற்கரையில் இறந்து கிடந்தார்கள். ஆயிரக்கணக்கானோர், மருத்துவமனைகளுக்கு முன்னால் தங்கள் இறுதி மூச்சை எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது பிரதமர், இல்லை கடவுளால் அனுப்பபட்டவர் என்ன செய்தார்? கடவுளால் அனுப்பப்பட்டவர், உங்கள் மொபைல் போன் விளக்குகளை எரிய விடச் சொன்னார். இப்படிப்பட்ட ஒருவரையா கடவுள் அனுப்பி வைத்துள்ளார்?” என்று கூறினார்.  

சார்ந்த செய்திகள்

 

Next Story

விரைவில் அமலுக்கு வரும் புதிய திட்டம்; பிரதமருக்கு மம்தா பரபரப்பு கடிதம்

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Mamata letter to Prime Minister for new criminal laws

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்தியச் சாட்சியங்கள் சட்டம் ஆகிய 3 குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த சட்டங்கள்தான் இப்போது வரை அமலில் இருந்தன. இதற்கிடையே, இவற்றுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியது. அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் 3 குற்றவியல் மசோதாக்கள் இந்தியில் மாற்றப்பட்டு தாக்கல் செய்யப்பட்டன.

அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம் என்பதை ‘பாரதிய நியாய சன்ஹிதா சட்டம்’ எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் என்பதை ‘பாரதிய நாகரிக் சுரக்‌ஷ சன்ஹிதா’ எனவும், இந்திய சாட்சியங்கள் சட்டம் என்பதை ‘பாரதிய சாக்சியா’ எனவும் பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் 3 மசோதாக்களையும் தாக்கல் செய்தார். 

இதையடுத்து, நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளுடன் கூடிய புதிய குற்றவியல் மசோதாக்களை கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி மத்திய உள்துறை அமித்ஷா மீண்டும் தாக்கல் செய்தார். மக்களவையில் 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்த 3 குற்றவியல் மசோதாக்களும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த 3 புதிய குற்றவியல் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி அமலுக்கு வரும் என மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த திட்டத்தை நிறுத்தி வைக்கக் கோரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், ‘உங்களது அரசாங்கம் இந்த மூன்று முக்கியமான மசோதாக்களை ஒருதலைபட்சமாகவும், எந்த விவாதமும் இல்லாமலும் நிறைவேற்றியது. அன்று, கிட்டத்தட்ட 100 மக்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இரு அவைகளின் மொத்தம் 146 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஜனநாயகத்தின் அந்த இருண்ட நேரத்தில் எதேச்சதிகாரமான முறையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. எனவே, இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் தேதியை ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த அணுகுமுறை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு முன்மொழியப்பட்டதை முழுமையாக ஆராய வாய்ப்பளிக்கும். மேலும், குற்றவியல் சட்டங்களை மீண்டும் நாடாளுமனறத்தில் மறு ஆய்வு செய்ய உதவும். எங்கள் வேண்டுகோளை பரிசீலிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். 

Next Story

“அந்த அமைப்பும், பா.ஜ.கவும் நமது கல்வி முறையை ஊடுருவி அழித்து விட்டன” - ராகுல்காந்தி விமர்சனம்

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Rahul Gandhi criticism That organization and BJP have infiltrated and destroyed our education system

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், நீட் தேர்வில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று (20-06-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸால் கல்வி முறை கைப்பற்றப்பட்டதே காகிதக் கசிவுக்குக் காரணம். இது மாறாத வரை, காகித கசிவுகள் தொடரும். இது தேச விரோத செயல். ரஷ்யா - உக்ரைன் போரை மோடி தடுத்து நிறுத்தினார் என்று கூறப்படுகிறது. ஆனால் சில காரணங்களால், நரேந்திர மோடியால் இந்தியாவில் காகித கசிவை நிறுத்த முடியவில்லை. அப்படியில்லை என்றால் இந்தியாவில் காகித கசிவை அவர் நிறுத்த விரும்பவில்லை. இந்த பிரச்சனையை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம்.

மற்ற அரசு அமைப்புகளைப் போலக் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் பா.ஜ.க கைப்பற்றியதால் இது நடக்கிறது. நமது துணைவேந்தர்கள் தகுதியின் அடிப்படையில் எடுக்கப்படாமல், ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களைத் தேர்ந்தெடுக்கப்படுவதால், இது போன்ற பிரச்சனை வருகிறது. மேலும் இந்த அமைப்பும், பா.ஜ.கவும் நமது கல்வி முறையை ஊடுருவி அழித்து விட்டன. பணமதிப்பிழப்பு மூலம் பொருளாதாரத்திற்கு நரேந்திர மோடி செய்ததை, தற்போது கல்வி முறையிலும் செய்துள்ளார். 

இது நடப்பதற்கும், நீங்கள் பாதிக்கப்படுவதற்கும் காரணம், ஒரு சுதந்திரமான கல்வி முறை தகர்க்கப்பட்டதால் தான். இங்குக் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்கள் தண்டிக்கப்படுவது மிகவும் முக்கியம். இப்போது, ​​நாம் ஒரு பேரழிவில் அமர்ந்திருக்கிறோம் என்பதையும், முடமான ஒரு அரசாங்கம் எங்களிடம் உள்ளது என்பதையும் மக்கள் தெளிவுபடுத்துகிறார்கள். இது ஒரு ஆழமான தேசிய நெருக்கடி. அரசிடம் இருந்து பதிலளிக்கும் திறனைக் கூட நான் காணவில்லை.” என்று கூறினார்.