Skip to main content

திகார் சிறையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார்!

Published on 17/09/2019 | Edited on 17/09/2019

சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில், கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு அக்டோபர் 1- ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டணி ஆட்சியில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த டி.கே.சிவக்குமார் வீடுகளில், கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையின் போது டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான டெல்லி இல்லத்தில் இருந்து கணக்கில் வராத ரூபாய் 8.59 கோடி பணம் சிக்கியது.


இதுகுறித்து அமலாக்கத்துறையினர், டி.கே.சிவக்குமார் மீது சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கை பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு டி.கே.சிவக்குமார் கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் ஆஜரானார். அவரிடம் 4 நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை முடிவில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டி.கே.சிவக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதியிடம் அமலாக்கத்துறை கோரியது. இதனையடுத்து முதலில் 9 நாட்கள், பிறகு மீண்டும் 4 நாட்கள் என மொத்தம் 13 நாட்கள்  காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்தது.  

karnataka former minister tk shivakumar 14 days tihar jail cbi court order

இதையடுத்து இன்று மாலையுடன் போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில் டி.கே.சிவக்குமாரை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் அமலாக்கத்துறை அதிகாரிகள். அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் டி.கே.சிவக்குமாரின் நீதிமன்ற காவலில் 14 நாட்கள் ( அக்.1-ம் வரை) திகார் சிறையில் அடைக்க நீதிபதி அஜய் குமார் உத்தரவிட்டார். இதையடுத்து டி.கே.சிவக்குமார் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக  டி.கே.சிவக்குமார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை கோரியதையடுத்து நீதிபதிகள் , அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என சான்று அளித்தால், அவரை முதலில் மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
 

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது, காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்