Skip to main content

மனைவி செல்போனில் நீண்ட பேசியதால் ஆத்திரம்; கணவனின் வெறிச்செயல்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Husband's frenzy on Anger because the wife talked too long on the cell phone

கர்நாடகா மாநிலம், பெங்களூர் நகரைச் சேர்ந்தவர் நவீன். இவருக்கு பிந்து என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். நவீனின் மனைவி பிந்து, எச்.எஸ்.ஆர் லே- அவுட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். 

இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று, பிந்து செல்போனில் அலுவலக வேலை தொடர்பாக தனது ஆண் ஊழியருடன் பேசிக் கொண்டிருந்தார். பிந்து நீண்ட நேரம் செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த நவீன், பிந்துவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாறியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த நவீன், வீட்டில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து பிந்துவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த பிந்து, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிருக்கு போராடி வந்துள்ளார். பிந்துவின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர், நவீன் வீட்டுக்கு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிந்துவை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புட்டேனஹள்ளி போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், பிந்து பணி முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு, அலுவலக வேலை தொடர்பாக தனது ஆண் ஊழியரை வீட்டில் அழைத்து வந்து பேசி வந்துள்ளார். இதில், பிந்துவின் நடத்தை மீது சந்தேகமடைந்த நவீன், அடிக்கடி பிந்துவிடம் வாக்குவாதம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவம் நடந்த அன்று அந்த ஆண் ஊழியருடன் செல்போனில் நீண்ட நேரம் பேசியதால் ஆத்திரத்தில் கத்திரிக்கோலால் பிந்துவை குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், நவீனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

சார்ந்த செய்திகள்

Next Story

தாயோடு நீச்சல் பழகிய குழந்தைகள்; 3 பேர் உயிரிழப்பு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Children who swim with their mother; 3 people lost their lives

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40.) இவரது மனைவி பவித்ரா (30). இத்தம்பதியினரின் மகன் ரித்திக் (9),மகள் நித்திகா ஸ்ரீ (7). தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். குளிக்கப்போனவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடத்துவங்கினர். அப்போது சிறுமி நித்திகாஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதல் கட்டமாகக் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

2000-க்கும் மேல் ஆபாச வீடியோக்கள்? பென் டிரைவ் முழுவதும் பெண்கள்; சிக்கிய பாஜக கூட்டணி வேட்பாளர்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Controversial BJP alliance candidate and devegowda grandson for Over 2000 videos?

கர்நாடகா மாநிலத்தில், நடைபெறும் மக்களவைத் தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி, பா.ஜ.கவுடன் கூட்டணியில் இருக்கிறது. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில், பாஜக 25 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 3 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா அவரது மகன்கள் ரேவண்ணா, குமாரசாமி ஆகியோரைத் தொடர்ந்து தேவகவுடா பேரன்கள் நிகில் குமாரசாமி, பிரஜ்வால் ரேவண்ணா ஆகியோரும் தீவிர அரசியலில் உள்ளனர். இவர்களில், ஹாசன் தொகுதியில் எம்.பியாக உள்ள பிரஜ்வால் ரேவண்ணா, இந்த முறை பா.ஜ.க கூட்டணியில் போட்டியிட்டார். இவர், தேவகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் ஹெச்.டி.ரேவண்ணாவின் மூத்த மகனும் ஆவார். 

இதனால், இவர் போட்டியிடும் தொகுதியில் பா.ஜ.க கூட்டணி சார்பில் தீவிர பரப்புரை நடைபெற்று முதற்கட்டமாக 14 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. ஆனால், தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு, பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 300-க்கும் அதிகமான பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் ஹாசன் தொகுதி முழுவதும் காட்டுத் தீயாக பரவியது. அதுவும், ஹாசன் தொகுதி வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு முதல் நாளில் இருந்தே இந்த வீடியோக்கள் அத்தொகுதி முழுவதும் வாட்ஸ் அப்களில் வலம் வந்தன. இப்படிப்பட்ட நபருக்கா நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்? என்ற வாசகத்துடன் இந்த ஆபாச வீடியோக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதில், அரசுத் துறையைச் சேர்ந்த சில பெண் அதிகாரிகளும் ஆபாச வீடியோவில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இது, கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து, சமூக ஊடகங்களிலும் பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோ பரவ இந்தியா முழுவதும் இந்த சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனிடையே, அம்மாநில மகளிர் குழுவின் தலைவி நாகலட்சுமி சவுத்ரி, அந்த வீடியோ தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் சித்தராமையாவுக்குக் கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா தன் எக்ஸ் பக்கத்தில், ‘பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோ குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க அரசு முடிவு செய்திருக்கிறது. அந்த வீடியோ கிளிப்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. கர்நாடக மாநில மகளிர் ஆணையம் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டது. அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, கர்நாடகவின் ஹோலநரசிப்பூர் காவல் நிலையத்தில் 4 பிரிவின் கீழ் பிரஜ்வல் ரேவண்ணாவின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஜே.டி.எஸ் கட்சியின் ஹாசன் வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது என கர்நாடக முதல்வர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. ஆபாச வீடியோ விவகாரம் மாநிலம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பெங்களூரில் இருந்து ஜெர்மனுக்கு தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த கையோடு பிரஜ்வல் ரேவண்ணா புறப்பட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆதரவாளர்கள் அந்த ஆபாச வீடியோக்கள் சித்தரிக்கப்பட்டது என கூறி வருகின்றனர். பதிலுக்கு, பிரஜ்வல் ரேவண்ணாவும் தனது புகழைக் கெடுக்கும் நோக்கில் ஆபாச வீடியோக்கள் பரப்பப்படுவதாக புகார் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Controversial BJP alliance candidate and devegowda grandson for Over 2000 videos?

ஆனால், பாஜக தரப்பு பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை என கூறிவருவது சந்தேகத்தை கிளப்புவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் சார்பில் ஆபாச வீடியோ விவகாரத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய வேண்டும் என போராட்டமும் நடைபெற்று வருகிறது. முன்னதாக பென் டிரைவ் மூலமே பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச படம் பரப்பப் பட்டதாக தகவல் சொல்லப்படுகிறது. ஆனால், விரிவான விசாரணைக்கு பிறகே முழுப் பின்னணி தெரிய வரும். அந்த பென் டிரைவில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. இன்னும் வட கர்நாடகாவில் மக்களவைத் தேர்தல் முடியாத சூழலில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, பா.ஜ.கவைச் சேர்ந்தவர்களும், கூட்டணியில் உள்ளவர்களும் ஆபாச வீடியோக்களில் சிக்குவது குறிப்பிடத்தக்கது.