Skip to main content

“இந்தியாவை பெருமைப்படுத்தும் வீரர்களின் கண்ணியத்தைக் காப்பது நாட்டின் கடமை” - நீரஜ் சோப்ரா

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

 gold medalist Neeraj Chopra has expressed his support for the struggle of wrestlers

 

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார்.

 

இதையடுத்து இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கலைத்துவிட்டு புதிய நிர்வாகத்தை உருவாக்க வேண்டும், பாஜக எம்.பி பிரிஜ்பூஷன் சரண் சிங் பதவி விலக வேண்டும், அதோடு அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் ஓயாது என்று கூறி பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் கூட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜனவரி மாதம்  3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதன்பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 

 

மேலும் மல்யுத்த வீரர்களின் கோரிக்கையை ஏற்று பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை விசாரிக்க குத்துச்சண்டை வீராங்கனை  மேரி கோம் தலைமையில் 5 பேர் அடங்கிய குழு ஒன்றை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து  இந்த குழுவானது விசாரணை செய்து அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இந்நிலையில் பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23 ஆம் தேதி முதல் மல்யுத்த வீரர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

 

இந்தப் போராட்டம் தற்போது 8வது நாளை எட்டியுள்ள நிலையில், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீதி வேண்டி தடகள வீரர், வீராங்கனைகள் வீதிகளில் இறங்கிப் போராடுவதைப் பார்க்க வேதனையாக இருக்கிறது. கடுமையாக உழைத்து இந்தியாவை பெருமைப்படுத்தும் வீரர், வீராங்கனைகள் அல்லது வேறு யாராக இருந்தாலும் அவர்களது கண்ணியத்தைக் காப்பது நமது நாட்டின் கடமை. இதுபோல் இனி எப்போதும் நடக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்