சுமார் 42 வயதேயான ரவுடி தூத்துக்குடி அருகே என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தென் மாவட்டத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் புதுக்கோட்டை அருகேயுள்ள கூட்டாம்புளியைச் சேர்ந்தவன் துரைமுருகன். ஆரம்பத்தில் விடலையாகச் சுற்றித் திரிந்தவர் சிறு சிறு திருட்டு வழக்குகளில் மாவட்டப் பகுதிகளில் ஈடுபட அதில் பிடிபடாமல் போயிருக்கிறார். நாளடைவில் திருட்டுகளில் டெவலப் ஆனவர் வழிப்பறி கொள்ளை அளவுக்கு முன்னேறியிருக்கிறார். 2000களில் இது போன்ற கிரிமினல் செயல்களில் ஈடுபட்டவர் திடீரென்று தன் தொழிலை மதுரை மாவட்டம் பக்கம் திருப்பி, 2001ல் முதன் முதலாக மதுரைப் பகுதியின் அலங்காநல்லூர் ஏரியாவில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட மதுரை சென்ட்ரல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து மதுரையின் ஒத்தக்கடை, ஊமச்சிகுளம், திருமங்கலம், மதுரை சென்ட்ரல் பகுதி என மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொள்ளை, கொலை மற்றும் கொலை முயற்சி என துரைமுருகன் ஈடுபட்டதில் மதுரை ஏரியாவில் மட்டும் சுமார் 11 வழக்குகள் இவர் மீது பதிவாக, நீண்ட நாள் மதுரை சிறைவாசத்தில் இருந்திருக்கிறார். அடிக்கடி அரசாங்க விருந்தாளியாக உள்ளே போன துரைமுருகனுக்கு மதுரை சென்ட்ரல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தேர்ந்த கிரிமினல்களுடன் பழகியதால் அவர்களிடம் கிரிமினல் டெக்னிக் அரிவாள்களை தூக்குமளவுக்கு கற்றுத் தேர்ந்த நொட்டோரியஸ் ரவுடியாக ரிலீஸ் ஆகியிருக்கிறார். எப்போதெல்லாம் ஜெயிலிலிருந்து வெளியே வருகிறாரோ அது சமயமெல்லாம் யாரையாவது போட்டுத்தள்ளுமளவுக்கு வெளியே தெரியாத தாதாவாகியிருக்கிறார்.
வெளியே வந்தவர் திருச்சிப் பகுதியின் ரவுடி ஆரோக்யராஜ், தூத்துக்குடியின் விஸ்வா, ராஜா என கூட்டாளிகளைச் சேர்த்துக் கொண்டு கொள்ளை திருட்டுகளின் மூலம் பணத்தைக் கொண்டு ஜாலியான வாழ்க்கையில் இருந்திருக்கிறார். களவு வழிப்பறியிலிருந்து ஆளைக் காலி செய்யுமளவுக்கு ரவுடியாக வளர்ந்த துரைமுருகன், காரண காரியமில்லாமல் ஆளைத் தீர்ப்பது. கேட்டது கிடைக்கவில்லை என்றால் ஸார்ட் டெம்ப்பரில் போட்டுத்தள்ளுவது, போதைக்காகவும் கொலை என்ற வெறித்தனமான சைக்கோ டைப் ரவுடி துரைமுருகன் என்கிறார்கள் இவரைப் பற்றி அறிந்த குற்றப் பிரிவு அதிகாரிகள்.
10 வருடங்களில் ரவுடியாக வளர்ந்தவர் பணத்திற்காக வாடகைக் கொலையாளியாகவும் செயல்பட்டுள்ளார். கொலை உள்ளிட்ட செயல்களில் தன் சகாக்களுடன் செல்கிற துரைமுருகன், தானே முன்னின்று ஆளைக்காலி பண்ணுகிற டைப்பாம். நிலையான கூட்டாளி என்றில்லாமல் அவ்வப்போது காரியத்திற்காக கூட்டாளிகளைச் சேர்த்துக் கொள்வார். மதுரை ஏரியாவில் திருடு மற்றும் கொலைச் செயல்களுக்கும் வாடகை கொலையாளியாக சென்ற துரைமுருகன், தனது கிரிமினல் நண்பர்களுக்காக, அடி தடி கொலைகளிலும் ஈடுபட்டு மாட்டிக் கொண்டார். ஜெயிலிலிருந்து திரும்பியதும் துரைமுருகன் தூத்துக்குடி முத்தையாபுரம் எல்லைக்குட்பட்ட ஏரியாவின் சீனிவாசன் என்பவரோடு மோதல் ஏற்பட அவரைக் கடத்திக் கொலை செய்து புதைத்திருக்கிறார். இவர் நடத்திய ஆரம்பக் கொலை தான் இது. இப்படிப் புள்ளியாக இருந்தவர் முதல் கொலையின் போதே அரிவாளைக் கை நடுங்கத் தூக்கியவருக்கு, அதன் பின் ஆளைத் தீர்ப்பதில் மூர்க்கத் தனமாகவே செயல்பட்டிருக்கிறார். பின்னர். 2003ல் தூத்துக்குடியின் தென்பாகம் காவல் எல்லைக்குட்பட்ட ஏரியாவின் செல்வன், ஸ்டாலின் இருவரையும் கடத்திச் சென்று கொலை செய்தவர் தூத்துக்குடியின் ராஜீவ் நகர்ப் பகுதியில் புதைத்திருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
தொடர்ந்து வாடகைக் கொலையாளியாகவும் செயல்பட்ட துரைமுருகன், 2010 திருவண்ணாமலை மாவட்டத்தின் வனப்புரம் பகுதியில் பாலமுருகன் என்பவரைக் கடத்திக் கொன்று புதைத்திருக்கிறார். வனப்புரம் காவல் நிலையத்தில் க்ரைம் நம்பர் 347/10 302வது பிரிவில் மேன் மிஸ்சிங் எனப் பதியப்பட்ட வழக்கில் குற்றவாளியானவர் துரைமுருகன். ஆனாலும் இன்றளவும் இந்த வழக்கில் துப்புக்கள் துலக்கப்படாமல் நிலுவையிலேயே உள்ளது. தொடக்க காலங்களில் தூத்துக்குடிப் பகுதியில் தன் உடன் பிறந்த சகோதரர்கள் மூன்று பேருடன் சேர்ந்து பன்றிகளை வெட்டிக் கொன்று கறி விற்பனை செய்து வந்தவர் பின்னர் ஆளைக்காலி பண்ணுவதற்காக அரிவாள்களை உயர்த்திய துணிச்சல் வந்த வழி இப்படித்தான் என்கிறார்கள்.
கூலிக்குக் கொலை செய்யும் பழக்கம் கொண்ட துரைமுருகன் 2011ன் போது மதுரை ஒத்தக்கடைப் பகுதியின் கொடிக்குளம் குமார் என்பவரின் மகள் மணிமொழி என்பவரைப் பணத்திற்காக கடத்திக் கொலை செய்து வழக்கமான அவரது பாணியில் புதைத்திருக்கிறார்.
பெண்கள் விஷயத்தில் படுவீக்கான துரைமுருகன் தூத்துக்குடியின் முருகன் என்பவரின் மனைவியோடு தொடர்பு வைக்க அவரை அடைய அவரது கணவன் முருகனையே தீர்த்துக்கட்டி அவரது வீட்டின் அருகேயே அடையாளம் தெரியாதபடி புதைத்திருக்கிறார். காரணமில்லாமல், தன்னிடம் எதித்துப் பேசினார் என்பதற்காக தன் நண்பனையே கொலை செய்த கொடூரனாகியிருக்கிறார்.
இது போன்று வழிப்பறி, கொள்ளை, கொலைகளை ‘நான்-ஸ்டாப்பாக’ செய்து கொண்டிருக்கும் துரைமுருகனை வழக்குப் பதிவான காவல் நிலையப் போலீசார் தீவிரத்துடன் தேடியிருக்கிறார்கள். ஒரு வழியாகச் சிக்கியவர் கடந்த நான்கு வருடங்களாக உள்ளே இருந்திருக்கிறார். அண்மையில் தான் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.
வெளியே வந்தும் கொலைத் தொழிலை விடவில்லை. அக்.05 அன்று தன் சகாக்களுடன் தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் சிவகாமிபுரத்திலிருக்கும் தன் சகோதரியைப் பார்க்கச் சென்ற துரைமுருகன் அதுசமயம் அங்கு நடந்த கோவில் கொடையின் போது கூட்டாளிகளுடன் மது அருந்தியிருக்கிறார். அந்த நேரம், அவருக்கும் அந்தப் பகுதியின் ஜெகதீஷ் என்பவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. ரவுடியான தன்னை எதிர்த்து ஜெகதீஷ் பேசியதை ஜீரணிக்க முடியாமல் துரைமுருகன், அவரோடு சமாதானமாகப் பேசியது போல் அப்போது நடந்து கொண்டிருக்கிறார். பிறகு, பூக்கடை ஒன்றில் வேலை பார்க்கும் 23 வயதுடைய ஜெயதீஷை நண்பர்களுடன் தனது காரிலேயே கூட்டி வந்திருக்கிறார்.
வரும் வழியில் ஆலங்குளம் பகுதியில் ஜெகதீஸைக் கொலை செய்து, நெல்லை நாகர்கோவில் சாலையிலுள்ள டக்கரம்மாள் புரத்தில் புதைத்திருக்கிறார். ஜெகதீஷ் தொடர்பாக விசாரணை போய்க் கொண்டிருந்தாலும் தகவலின் பேரில் கடந்த 12ம் தேதி டக்கரம்மாள்புரத்தில் புதைக்கப்பட்ட ஜெகதீஷின் உடலை போலீசார் தோண்டி எடுத்திருக்கிறார்கள். இந்தக் கொலையில் A.1. குற்றவாளியான துரைமுருகனை போலீஸ் தீவிரமாகத் தேடிய போது பதுங்க ஆரம்பித்திருக்கிறார். இது போன்று துரைமுருகன் மீது சுமார் 35 வழக்குகள் பதிவாகியுள்ளன. 8 மாவட்டங்களில் இவர் மீது பதியப்பட்ட வழக்குகளில் 21 வழிப்பறி, 8 கொலைகள், அடிதடி கொலை முயற்சி 6 வழக்குகள் என்ற புள்ளி விபரங்களைக் குறிப்பிடுகிறார்கள் விசாரணை அதிகாரிகள்.
இவரால், ஆள் கடத்திக் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை அடையாளம் கண்டு கொள்ளாமலிருக்க அடுத்த காவல் லிமிட் பகுதிகளுக்கு கொண்டு சென்று புதைக்கும் பழக்கம் கொண்ட துரைமுருகன், புதைத்த இடத்தில் மரவள்ளிக் கிழங்குச் செடிகளை ஊன்றிவிடுவாராம். நாளடைவில் பார்த்தீனியம் போன்று படரும் தன்மை கொண்ட மரவள்ளிக் கிழங்குச் செடியால் புதைத்த இடம் தெரியாமலேயே போய் விடும் என்பதால் தான் இந்த டெக்னிக்கைக் கையாண்டிருக்கிறாராம் ரவுடி துரைமுருகன். இதனால் பலரது உடல்களும் கிடைக்காமல் போயிருக்கின்றன என்கிறார்கள்.
தோண்டத் தோண்ட இதுபோன்ற பல வழக்குகளின் தலைவலியால் அவரைப் பிடித்து விடவேண்டுமென்ற தலைவலி போலீசுக்கும் உண்டாம். காவல்துறைக்கு கடும் தலைவலியான ரவுடி துரைமுருகனைப் பிடிக்க வேண்டுமென்ற தீவிரத்தில் போலீஸ் தேடுதல் வேட்டையை நடத்தியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமாரால் அமைக்கப்பட்ட எஸ்.ஐ. ராஜ்பிரபுவின் தலைமையிலான ஏட்டு டேவிட்ராஜன், சுடலைமணி சக்திமாரிமுத்து சண்முகையா உள்ளிட்ட டீம், துரைமுருகனின் சகோதரர் ஜெயராமனின் மகனான சுந்தர் ராஜ் கொலை வழக்கு தொடர்பாக தூத்துக்குடி போலீசாரிடம் சிக்கிய போது விசாரணையில் அவன் துரைமுருகன் பதுங்கியிருக்கும் இடம் அவர் தெரியப்படுத்த அத்தகவலால் எஸ்.ஐ.ராஜ்பிரபு தலைமையிலான தனிப்படை தூத்துக்குடி பக்கம் உள்ள முத்தையாபுரம் முள்ளக்காடு கோவங்காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த துரைமுருகனை வளைக்க அக். 15 அன்று மதியம் விரைத்திருக்கிறார்கள்.
அங்கே உள்ள ஒரு பாழடைந்த வீடு முன்பு ரவுடி துரைமுருகன் அவரது கூட்டாளிகளான ரவுடி ஆரோக்யராஜ் விஸ்வா, ராஜா, உள்ளிட்ட நான்கு பேர்கள் அமர்ந்திருக்கும் போது தனிப்படை அவர்களைச் சுற்றி வளைத்திருக்கிறது. போலீசைக் கண்டு திகைத்த ரவுடி துரைமுருகனும் அவரது சகாக்களும் தப்ப முயன்ற போது போலீசார், அவர்களை மடக்க அது சமயம் ஆக்ரோஷத்தில் தன்னிடமிருந்த அரிவாளால் ரவுடி துரைமுருகன் போலீசாரை வெட்டியிருக்கிறார். அதில் ஏட்டு டேவிட் ராஜனுக்கு கையில் வெட்டு விழுந்திருக்கிறது. அதைத் தடுக்க முயன்ற எஸ்.ஐ. ராஜ் பிரபுவின் இடது கையிலும் வெட்டு விழுந்திருக்கிறது.
ஏலேய், ஒடாதல நில்லு. இல்ல சுட்டுடுவேன் என எஸ்.ஐ. ராஜ் பிரபு தன்னிடமிருந்த பிஸ்ட்டலால் குறிவைத்தவர் எச்சரிக்கையாக வானை நோக்கி ஒரு ரவுண்ட் சுட்டிருக்கிறார். ஆனாலும் துணிச்சலான ரவுடி துரைமுருகன் தப்பி ஓட, அதன் பிறகே அவனைக் குறிவைத்துச் சுட்டிருக்கிறார் எஸ்.ஐ. தற்காப்பிற்காக அவர் சுட்ட முதல் குண்டு துரைமுருகனின் தொண்டைப் பகுதியில் பாய்ந்திருக்கிறது. அடுத்தடுத்த, 3 குண்டுகள் தோள் பட்டையிலும், அடிவயிற்றையும் துளைத்ததில் சுருண்டு விழுந்துவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தப்பியோடிய ரவுடி ஆரோக்யராஜாவை ஏட்டுக்கள் விரட்டிச் சென்று மடக்கியிருக்கிறார்கள்.
அடுத்த நொடி ரவுடி துரைமுருகன் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தென்மாவட்டத்தை அதிர வைத்திருக்கிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த எஸ்.பி.ஜெயக்குமார், நடந்தவைகளை விசாரித்திருக்கிறார்.
என்கவுன்ட்டர் சம்பவம் குறித்து நாம் எஸ்.பி.ஜெயக்குமாரிடம் பேசிய போது, “ரவுடி துரைமுருகன் மீது எட்டு மாவட்டங்களில் பல வழக்குகள். தூத்துக்குடிப் பகுதியிலுள்ள கொலைகள் மற்றும் பிற வழக்கிற்காக அவனை தேடிப்பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டதில் எஸ்.ஐ.ராஜ்பிரபுவின் தனிப்படை தகவலால் முள்ளக்காட்டு பகுதியில் பதுங்கியிருந்தவனைப் பிடிக்கப்போன போது 3 பேருடனிருந்த துரைமுருகனை வளைத்திருக்கிறார்கள். அவன் போலீசாரை வெட்டியதில் எஸ்.ஐ.க்கும் ஏட்டுவிற்கும் கைகளில் வெட்டு விழுந்திருக்கிறது. அதன் பிறகே எஸ்.ஐ. ராஜ் பிரபு ஒடாதேன்னு ஏர்சைடில் சுட்டு எச்சரித்த பின்பும் அவன் தாக்க முயன்றிருக்கிறான். தற்காப்பிற்காக எஸ்.ஐ.ராஜ்பிரபு சுட்டதில் ரவுடியின் கழுத்து வயிறு பகுதிகளில் குண்டு பாய்ந்திருக்கிறது. எப்போது ஜெயிலிலிருந்து வெளியே வருகிறானோ அப்போதெல்லாம் கொலையில் ஈடுபடுவதுண்டாம். விசாரணை நடந்து வருகிறது” என்றார் எஸ்.பி.