Skip to main content

“சமூகநீதியை நிலைநாட்ட அடித்தளம் அமைத்த  பீகார் முதல்வருக்கு பாராட்டுகள்” - ராமதாஸ் 

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

“Kudos to the Chief Minister of Bihar for laying the foundation for social justice” - Ramadoss

 

“சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி  அதன் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது பீகார் மாநில அரசு. இதன் மூலம் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு  ஆக்கப்பூர்வமான வகையில் வழிகாட்டியிருக்கிறார் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார். இதற்காக அவருக்கு எனது பாராட்டுகள்” என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூகவலைத்தளப் பக்கத்தில், “சாத்தியமே இல்லாதது என்பது போன்ற மாயை ஏற்படுத்தப்பட்டு வந்த  சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை, வெற்றிகரமாக நடத்தி  அதன் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது பீகார் மாநில அரசு. இதன் மூலம் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு ஆக்கப்பூர்வமான வகையில் வழிகாட்டியிருக்கிறார் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார். இதற்காக அவருக்கு எனது பாராட்டுகள்.  

 

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது சமூகநீதியை நிலைநிறுத்துவதற்கான அடித்தளம் மட்டும் தான். அந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஒவ்வொரு சமூகத்திற்கும் அதன் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் போது தான் இந்த சமூகநீதிப் பயணம் அதன் இலக்கை எட்டும். அதற்கான நடவடிக்கைகளை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் விரைவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

பீகாரில் ஏற்றப்பட்டுள்ள சமூகநீதி விளக்கு வெகு விரைவில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும்  ஒளி கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. சமூகநீதி ஒளி வழங்குவதில் ஆர்வமுள்ள அனைத்து மாநிலங்களும், குறிப்பாக தமிழ்நாடு அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

 

2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்னும் மேற்கொள்ளப்படாத நிலையில், மத்திய அரசும் அதை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்