Skip to main content

‘ராகுல் காந்தியைப் பிரதமராக ஏற்றுக்கொள்வீர்களா?’ - அரவிந்த் கெஜ்ரிவால் பதில்

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
Arvind Kejriwal Answers Would he accept Rahul Gandhi as Prime Minister?

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டமாக 430 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பதற்காக பா.ஜ.க தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. அதே போல், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசை வீழ்த்துவதற்கு, காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட எதிர்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க சார்பில் பிரதமர் வேட்பாளராக பிரதமர் மோடி களமிறங்குகிறார். ஆனால், பல்வேறு கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி சார்பில், இதுவரை பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமல் எதிர்கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வீர்களா என்று ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கேட்கப்பட்டதற்கு அவர் பதிலளித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் அடுத்த பிரதமர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதற்காகவே இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்தை அழித்து விடுவார்கள்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“அந்த அமைப்பும், பா.ஜ.கவும் நமது கல்வி முறையை ஊடுருவி அழித்து விட்டன” - ராகுல்காந்தி விமர்சனம்

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Rahul Gandhi criticism That organization and BJP have infiltrated and destroyed our education system

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், நீட் தேர்வில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று (20-06-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸால் கல்வி முறை கைப்பற்றப்பட்டதே காகிதக் கசிவுக்குக் காரணம். இது மாறாத வரை, காகித கசிவுகள் தொடரும். இது தேச விரோத செயல். ரஷ்யா - உக்ரைன் போரை மோடி தடுத்து நிறுத்தினார் என்று கூறப்படுகிறது. ஆனால் சில காரணங்களால், நரேந்திர மோடியால் இந்தியாவில் காகித கசிவை நிறுத்த முடியவில்லை. அப்படியில்லை என்றால் இந்தியாவில் காகித கசிவை அவர் நிறுத்த விரும்பவில்லை. இந்த பிரச்சனையை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம்.

மற்ற அரசு அமைப்புகளைப் போலக் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் பா.ஜ.க கைப்பற்றியதால் இது நடக்கிறது. நமது துணைவேந்தர்கள் தகுதியின் அடிப்படையில் எடுக்கப்படாமல், ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களைத் தேர்ந்தெடுக்கப்படுவதால், இது போன்ற பிரச்சனை வருகிறது. மேலும் இந்த அமைப்பும், பா.ஜ.கவும் நமது கல்வி முறையை ஊடுருவி அழித்து விட்டன. பணமதிப்பிழப்பு மூலம் பொருளாதாரத்திற்கு நரேந்திர மோடி செய்ததை, தற்போது கல்வி முறையிலும் செய்துள்ளார். 

இது நடப்பதற்கும், நீங்கள் பாதிக்கப்படுவதற்கும் காரணம், ஒரு சுதந்திரமான கல்வி முறை தகர்க்கப்பட்டதால் தான். இங்குக் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்கள் தண்டிக்கப்படுவது மிகவும் முக்கியம். இப்போது, ​​நாம் ஒரு பேரழிவில் அமர்ந்திருக்கிறோம் என்பதையும், முடமான ஒரு அரசாங்கம் எங்களிடம் உள்ளது என்பதையும் மக்கள் தெளிவுபடுத்துகிறார்கள். இது ஒரு ஆழமான தேசிய நெருக்கடி. அரசிடம் இருந்து பதிலளிக்கும் திறனைக் கூட நான் காணவில்லை.” என்று கூறினார். 

Next Story

ராகுல் காந்தி பிறந்த நாள்; நலத்திட்ட உதவிகளை வழங்கிய காங்கிரஸ் 

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Congress has provided welfare assistance on the occasion of Rahul Gandhi's birthday

திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராகுல்காந்தி எம்.பி பிறந்தநாள் விழா மாவட்ட தலைவர் திருச்சி கலை தலைமையில் வடக்கு மாவட்டம் முழுவதும் கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. மண்ணச்சநல்லூர், துறையூர், லால்குடி, முசிறி, தா.பேட்டை, உப்பிலியபுரம், தொட்டியம். புள்ளம்பாடி உள்ளிட்ட 11 வட்டாரங்களில் கொடியேற்றி, இனிப்பு வழங்கப்பட்டது. சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட்டில் பஸ் பயணிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள  பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.


தொடர்ந்து பட்டத்தம்மாள் தெருவில் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மோகனாம்பாள், மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் பிரமிளா, மகளிர் அணி சுதா, வட்டார தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட பொதுக்குழு அப்துல் காதர், சேவாதளம் தெற்கு மாவட்ட தலைவி லட்சுமி, சேவா தளம் வடக்கு மாவட்ட தலைவி மேரி ஆஷா, வட்டார பொறுப்பாளர் செல்வம், மண்ணச்சநல்லூர் நகர பொறுப்பாளர் பாட்ஷா, நிர்வாகிகள் செல்வராஜ், மாசிலாமணி, பழனியாண்டி, கணேசன், மூர்த்தி, சந்தியாகு அலெக்ஸாண்டர் உட்பட திருச்சி வடக்கு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். 

அனைத்து நிகழ்ச்சிகளிலும் மாவட்ட தலைவர் திருச்சி கலை கலந்து கொண்டு கட்சிகொடி ஏற்றி இனிப்பு வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.