Skip to main content

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி: கை விரிக்கும் மாநிலங்கள்!

Published on 30/04/2021 | Edited on 30/04/2021

 

covid vaccine

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ள நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், மே ஒன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தலாம் என மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுமதி வழங்கியது. தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான முன்பதிவு நேற்று முன்தினம் (28.04.2021) தொடங்கிய நிலையில், ஏராளமானோர் தடுப்பூசிக்கு செலுத்திக்கொள்ள தங்கள் பெயரைப் பதிவுசெய்துகொண்டனர்.

 

இந்தநிலையில், தடுப்பூசி தட்டுப்பாட்டால், சில மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை தடுப்பூசி செலுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குஜராத்  மாநில முதல்வர், 2 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகளுக்கும், 50 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கும் ஆர்டர் அளித்திருப்பதாகவும், அரசு தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்த பிறகு, அதாவது அடுத்த 15 நாட்களில் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

“தடுப்பூசிக்கு ஆர்டர் அளித்தாலும், மே இறுதி அல்லது ஜூனில்தான் தடுப்பூசி தருவோம் என தடுப்பூசி நிறுவனங்கள் கூறுகின்றன. இந்த ஒருமாத இடைவெளி ஆபத்தானது. உயிர்களைக் காக்க தடுப்பூசி தேவை. 45 வயது மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இரண்டாது டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டியது நிலுவையில் இருக்கையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எப்படி தடுப்பூசி செலுத்த முடியும்? எங்களிடம் மூன்று முதல் நான்கு லட்சம் தடுப்பூசிகள்தான் இருக்கிறது. இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்” என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

 

கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கும் ஆர்டர் கொடுத்திருந்தாலும், மே 1 அன்று தடுப்பூசிகளைத் தர முடியாது என இரண்டு தடுப்பூசி உற்பத்தியாளர்களும் தெரிவிப்பதால், மே ஒன்றாம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு தடுப்பூசி செலுத்த வாய்ப்பில்லை என மத்தியப் பிரதேச முதல்வர் தெரிவித்துள்ளார்.

 

“நாங்கள் சீரம் நிறுவனத்திடம் ஒரு கோடி தடுப்பூசி ஆர்டர் கொடுத்துள்ளோம். ஆனால் அதனை, நாளை எங்களுக்கு அளிக்க அவர்கள் தயாராக இல்லை. எனவே, நாளை தங்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என எண்ணத்தில் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டாம் என மக்களிடம் குறிப்பாக, 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்” என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்

 

“தமிழகத்தில் 18 வயதானவர்களுக்கு நாளை (01.05.2021) கரோனா தடுப்பூசி போடுவது சந்தேகமே. பற்றாக்குறையால் திட்டமிட்டபடி 18 வயதானவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 1.5 கோடி தடுப்பூசிகள் ஆர்டர் கொடுத்திருந்தாலும், அவை எப்போது வந்து சேரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. தடுப்பூசிகள் வருகை குறித்த தகவல் கிடைக்கப் பெற்ற பின்தான் தடுப்பூசி முகாம்கள் குறித்து முடிவு செய்யப்படும்” என தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

இதனால் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மூன்றாம் கட்ட தடுப்பூசி திட்டம் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்