Skip to main content

’நாங்கள் கொலைகார கூட்டணிதான்’- முத்தரசன் பேட்டி

Published on 25/12/2018 | Edited on 25/12/2018
mu

 

புதுக்கோட்டை இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கீழவெண்மணியில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கூலி உயர்வுக்காக போராடிய 43 பேர் உயிரோடு தீ வைத்து எரித்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றார். 

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன்:-

   ‘’ராமர் கோவிலை கட்ட முடியாது என்பது மத்திய பாஜக அரசுக்கு தெரியும்.   இருந்தாலும் தற்போது ஓட்டு வங்கியை பெற ராமர் கோயில் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளனர்.

 

 இதேபோல்தான் சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் மக்களின் ஓட்டுக்களை வாங்க வேண்டும் என்று பாஜக செயல்பட்டு வருகின்றது.   ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின் கருத்திற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக தேர்தலுக்கு முன்பு அறிவிப்பதா பின்பு அறிவிப்பதா என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.   பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் மூன்றாவது அணி முயற்சி எடுத்துள்ளார். அந்த முயற்சி வெற்றி பெறாது தோல்வியில் தான் முடியும்.


 மத்தியில் பாஜக எதிராக காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான் அமையும்.  அதேபோல் தமிழகத்தில் அதிமுக பாஜக வுக்கு எதிராக திமுக தலைமையில் தான் ஆட்சி அமையும்.     மாற்று அணிக்கு மாற்று கட்சிகளுக்கு சாத்தியமில்லை.

 

 அமைச்சர் ஜெயக்குமார் திமுக காங்கிரஸ் கூட்டணி கொலைகார கூட்டணி என்று கூறியுள்ளார். அவர் சொல்வது சரிதான் நாங்கள் வகுப்புவாத கொள்கையை கொலை செய்யும் கொலைக்கார கூட்டணி தான்.


 8000 சத்துணவு மையங்களை மூடுவதாக சமூகநலத்துறை அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது. மேலும் அரசின் மாற்று ஏற்பாடு நடைமுறைக்கு சாத்தியம் ஆகாது, வருகின்ற 2019ஆம் ஆண்டு வகுப்புவாதத்திற்கு எதிராகவும் மதவாத சக்திகளை அகற்றவும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் சபதமேற்கும் ஆண்டாக அமைய வேண்டும், கஜா புயல் கரையைக் கடந்து ஒரு மாத காலம் ஆகியும் இதுவரை மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை, அரசு அறிவித்த நிவாரண பொருட்களை நிவாரணத் தொகையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வரை சென்று சேரவில்லை.    

 

ஐந்து வருடங்களுக்கு மேல் குடியிருக்கும் இடங்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று அரசு நேற்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும் நீர்நிலைகள் மேய்ச்சல் புறம்போக்கு உள்ளிட்டவைகளில் அவர்களுக்கு வழங்க முடியாது என்று அரசு கூறியுள்ளது.  ஆனால் பயன்படுத்தப்படாத நீர்நிலைகள் பயன்படுத்தப்படாத மேய்ச்சல் நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு விதிமுறைகளை தளர்த்தி அவர்களுக்கு பட்டா வழங்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’ என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்