கரோனா வைரஸ் இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் படிப்படியாக சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. இதற்கிடையில் வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு ஜூன் 1ம் தேதி முதல் ஏசி அல்லாத 200 ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இதற்கிடையில் நேற்று ஜூன் 1 தேதி முதல் இயக்கப்படவுள்ள 200 ரயில்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த 200 ரயில்களுக்கான இணையதள டிக்கெட் முன்பதிவு மே 21 முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை முதல் 1.70 லட்சம் பொதுசேவை மையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என்றும், நாடு முழுவதும் பல்வேறு ரயில் நிலைய கவுன்டர்களில் 2 அல்லது 3 நாட்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடு இயல்பு நிலைக்கு திரும்ப விரைவில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்றும், ரயில்வே நிலையங்களில் கடைகளை திறக்கவும் விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.