Skip to main content

வீடு வாங்கிக்கொடுத்தார்... விளக்கும் ஏற்றி வைத்தார்! -ரஜினியின் பெரிய மனசு!! (படங்கள்)

Published on 07/10/2019 | Edited on 07/10/2019

தேவர் ஃபிலிம்ஸ் கதை இலாகாவில் பணையாற்றிவந்த கலைஞானத்தை...‘நீ தனியா படம் பண்ணு... நான் உனக்கு ஃபைனான்ஸ் ஏற்பாடு பண்ணித்தர்றேன்...’ எனச் சொன்னார் தேவர். இதன்படிதான்‘பைரவி’படத்தை ரஜினியை கதாநாயகனாக வைத்து தயாரித்தார் கலைஞானம். ஆனால்... ரஜினியை ஹீரோவாக்கியதில் தேவருக்கு அப்போது உடன்பாடில்லை. ‘ஜெய்சங்கரை ஹீரோவாப் போடு... ரஜினியை வில்லனாப் போடு’ என்றார். ஆனால்... ரஜினிதான் ஹீரோ என்பதில் கலைஞானம் உறுதியாக இருந்ததால்... அந்தப் படத்திற்கு ஃபைனான்ஸ் ஏற்பாடு செய்துதர மறுத்துவிட்டார் தேவர். இருப்பினும்... விடாமுயற்சியோடு போராடி... ‘பைரவி’படத்தி தயாரித்தார் கலைஞானம். இங்கிருந்துதான் ரஜினி என்கிற சூப்பர்ஸ்டார் உருவானார்.
 

"நான் ஐயாயிரம், பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் தெலுங்கு, கன்னடம், தமிழ் மொழிப் படங்களில் சின்னச் சின்ன கேரக்டர்களில் நடிச்சிக்கிட்டிருந்தப்போ... கலைஞானம் சார் வந்து, “பைரவி என்கிற கதையைச் சொல்லி... 25 ஆயிரம் சம்பளம் தர்றேன்... நீங்கதான் ஹீரோ.. நான் நாளைக்கி வந்து... ஃபைனல் பண்ணிக்கிறேன்னு சொன்னார். எனக்கு தர்மசங்கடமாகிவிட்டது. நான் வில்லனாகத்தான் நடிக்க ஆசைப்பட்டேன். அதுதான் எனக்கு சரியா இருக்கும்... ஹீரோன்னா... அதுல அதுல பல கஷ்டங்கள் உண்டு. என்ன செய்யலாம்?னு புரியாத நிலையில ஒரு முடிவுக்கு வந்தேன். நாளைக்கி கலைஞானம் வந்ததும்... சம்பளத்தை உயர்த்திக் கேட்டா... நம்மளை விட்டுடுவார்னு நினைச்சேன். மறுநாள்... கலைஞானம் சார் வந்தார். ‘சார்... 50 ஆயிரம் ரூபா சம்பளம் வேணும்... அட்வான்ஸா ஐயாயிரம் குடுங்க’னு சொன்னேன். உடனே அவர்...‘இந்தாங்க அட்வான்ஸ்’னு 30 ஆயிரம் ரூபாயை மொத்தமா கொடுத்து அசத்தியதோடு... ‘உங்களுக்கு ஜோடி ஸ்ரீப்ரியா’னும் சொன்னார். அடேங்கப்பா... ஆட்டுக்கார அலமேலு புகழ் நடிகையா?னு எனக்கு வியப்பு... அந்த வியப்பு முடியும் முன்னமே... ‘சில நேரங்களில் சில மனிதர்கள் படப்புகழ் ஸ்ரீகாந்த் உங்களுக்கு வில்லனா நடிக்கிறார்’னு சொன்னார். மகிழ்ச்சியில் நான் திக்குமுக்காடிப்போனேன்.


 


படம் வெளியான பிறகு... கலைஞானம் சார் என்னைப் பார்க்கும்போதெல்லாம் தூரத்துல இருந்தபடியே ‘ரஜினி சௌக்கியமா?’னு புன்னகையோடு... என் பதிலுக்குக்கூட காத்திருக்காமல் போய்க்கிட்டே இருப்பார். ‘ஒரு படம் செய்து கொடுங்க’னு என்கிட்ட கேட்கவே மாட்டார். அழுதபிள்ளைதானே பால் குடிக்கும்... ஆனா அவரோ...‘நான் (ரஜினி) நல்லா இருந்தாபோதும்ங்கிற நல்ல உள்ளம் கொண்டவர். கலைஞானம் சார்... நான் தப்பு செய்துட்டேன். அவருக்கு நான் ஒரு படம் செய்து கொடுத்திருக்கணும்... “இப்படி... 25.12.2017 அன்று... ராகாவேந்திரா திருமண மண்டபத்தில் தன் ரசிகர்களிடம் அரசியல் அறிவிப்பை வெளியிட்டபோது கலைஞனத்தை கௌரவப்படுத்தினார் ரஜினி. ரஜினி தலைமையில், பாரதிராஜாவின் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பில் 14.08.2019 அன்று கலைஞானம் அவர்களின் கலைச் சேவையைப் பாராட்டி சென்னை கலைவாணர் அரங்கத்தில் பாராட்டுவிழா நடைபெற்றது.


இதில் பேசிய சிவக்குமார், “கலைஞானம் இன்னும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார்” என்கிற தகவலைச் சொன்னார். இதையடுத்து... அமைச்சர் கடம்பூர் ராஜீ பேசும்போது... “கலைஞானத்திற்கு அரசு சார்பில் வீடு தரபப்டும்” என்றார். ரஜினி தனது பேச்சின்போது... “ஸாரி... கலைஞானம் அவர்கள் இன்னமும் வாடகை வீட்டுலதான் இருக்கார்ங்கிறது எனக்கு இப்பத்தான் தெரியும். ‘நல்லாருக்கீங்களா?’னு கேட்டா... ‘நல்ல்ல்ல்ல்ல்ல்லா இருக்கேன்’னு சொல்லுவார். வெள்லை வேட்டி சட்டையில பளிச்சுனு சிரிச்சமுகமா இருக்கிற அவரைப் பார்க்கும் போது... அவர் கஷ்டபப்டுறமாதிரி தோணாது. அழுத குழந்தைக்குத்தான் தாய்கூட பால் கொடுப்பா. கலைஞானம் என்கிட்ட கேட்டிருக்கணும். பத்து படமாவது அவருக்கு நான் செய்துகொடுத்திருக்கணும். கலைஞானத்துக்கு வீடு கொடுக்கிற வாய்ப்பை நான் அரசாங்கத்துக்கு தரமாட்டேன்...  நான் வாங்கித்தருவேன். கலைஞானத்தோட கடைசி மூச்சு... நான் வாங்கித்தர்ற வீட்டுலதான் போகணும். இன்னும் பல்லாண்டுகாலம் கலைஞானம் நலமுடன் வாழணும்” என்றார் ரஜினி.

விழாவுக்குகான வெறும்பேச்சாக இல்லாமல்... கலைஞானத்திற்கு வீடு வாங்கித்தருவதில் கலைஞானத்தைவிட தீவிரமாக இருந்தார் ரஜினி. விழாவில் பேசிய மறுநாளே வீடு வாங்குவதற்கான தொகைக்கு செக் போட்டு ராகவேந்திரா மண்டப அலுவலகத்தில் கொடுத்துவிட்டுத்தான் ‘தர்பார்’ படப்பிடிப்பிற்குச் சென்றார் ரஜினி. கடந்த 5.10.2019 வெள்ளியன்று... அமுதினி ஃபிளாட்ஸ், 34 விநாயகம் தெரு, வெங்கடேசன் நகர், விருகம்பாக்கம், சென்னை முகவரில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் 1320 சதுரடியில் மூன்ரு படுக்கையறைகளும், இரண்டு கார் பாக்கிங்களும் கொண்ட வீடு வாங்கப்பட்டது.


07.10.2019 அன்று காலை பத்துமணிக்கு தான் வாங்கிக்கொடுத்த புதுவீட்டுக்கு ரஜினி வந்தார். அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார் கலைஞானம். பூஜையறையில் குத்துவிளக்கேற்றினார் ரஜினி. கூடவே பாபா படம் ஒன்றையும் பரிசளித்தார். அதன்ப்பின் ரஜினிக்கு மில்க் ஸ்வீட் தரப்பட்டது. அதைச் சாப்பிட்டபின் கலைஞானம் தன் குடும்பத்தினரை ரஜினிக்கு அறிமுகம் செய்துவைத்தார். பிறகு வீட்டைச் சுற்றிப்பார்த்த ரஜினி... “வீடு தெய்வீகமா இருக்கு” என மகிழ்ச்சி தெரிவித்தார். அதன்பின் விடைபெற்றுச் சென்றார் ரஜினி. கலைஞானத்திடம் நாம் இதுபற்றி கேட்டபோது....  மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியுமாக... அவர் சொன்னார்....“வீடு வாங்கிக்கொடுத்தார்... விளக்கும் ஏற்றிவைத்தார்”


 

சார்ந்த செய்திகள்

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.