Skip to main content

'12 லட்சியம்... 6 நிச்சயம்' மராட்டியத்தை தொடர்ந்து களேபரத்துக்கு தயாராகும் கர்நாடகா..?

Published on 07/12/2019 | Edited on 07/12/2019

கர்நாடக மாநிலத்தில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகளில் டிசம்பர் 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, மாநிலத்தின் 15 தொகுதிகளுக்கு சில தினங்களுக்கு முன்பு இடைத்தேர்தல் நடைபெற்றது. பாஜக குறைந்தபட்சம் 6 இடங்களை கைப்பற்றினால் மட்டுமே ஆட்சியை தக்க வைத்து கொள்ள முடியும். அந்தவகையில், பாஜக கட்சியை பொறுத்தவரை இந்தத் தேர்தல் ஒரு வாழ்வா சாவா போராட்டம் என்றாலும் மிகையில்லை.அதேசமயம், எதிர்கட்சிகளும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தங்களது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. காலியான தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் கர்நாடகத்தின் அரசியல் களம் பரபரப்பாகவே இருந்து வருகிறது.



இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் மொத்தம் 66 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக,தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  வாக்கு எண்ணிக்கை, டிசம்பர் 9 ஆம் தேதி நடத்தப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. 15 தொகுதிகளுக்கு நடைபெற்றுள்ள தேர்தலில், மாநிலத்தில் ஆளும் பாஜக, ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள குறைந்தபட்சம் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சி வோட்டர் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக 12 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும், காங்கிரஸ் 3, மஜத எல்லா தொகுதிகளிலும் தோல்வி அடையும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

சார்ந்த செய்திகள்