தமிழக கடலோர மாவட்டங்களை அச்சுறுத்தி வரும் நிவர் புயல், நேற்று மாலை தீவிர புயலாக மாறிவிடும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இன்று இரவு புதுச்சேரி சென்னைக்கு இடையே புயல் கரையை கடக்கும்போது 110 முதல் 130 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசக்கூடும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆராய்ச்சி மையம் கணித்திருக்கிறது. நேற்று இரவிலிருந்தே சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்ய தொடங்கிவிட்டது. போக போக மழையின் தீவிரம் ஒவ்வொரு கடலோர மாவட்டத்திலும் வலுபெரும் என்று பலரையும் நேற்று காலையிலிருந்து பல செய்திகள் நம்மை பீதியடைய செய்கின்றன.
ஒக்கி புயல், கஜா புயலில் நம்முடைய பெர்பாமன்ஸ் பெரிதாக யாரையும் கவரவில்லை என்று முன்னெச்சரிக்கையாக பல அறிவிப்புகளை அறிவித்து வருகிறது தமிழக அரசு. ஹோமோ சேப்பியன் இனம் இந்த உலகை ஆள நினைக்கும் போதெல்லாம் இயற்கை அந்த இனத்தை அமைதியாக இருக்கும்படி தன் ஸ்டலில் கர்ஜிக்கிறது. வர்தா, ஒகி, கஜா இந்த புயல்களை பற்றி தற்போதைய இளைஞர்கள் பலருக்கும் தெரியும். ஆனால், இதற்கு முன்பும் 90களில் இருந்து மிகவும் வலுவான புயல்கள் தமிழக கடலோரங்களில் கரையை கடந்திருக்கிறது. அவை அனைத்தையும் கடந்துதான் தமிழகம் தற்போது நிவர் புயலை சந்தித்து வருகிறது.
1994 தமிழக புயல்
1994ஆம் அண்டு கடலூர் டூ நெல்லூர் இடையே பெயரிடப்படாத அந்த புயல் கரையை கடந்து சென்னையை நாசமாக்கியிருக்கிறது. சுமார் 115 கி.மீ வேகத்தில் வீசிய புயல் காற்றால் சென்னையே கதிகலங்கி இருந்திருக்கிறது. அப்போது பேரிடர் மீட்புக் குழு பெரிதும் மேம்பட்டில்லை என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பெரிதுமின்றி பல ரூபாய் மதிப்பிலான பொது சொத்துகள் சேதமடைந்துள்ளன. நூறுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். புயலினால் கிண்டி உயிரியல் பூங்காவில் ஐம்பதிற்கும் மேற்பட்ட மரங்கள் சரிந்து விழ, அதை நகர்த்திப்போட யானைகளை பயன்படுத்தியுள்ளனர். ராட்சத கப்பல் ஒன்று திருவொற்றியூர் கடற்கரைக்கு அடித்து கரை தட்டி நின்றுள்ளது.
2005ஆம் ஆண்டு தொடர்ச்சியாக மூன்று புயல்கள் கரையை கடந்துள்ளது. அதில் டிசம்பர் மாதம் கடைசியாக தமிழக கடலோர பகுதியில் கரையேறிய ஃபானுஸ் புயலால் பல ஏக்கர் விவசாய பயிர்கள் நாசமாகின.
2008 நிஷா புயல்
90ஸ் கிட்ஸ்க்கு மிகவும் தெரிந்த ஒரு புயலாக இருப்பது நிஷா புயலாக இருக்கும் என்று நினைக்கிறேன். பள்ளிகளுக்கு சுமார் ஒரு வாரம் வரை வெள்ளத்தால் விடுமுறை விடப்பட்டது. டெல்டா பகுதிகளை சூறையாடிய நிஷா, விவசாயிகளை பெரிதும் சோதித்தது. 2008ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி காரைக்காலில் நிஷா புயல் 83 கி.மீ வேகத்தில் கரையை கடந்தது. 189 பேர் இதனால் பலியாகினர். அந்த சமயத்தில் மிகவும் மோசமான சேதத்தை உண்டாக்கிவிட்டு சென்றது நிஷா. வேதாரண்யம் போன்ற கடலோர மாவட்டங்களில் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் மின் வசதி இன்றி மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானர்கள்.
2010 ஜல் புயல்
கடந்த 2010ஆம் ஆண்டு தெற்கு சீன கடலில் உருவான புயல் ஜல். அங்கிருந்து நவம்பர் 7ஆம் தேதி சென்னையில் கரையை கடந்தது. தீவிர புயலான ஜல் 110 கிமீ வேகத்தில் புயல் காற்று வீசியது. இந்த புயலால் தமிழகம் மட்டுமின்றி தாய்லாந்து, மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 54 பேர் தமிழகத்தில் இந்த புயலால் பலியாகியுள்ளனர்.
2011 தானே புயல்
இந்திய பெருங்கடலின் கிழக்கு பக்கம் அருகே குறைந்த காற்றழுத்தமாக உருவாகி பின்னர் தீவிர புயலாக உருமாறியது தானே. தமிழகத்தின் முதல் அதிதீவிர புயல் தானே. கடலூர் மாவட்டத்தை மிகவும் மோசமாக தாக்கியதால் விவசாயிகள் பலரும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தனர். பல மக்கள் தங்களின் வாழ்விடத்தை இழந்தனர். இந்த புயல் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மீளவே அவர்களுக்கு பல காலம் எடுத்துக்கொண்டது. 40,000 மின் கம்பங்கள் முற்றிலுமாக சரிந்துவிழுந்தன.