Skip to main content

வேலூரில் கூட்டணி கட்சியின் ஓட்டுகள் சிதறியதால் வெற்றி யாருக்கு? அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 08/08/2019 | Edited on 08/08/2019

கடந்த 15 நாட்களாக பரபரப்பாக இருந்த வேலூர் நாடாளுமன்றத் தொகுதியின் ஓட்டுப்பதிவு ஆகஸ்ட் 5-ந் தேதி காலை 7 மணிக்கு படுமந்தமாகவே தொடங்கியது. தொகுதியில் 14,32,099 வாக்குகள் உள்ளன. இதற்காக 1,553 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடை பெற்றது. இதில் 850 மையங்கள் பதட்டமானவை என மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் சண்முகசுந்தரம் அறிவித்தார். ஆளும்கட்சி தனது அதிகாரத்தை பயன்படுத்தி வாக்குச்சாவடி மையங்களை கைப்பற்ற முயலும் என தி.மு.க. தரப்புக்கு வந்த தகவலைத் தொடர்ந்து, நாடாளுமன்ற மக்களவை குழு தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. அனைத்து வாக்குச்சாவடிகளையும பதட்டமானவை என அறிவிக்க வேண்டும் என மனு தந்ததால் அனைத்து சாவடிகளுக்கும் பாதுகாப்பு பலமாக போடப்பட்டது.
 

dmk



வாக்குப்பதிவன்று தொகுதியை வலம்வந்தபோது, காலை 10 மணி நிலவரப்படி 7 சதவிகிதம் தான் வாக்குப்பதிவு நடை பெற்றிருந்தது. இதுபற்றி மையத்துக்கு வெளியே அமர்ந் திருந்த அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, ""இந்த ஒற்றைத் தொகுதி தேர்தல் இடைத்தேர்தல் போல் நடைபெற்றதால் மக்களுக்கும் கட்சியினருக்கும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு சப்பென போய்விட்டது. நாங்கள் 300 ரூபாய் தந்தோம், தி.மு.க. 200 ரூபாய் தந்தது. இந்தப் பணத்தை தந்தபோது மக்கள் சந்தேகத்தோடு பார்த்தார்கள். இதுதான் என உறுதியாக தெரிந்தபின் சோர்ந்துவிட்டார்கள். இதனால்தான் நாங்களும் வீடு வீடாகப் போய் ஓட்டுப்போட வா என அழைத்து வரவில்லை'' என்றார்கள்.

 

vellore



வாக்குப்பதிவன்று பூத் செலவுக்கு ஒரு பூத்துக்கு தி.மு.க. 15 ஆயிரமும், அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் 25 ஆயிரமும் தந்து ஊக்கப்படுத்தினர். இன்னும் கூடுதலாக தருவார்கள் என எதிர்பார்த்த பூத் கமிட்டி நிர்வாகிகள் நொந்துபோய் விட்டனர். இதேபோல் பூத்துக்கு வெளியே தி.மு.க.வும், அ.தி.மு.க.வும்தான் களத் தில் நின்றன. தி.மு.க.வோடு கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., இடதுசாரிகள், வி.சி.க. நிர்வாகிகள் யாரும் கண்ணில்கூட தென்படவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகளைத் தேடியும் கிடைக்கவில்லை. தொகுதியில் உள்ள பா.ம.க. வாக்குகளை, தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வளைத்து விட்டார், அதேபோல் தலித் ஓட்டுக்களை ஏ.சி.சண்முகம் வளைத்துவிட்டார் என்கிறார்கள் களத்தில் உள்ள கட்சியினரே.

 

dmk



இந்த தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த், அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் இருவரும் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அதற்குக் காரணம், தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த்தின் ஓட்டு, காட்பாடி காந்திநகர் முகவரியில் உள்ளது. அது வேலூர் மாநகராட்சி பகுதியாக இருந்தாலும், காட்பாடி சட்ட மன்றத் தொகுதிக்குள் -அதாவது அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது. அதேபோல் ஏ.சி.சண்முகத்தின் ஓட்டு, ஆரணி நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது. இத னால் இருவராலும் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் வாக்களிக்க முடியவில்லை. இவர்கள் மட்டுமல்ல சில சுயேட்சை வேட்பாளர்கள், பதிவு பெற்ற கட்சியின் வேட்பாளர்களும் வாக்களிக்க முடியவில்லை. இவர்கள் எல்லாம் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையே, குடியாத்தம் நகரில் காந்திநகர் பகுதி மக்களுக்காக அங்குள்ள அரசுப் பள்ளியில் வாக்குப்பதிவு மையம் பதட்டமான சாவடி என்பதால் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. வாக்குச்சாவடி மையத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்த நிலையில், அந்த அறையை திறக்க வந்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். காரணம், அறையின் பூட்டை உடைத்து பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் திருடப்பட்டிருந்தன. மேலும் அங்கிருந்த 10 கணினிகள் மற்றும் ஒரு ஜெராக்ஸ் இயந்திரமும் திருட்டுப் போயிருந்தது. சி.சி.டி.வி. கேமராக்கள், கணினிகளை திருடிச்சென்ற நபர்கள் குறித்து புகார் தரப்பட்டது.

மதியம் 12 மணி நிலவரப்படி, அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் வாக்குப் பதிவின் சதவிகிதம் மந்தமாக இருந்ததால், தொகுதியின் எம்.எல்.ஏ. நந்தகுமார் களத்தில் இறங்கி, இறுதியில் 62% வாக்குப் பதிவாகும்படி பார்த்துக் கொண்டார். இதே போல்தான் ஆம்பூர் தொகுதியில் எ.வ.வேலுவின் ஆட்கள் சுறுசுறுப்பு காட்டியதால் வாக்குப் பதிவின் சதவிகிதம் அதிகரித்தது. ஆனால் அமைச்சர் நிலோபர் கபிலின் தொகுதியான வாணியம்பாடியில் கடைசி வரை 52% இருந்ததைப் பார்த்து அ.தி.மு.க.வினரே அதிர்ச்சியாகிவிட்டனர்.

இறுதிக்கட்ட நிலவரமாக வேலூர் எம்.பி. தொகுதியில் 72% வாக்குகள் பதிவாகியிருந்தன. முஸ்லிம் சமுதாய வாக்குகள் அதே அளவில் பதிவானாலும் அச்சமுதாயத்தின் பெண்கள் வாக்காளர்களின் வாக்குகள் அவ்வளவாக பதிவாகவில்லை. ஆனால் துரைமுருகன் எதிர்பார்த்திருந்த மற்ற சமுதாய வாக்குகள் அதிக அளவில் பதிவாகி, தி.மு.க. தரப்பிற்கு தெம்பைத் தந்துள்ளன. வாக்குப் பதிவிற்கு முதல் நாள் இரவு, ஓட்டுக்கு தலா 1,000 என ரேட்டை உயர்த்திய ஏ.சி.சண்முகம், வாக்குப் பதிவு நாளன்று பிற்பகல் வரை இதே டெக்னிக்கை கையாண்டார். தி.மு.க. தனது வாக்குகளை உறுதிப்படுத்தியது. ஆனாலும் வாக்குப்பதிவு முடிந்தபின் இரு கழகங்களுமே பதற்றத்தில்தான் இருந்தன. 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.