Skip to main content

இந்தியர்களை நிம்மதியடைய வைத்துள்ள வந்தே பாரத் மிஷன்...

Published on 08/05/2020 | Edited on 08/05/2020

 

ande barath mission evacuated

 

'வந்தே பாரத்' திட்டத்தின்படி வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்கள் மீண்டும் இந்தியா திரும்பி வருகின்றனர். 

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் சுமார் 15,000 இந்தியர்களை மீண்டும் இந்தியா அழைத்துவருவதற்காக வியாழக்கிழமை தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின்படி, அடுத்த ஒரு வாரத்தில் 64 விமானங்களும் மூன்று கடற்படைக் கப்பல்களும் பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, மலேசியா, குவைத் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டுவர இயக்கப்பட உள்ளது. இதில் முதல் விமானம் நேற்று கேரளா வந்தடைந்தத்த்து. 


கேரளாவின் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் வியாழக்கிழமை இரவு 10:20 மணிக்கு அபுதாபியிலிருந்து நான்கு குழந்தைகள் உட்பட 177 பயணிகளுடன் இத்திட்டத்தின் முதல் விமானம் தரையிறங்கியது. துபாயிலிருந்து வந்த இரண்டாவது விமானம் கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் 177 பயணிகளுடன் தரையிறங்கியது. இந்தப் பயணிகள் அனைவரும் மருத்துவச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளனர். இந்நிலையில் இன்று காலை 234 பயணிகளுடன் சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா விமானம் டெல்லி வந்தடைந்தது. அதேபோல இந்தத் திட்டத்தின்படி வங்கதேசத்தில் சிக்கியுள்ள 186 இந்திய மாணவர்கள் இன்று இந்தியா அழைத்துவரப்பட்ட உள்ளனர்.

மேலும் அடுத்த ஒரு வாரத்தில் இந்த மீட்புப் பணிகளில் ஈடுபட உள்ள விமானங்களில் 15 விமானங்கள் கேரளாவிலும், டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் தலா 11 விமானங்களும், மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானாவில் தலா 07 விமானங்களும் தரையிறங்க உள்ளன. மீதமுள்ளவை குஜராத், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தரையிறக்கப்பட உள்ளன. இந்த இக்கட்டடான காலகட்டத்தில் பல நாள் போராட்டத்திற்குப் பிறகு தங்களது சொந்த நாட்டிற்குத் திரும்புவது பலரையும் நிம்மதிப்பெருமூச்சு விடவைத்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்