
குஜராத் கல்வி மற்றும் சட்ட அமைச்சர் பூபேந்திரசின் சுதஸ்மாவின் தேர்தல் வெற்றி செல்லாது எனக் குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு, குஜராத்தின் டோல்கா தொகுதியில் போட்டியிட்டு 327 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் பூபேந்திரசின் சுதஸ்மா, காங்கிரஸ் வேட்பாளர் அஷ்வின் ரதோடை வீழ்த்தினார். அதன்பின் குஜராத்தின் சட்டத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார். இந்நிலையில் இந்த வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்துள்ளதாகக் காங்கிரஸ் வேட்பாளர் அஷ்வின் ரதோட் 2018, ஜனவரியில் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தேர்தலில் 429 தபால் ஓட்டுக்களை, விதிகளை மீறித் தேர்தல் அதிகாரி செல்லாது என்று அறிவித்ததாக அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில், பூபேந்திரசின் சுதஸ்மாவின் வெற்றி செல்லாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இதனையடுத்து அவர் பதவி இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. குஜராத் மாநில பாஜகவின் மூத்த தலைவராகவும், அரசின் மூத்த அமைச்சராகவும் இருந்த சுதஸ்தமாவுக்கு எதிரான இந்தத் தீர்ப்பு அம்மாநில அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.