Skip to main content

மஜத 2 எம்.எல்.ஏக்களை பாஜகவினர் கடத்திவிட்டனர்: குமாரசாமி குற்றச்சாட்டு

Published on 19/05/2018 | Edited on 19/05/2018


மஜத 2 எம்.எல்.ஏக்களை பாஜகவினர் கடத்திவிட்டனர் என அக்கட்சியின் கர்நாடகா மாநிலத் தலைவர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால், இழுபறி நிலை ஏற்பட்டது. இதையடுத்து பாஜகவும், காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளமும் தனித்தனியாக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரின. ஆனால், ஆளுநர் வஜுபாய் வாலா பாஜகவின் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.

எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக காங்கிரஸ் - மஜத கூட்டாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நள்ளிரவு விசாரிக்கப்பட்டது. இதில் எடியூரப்பா பதவி ஏற்பதற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும் பதவியேற்பு வழக்கு இறுதித்தீர்ப்புக்கு உட்பட்டது என உத்தரவிட்டது. இதைதொடர்ந்து கர்நாடகாவின் 23வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார்.

இதையடுத்து, எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அர்ஜன் குமார் சிக்ரி, இன்று மாலை 4 மணிக்கு இரண்டு கட்சிகளும் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதனிடையே பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளில் உள்ள எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனால், பாஜகவின் குதிரைப் பேரத்தில் இருந்து தங்கள் எம்.எல்.ஏக்களை பாதுகாக்க மஜத மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கடும் பாதுகாப்பாக இருந்து வருகின்றனர். இருப்பினும் மதசார்பற்ற ஜனதாதளத்தை சேர்ந்த 2 எம்.எல்.ஏக்கள் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த மஜத கர்நாடகா மாநிலத் தலைவர் குமாரசாமி,

மஜத 2 எம்.எல்.ஏக்களை பாஜகவினர் கடத்திவிட்டனர். கடத்தப்பட்ட 2 மஜத சட்டமன்ற உறுப்பினர்களும் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது அதற்கான பட்டியலை ஆளுநரிடம் அளித்துள்ளோம். கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளத்திற்கு போதிய பலம் உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்