
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆன்மீக திருவிழாவான ‘மகா கும்பமேளா’ கடந்த ஜனவரி 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறும், இந்த விழாவில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்கள் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடமான திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், கடந்த ஜனவரி 29ஆம் தேதியன்று மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், பலரும் காயமடைந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இருந்த போதிலும், தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜ் நகரை நோக்கி வருவதால் அந்த இடம் முழுவதும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பித்து வருகின்றது.
இந்த நிலையில், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்வதற்காக சென்ற 10 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக 10 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். நேற்று நள்ளிரவு நேரத்தில் மிர்சாபூர் - பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த பேருந்து மீது காரி மோதி விபத்தானது. இந்த விபத்தில், காரில் இருந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கும்பமேளாவில் கலந்துகொள்வதற்காக பிரயாக்ராஜ் நகரை நோக்கி, செல்லும் பக்தர்கள், விபத்து ஏற்பட்டு தொடர்ந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.