"இந்தியாவில் பணியாற்றக் கூடிய மொத்த மருத்துவர்களில், எட்டில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்கிறார். இந்திய மருத்துவர்களின் மொத்த எண்ணிக்கையில், 12 சதவீத மருத்துவர்கள் தமிழகத்தில் இருந்தே உருவாகிறார்கள்" இப்படிக் கூறியவர் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன். சொல்லிய ஆண்டு ஜூலை 2019. சொல்லிய இடம் இந்திய நாடாளுமன்றம். இப்படி இவர் பேசிய இதே ஆண்டில்தான், ரிதுஸ்ரீ, வைஷ்யா, மோனிஷா எனும் மூன்று மாணவிகளை, தமிழ்நாடு 'நீட்' தேர்வுக்கு பலி கொடுத்திருந்தது. அனிதா முதல் ஊரப்பாக்கம் அனு வரை பலரது வாழ்விலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த தேர்வுமுறை. சமீபத்தில் நீட் தேர்வுக்கு பலியான தனுஷ், கனிமொழி, சவுந்தர்யா ஆகியோரின் மரணங்கள், நீட் தேர்வுமுறையை நோக்கி ஆழமான விவாதத்தை பொதுவெளியில் ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்தடுத்து அரங்கேறிய 17-க்கும் மேற்பட்ட நீட் மரணங்கள் தமிழக மக்களை விரக்தியடையச் செய்துள்ளது. இதேசமயத்தில், தமிழக அரசு கொண்டுவந்த 'நீட் விலக்கு மசோதா' ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனால், இந்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிப்பாரா? நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்குமா? இனியாவது நீட் தற்கொலைகள் குறையுமா? போன்ற கேள்விகள் எல்லோரின் மனதிலும் எழுந்து நிற்கிறது. பல மாணவர்கள் இப்போது மருத்துவம் படிக்கலாமா வேண்டாமா எனும் குழப்ப நிலையில் குடிகொண்டுள்ளனர். "இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணமான இந்த 'நீட்' தேர்வு திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது. அதற்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கவே இல்லை. கலைஞர் நீட் தேர்வை வரவேற்றுக் கடிதம் எழுதியுள்ளார்" என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்ட, "நீட் தேர்வுக்கு மீண்டும் உயிர் கொடுத்தது பாஜக, அதற்கு ஆதரவாக வாக்களித்துச் சட்டம் நிறைவேறத் துணை நின்றது அதிமுக" என திமுகவினர் பதில் தாக்குதல் தொடுத்துவர இணைய உலகமே அதிரிபுதிரியாகக் கிடக்கிறது. உண்மையில் நீட் தேர்வைக் கொண்டுவந்தது யார்? திமுக அதிமுக செய்தது என்ன? நீட் அரசியல் என்ன? பார்க்கலாம்.
எம்ஜிஆர் கொண்டு வந்த நுழைவுத்தேர்வு
நீட் தேர்வைப் புரிந்துகொள்ள TNPCEE தேர்வைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். எம்ஜிஆர் முதல்வராக இருந்த சமயத்தில், 1984-ம் ஆண்டு மார்ச் மாதம், தமிழகத்தில் TNPCEE எனும் தமிழ்நாடு தொழில்முறை நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட மேற்படிப்புகளுக்கு இந்த நுழைவுத்தேர்வு மூலமே மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் எனும் அறிவிப்பு வெளியானது. திக, திமுக சார்பில் கண்டனப் போரட்டங்கள் நடத்தப்பட்டன. "இது சமூக நீதிக்கு எதிரானது. இதனால், ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர். இது பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காகப் போராடிய, பெரியார் மற்றும் அண்ணாவின் கொள்கைகளுக்கு எதிரானது. எனவே, இந்த அறிவிப்பை உடனடியாக ரத்து செய்யவேண்டும்" என அந்த இயக்கங்கள் கருத்துத் தெரிவித்தன. எம்ஜிஆரோ, "இந்தப் புதிய தேர்வுமுறையில் அதிக அளவில் பயனடைவதே பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்தான்" என்றார். ஆனாலும், தொழில்முறை நுழைவுத் தேர்வை ரத்து செய்யவேண்டும் எனும் கோரிக்கை மட்டும் உயிர்ப்புடனே இருந்துவந்தது.
TNPCEE தேர்வால், கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் கோச்சிங் கிளாஸில் சேர்ந்து படிக்க கிராமத்தில் வசதி வாய்ப்பில்லை என்றும் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில், இந்தத் தேர்வுமுறையை ரத்து செய்யவேண்டும் எனும் முழக்கங்கள் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால், கடந்த 2005-ம் ஆண்டு, எம்ஜிஆர் கொண்டுவந்த நுழைவுத் தேர்வுமுறையை ரத்து செய்வதாக ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி பிளஸ்2 தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே தொழில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும் அறிவித்தார். இந்நிலையில், "மாணவர்கள் சேர்க்கைக்கான நடைமுறைகளை மாற்றுவதற்கு அரசுக்கு உரிமையில்லை. ஓராண்டாக கஷ்டப்பட்டு தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளோம். திடீரென்று ரத்து செய்வதால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படும்" என்று தேர்வு எழுதி வெற்றிபெற்ற மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அதேசமயம், நுழைவுத்தேர்வை ரத்துசெய்த தமிழக அரசை ஆதரித்து தொழில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு, பா.ம.க. மாணவர் அணி ஆகியவை மனுத் தாக்கல் செய்தன.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த அப்போதைய தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜூ மற்றும் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த 'உத்தரவு செல்லாது' எனத் தீர்ப்பளித்தது. இருப்பினும், தமிழக மக்களின் மனநிலை நுழைவுத்தேர்வுக்கு எதிரானதாகவே இருந்துவந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. அதையடுத்து, 2006-ம் ஆண்டு திமுக அரசு அமைந்தது. முதல்வராகப் பதவியேற்ற கலைஞர், ஆளுநர் உரையிலேயே “நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்படும்” என அறிவித்தார். அத்துடன், அப்போதைய அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் அனந்தகிருஷ்னன் தலைமையில் கமிட்டி ஒன்றையும் அமைத்தார். அனந்தகிருஷ்னன் கமிட்டி சமர்ப்பித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், 2006-ம் ஆண்டு டிசம்பர் 06-ம் தேதி, சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டது. முதல் கூட்டத் தொடரிலேயே பொது நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால், 2007-ஆம் கல்வி ஆண்டிலிருந்த்து 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களைக் கொண்டு பொறியியல் மற்றும் மருத்துவப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுவந்தது. சில ஆண்டுகள் இப்படிச் சுமூகமாக உருண்டது.
திமுக காங்கிரஸ் கூட்டணியும் நீட் தேர்வும்
ஆனால், இது நீண்ட நாள் நீடிக்கவில்லை. 2010-ல் இந்திய மருத்துவக் கழகம், மருத்துவப்படிப்பில் சேர பொது நுழைவுத்தேர்வு அவசியம் என்கிற விதிமுறைகளை வகுத்தது. இந்த அறிவிப்பு வெளியானவுடன், அப்போது தமிழக முதல்வராக இருந்த கலைஞர், இதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் அப்போதைய மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த குலாம் நபி ஆசாத்துக்கும் கடிதம் எழுதினார். அதில், "2007-08ஆம் கல்வி ஆண்டு முதல் மாணவர்கள் +2 படிப்பில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றி மருத்துவப் படிப்பிற்கு மாணவர்களைச் சேர்க்கும் நடைமுறைதான் இருந்து வருகிறது. இது தொடரப்பட வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார். மேலும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக தமிழக அரசு இணைத்துக் கொண்டது.
தமிழ்நாடு அரசு எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கையை அனுமதிப்பது என்ற நிலையை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்தில், திமுக அரசு தொடர்ந்த வழக்கில், இந்திய மருத்துவக் கழகத்தின் பொது நுழைவுத்தேர்வு அறிவிப்புக்கு 2011ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், தேசம் முழுவதும் வெவ்வேறு முறையில் மருத்துவத் தேர்வு நடைபெறுவதாகவும் தேர்வில் முறைகேடுகள் அதிகரித்துள்ளதாகவும் கூறிய இந்திய மருத்துவக் கழகம், 2012-ம் ஆண்டு நீட் தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. ஆனாலும் நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக, நீட் தேர்வை ஓராண்டு ஒத்திப்போட்டது மத்திய அரசு.
நுழைவுத் தேர்வு எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்ப்போம்
அதன் பிறகு 2013-ல் மத்திய அரசு நீட் தேர்வைக் கட்டாயமாக்கியது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், "மருத்துவப் படிப்பு சேர்க்கையில் நியாயமான நடைமுறைகளை தமிழகம் பின்பற்றி வரும் வேளையில் நீட் தேர்வை அமல்படுத்துவது தேவையற்றக் குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே நீட் தேர்வை அமல்படுத்தக் கூடாது" எனக் கூறினார். அப்போது, உடன்பிறப்புகளுக்கு கலைஞர் எழுதிய கடிதத்தில், "தி.மு.கவைப் பொருத்தவரை, நுழைவுத் தேர்வு எந்த வடிவத்தில் வந்தாலும், அதை எதிர்க்கும் என்பதைத் தெளிவுபடுத்திட விரும்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார். இதற்கிடையே, வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி, நீட் தேர்வில் இருந்து சிறுபான்மை மருத்துவக் கல்லூரியான தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அல்டமாஸ் கபீர், விக்ரமஜித் சென், ஏ.ஆர்.தவே உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், நீதிபதிகள் இருவேறுபட்ட தீர்ப்பை வழங்கினர். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கலாம் என்று அல்டமாஸ் கபீரும் விக்ரமஜித் சென்னும் தீர்ப்பளித்த நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க முடியாது எனத் தீர்ப்பளித்தார் ஏ.ஆர்.தவே. மூன்றில் இரண்டு நீதிபதிகள் நீட் தேர்வுக்கு விலக்கு கொடுத்ததால், அதுவே இறுதித் தீர்ப்பாக அமலுக்கு வந்தது. ஜூலை 18 2013 அன்று வெளியான இந்தத் தீர்ப்பில், "அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான பொது நுழைவுத் தேர்வை ஏற்பாடு செய்வது இந்திய மருத்துவக் கழகத்தின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டது எனக் கூறிய நீதிமன்றம், நீட் தேர்வு அரசியலமைப்புக்கே எதிரானது என்றும் அறிவித்தது. நீட் தேர்வில் இருந்து சிஎம்சி விலக்கு பெற்றது.
வெளிநடப்பு செய்த அதிமுக
ஆனாலும், இந்திய மருத்துவக் கழகம் இதை விடுவதாய் இல்லை. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்தது இந்திய மருத்துவக் கழகம். இந்தச் சமயத்தில், காங்கிரஸ் கட்சி விடைபெற்றுச் சென்றது. புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டார். ஆனாலும், நீட் தேர்வு நடைபெறுவதில் உறுதியுடன் இருந்தது மோடி அரசு. இதில், வேடிக்கை என்னவென்றால் குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது, நீட் தேர்வை கடுமையாக எதிர்த்த மோடி, இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்றதும் நீட் தேர்வை விழுந்து விழுந்து ஆதரித்தார். சீராய்வு மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 'நீட் தேர்வு கட்டாயம்' என்று 2016-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி, தீர்ப்பளித்தது. இதில், வினோதம் என்னவென்றால், சிஎம்சி மருத்துவக் கல்லூரி தொடர்ந்த வழக்கில், 'நீட் தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும்' எனத் தீர்ப்பளித்த ஏ.ஆர்.தவேதான் சீராய்வு மனுவை ஏற்றுக்கொண்ட அமர்வில் தலைமை நீதிபதியாக இருந்தார். ஏற்கனவே ஒரு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, அதே வழக்கு சம்பந்தப்பட்ட சீராய்வு மனுவை விசாரிக்கமாட்டார்கள். இதை நீதிமன்ற மரபாகவே பலர் பின்பற்றி வருகின்றனர். ஏ.ஆர்.தேவின் இந்தச் செயல், நீதிமன்ற மரபை மீறிய செயல் என அப்போதே விமர்சிக்கப்பட்டது.
அடுத்தகட்டமாக, 2016 ஜூலை மாதம், நீட் தேர்வை நிரந்தரமாக்கும் வகையில் புதிய சட்டத்திருத்தத்தை கொண்டுவந்தது ஆளும் பாஜக அரசு. நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அன்றைக்கு இரு அவைகளிலும் சேர்த்து 52 எம்.பி.,க்களைக் கொண்ட அதிமுக அரசு, நீட் மசோதாவுக்கு எதிராக வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தது. வெறும் 3 ராஜ்யசபா உறுப்பினர்களை கொண்ட திமுக அரசு எதிர்த்து வாக்களித்தது. அதிமுக உறுப்பினர்கள் நீட் மசோதாவுக்கு எதிராக வாக்களித்திருந்தால், நீட் சட்டமே அமலுக்கு வந்திருக்காது எனக் கூறப்பட்டது. இந்தச் சமயத்தில்தான், ஜெயலலிதா உடல்நிலை மெலிந்து பொதுவெளியில் அதிகம் தலைகாட்டாமல் இருந்துவந்தார். இதனால், இந்த வெளிநடப்பு ஜெயலலிதாவின் சம்மதுத்துடன்தான் நடந்ததா எனும் கேள்வி பிற்காலத்தில் தலைதூக்கியது. கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 01-ம் தேதி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு நீட் விலக்கு மசோதாக்களை நிறைவேற்றியது. திமுக உள்ளிட்ட அனைத்து முக்கியக் கட்சிகளின் ஆதரவுடனும் நிறைவேறிய இந்த மசோதாக்களுக்கு அனுமதிகோரி குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
ஆனாலும் 21 மாதங்களாக எந்தப் பதிலும் ஜனாதிபதி மாளிகையில் இருந்து வரவில்லை எனக் கூறப்பட்டது. அதிமுக அரசும் மவுனம் சாதித்து வந்தது. இந்நிலையில், 2017-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதியே நீட் விலக்கு மசோதாக்களை திருப்பி அனுப்பிவிட்டதாக, 2019-ம் ஆண்டு நீதிமன்றத்தில் கூறியது மத்திய அரசு. இதற்கிடையே, மத்திய அரசு நிராகரித்து அனுப்பிய கடிதத்தை, 2017-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதியே, சட்டத்துறை செயலாளர் பூவலிங்கம் பெற்றுவிட்டார் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியது. அதிமுகவால் பாஜக அரசையும் பகைத்துக்கொள்ள முடியவில்லை தமிழக எதிர்க்கட்சிகளுக்கும் பதில் சொல்ல முடியவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பில், "கொஞ்சம் பொறுங்கள். நல்லதே நடக்கும்" என்றார் எடப்பாடி. ஆனால், அதன்பின் தான், நீட் தமிழ்நாட்டில் தனது கோரமுகத்தைக் காட்டத்தொடங்கியது. அனிதா தற்கொலை செய்துகொண்டார். தமிழ்நாடே கொந்தளித்தது. அனிதாவின் மரணம் தமிழ்நாட்டின் மனசாட்சியை தட்டி எழுப்பியது. நீட் எதிர்ப்பு முழக்கங்கள் தமிழ்நாட்டில் வலுவடைந்தது.
திமுகவால் NEET தேர்வை ரத்து செய்ய முடியுமா?
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் எனக் கூறி ஆட்சி பீடத்தில் அமர்ந்த திமுக, முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரில் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றியுள்ளது. அத்துடன், நீதியரசர் ஏகே ராஜன் தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கையும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏகே ராஜன் குழுவின் அறிக்கையில், "நீட் தேர்வு முழுக்க முழுக்க கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக உள்ளது எனவும் எம்பிபிஎஸ் மாணவர்களின் தகுதி அல்லது தரத்தினை நீட் தேர்வு உறுதிசெய்வதாகத் தெரியவில்லை எனவும்" கூறப்பட்டுள்ளது. ஆனாலும், தமிழக அரசால், நீட் தேர்வைத் தடுக்க முடியாது என பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றனர். அதற்கு திமுக தரப்பிலோ, "இந்தியாவின் முதல் சட்டத் திருத்தம் தொடங்கி 69 சதவீத இட ஒதுக்கீடு வரை தமிழகம் அனைத்திலும் விதிவிலக்காக இருந்துவந்துள்ளது. அவ்வளவு ஏன், இந்திய நாட்டில் மத அடிப்படையில் எந்த மாநிலத்துக்கும் இட ஒதுக்கீடு வழங்கிய வரலாறு கிடையாது. ஆனால், மதச் சிறுபான்மையினரான இஸ்லாமிய மக்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்தது தமிழகம்தான். அதனால் நீட் விலக்கும் சாத்தியமே" என அடித்துக் கூறுகின்றனர்.
எது எப்படியோ, நீட் தேர்வை அப்புறப்படுத்தும் ஆட்சியாளர் யாராகினும், அவரை தமிழக வரலாறு நன்றியுடன் வரவுவைத்துக் கொள்ளும் என்பதில் எள் நுனியளவும் சந்தேகமில்லை.