Skip to main content

இரண்டாம் நாள் நிகழ்வு: 10ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ தமிழ் சங்கத்தின் பொன்விழா மற்றும் வட அமெரிக்க பேரவையின் 32  ஆம் ஆண்டு விழா

Published on 08/07/2019 | Edited on 09/07/2019

10ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ தமிழ் சங்கத்தின் பொன்விழா மற்றும் வட அமெரிக்க பேரவையின் 32  ஆம் ஆண்டு விழா நிகழ்வுகளின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் ஆரம்ப நாள் உற்சாகத்திற்கு சற்றும் குறைவில்லாமல் தொடர்ந்தன. 
 

america


விழாவின் கருப்பொருளான ‘கீழடி என் தாய்மடி’ என்பதற்கு ஏற்ப கீழடி அகழ்வாய்வின் கண்டெடுப்புகளின் மாதிரி கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. வள்ளுவர் கோட்டத்தின் மாதிரியும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சிகள் இனிதே துவங்கின. திரு.ஜேம்ஸ் வசந்தன் பங்குபெற்ற திருக்குறள் மறை ஓதல் நடந்தது. அடுத்ததாக வீணை இசை வாசிக்கப்பட்டது. கனடா தமிழ் காங்கிரஸ் சார்பாக தமிழுக்கு வந்தனம் செலுத்தப்பட்டது. 

 

சிறுவர்கள் பங்கு பெற்ற திருக்குறள் தேனீ, திருக்குறள் தூதர் போட்டிகளின் இறுதி சுற்று நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன. இளையோர் திறன் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு "நட்சத்திரம் 2019" பட்டம் வழங்கப்பட்டது. சிகாகோ தமிழ் சங்கத்தினரின் கதம்ப நடனம் மற்றும் நியூஜெர்ஸி தமிழ் சங்கத்தின் நகைச்சுவை நாடகமும் அரங்கேறின. குறும்பட போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. டாக்டர்.சுடலைமுத்து அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து சிகாகோ தமிழ் சங்கம் மற்றும் கனடா தமிழ் சங்கங்களின் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. 

ஆர்.ஆர். சீனிவாசன் ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வுகள் குறித்த சிறப்புரை நிகழ்த்தினார். சீர்காழி சிவசிதம்பரம் தமிழிசை நிகழ்ச்சி நடந்தது. டி.ஏ.பி. (TAP)  விருதுகள் வழங்கப்பட்டன. கு. ஞானசம்பந்தம் நடுவராக பொறுப்பேற்று நடத்திய தமிழ் இலக்கியங்களின் வினாடி வினா நிகழ்வு பார்வையாளர்களின் கருத்தைக் கவர்ந்தது. சங்கத்தமிழ் படும் மங்காத தமிழ் மரபு நாட்டிய நடனம் அரங்கேற்றப்பட்டது. 10 ஆம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நவி பிள்ளை (ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் உயர்ஆணையர்), திரு. ராஜா கிருஷ்ணமூர்த்தி (US Congressman), தமிழ்நாட்டின் தமிழ் கலாச்சாரத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட விழாவின் முக்கிய தலைவர்களின் தலைமையில் சிறப்பாகத் துவங்கியது. 

தன்னார்வத் தொண்டர்களுக்கு பாராட்டு வழங்கப்பட்டது. சிலம்பம் அருணாச்சல மணி தலைமையில் தமிழக கலைஞர்கள் மற்றும் அமெரிக்க கலைஞர்களும் இணைந்து நடத்திய தமிழ் மரபு நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது.  இங்கிலாந்து நடன குழுவினர் ‘தாய்நாடு அதில் ஒரு தாய் வீடு’ என்ற தலைப்பில் குழு நடனம் நிகழ்த்தினார். யுவன் ஷங்கர் ராஜா குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி இரவிலும் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடன் நிறைவாக நடைபெற்றது. நன்றி உரையுடன் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தன.