Skip to main content

‘ஓமிக்ரான்’ வகை கரோனா - ராகுல் காந்தி எச்சரிக்கை!

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

rahul gandhi

 

தென்னாப்பிரிக்கா நாட்டில் 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளுடன் பி.1.1.529 என்ற புதிய கரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸின் ஸ்பைக் ப்ரோட்டினில் பல பிறழ்வுகள் இருப்பதால், இது வேகமாக பரவலாம் என்றும், தடுப்பூசிகள் அளிக்கும் நோயெதிர்ப்பு சக்தியை ஊடுருவலாம் என்றும் அஞ்சப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம், இந்தப் புதிய வகை கரோனாவைக் கவலைக்குரியது என வகைப்படுத்தியுள்ளதுடன், இந்தப் புதிய வகை கரோனாவிற்கு ‘ஓமிக்ரான்’ என பெயரிட்டுள்ளது.

 

இந்தநிலையில் ராகுல் காந்தி, கோ-வின் மற்றும் ஆங்கில ஊடகத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசி தரவுகளைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஓமிக்ரான் கரோனா குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

ராகுல் காந்தி பதிவிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, 31.19 சதவீத மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டுள்ளனர். கடந்த வாரத்தில் தினமும் 6.8 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 60 சதவீதம் பேருக்கு இரண்டு டோஸ்களையும் செலுத்த ஒருநாளைக்கு 23. 3 மில்லியன் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

 

இந்தப் புள்ளிவிவரத்தைப் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "புதிய திரிபு தீவிரமான அச்சுறுத்தல். நமது நாட்டு மக்களுக்குத் தடுப்பூசி பாதுகாப்பை வழங்குவதில் இந்திய அரசு தீவிரம் காட்ட வேண்டிய நேரம். மோசமான தடுப்பூசி புள்ளிவிவரங்களை ஒரு மனிதனின் புகைப்படத்திற்குப் பின்னால் நீண்ட காலத்திற்கு ஒளித்து வைத்திருக்க முடியாது"  என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்