Skip to main content

தனக்கு ஃபோட்டோகிராஃபி, குழந்தைகளுக்கு கப் கேக்... இனி இதெல்லாம் முடியுமா? பிரியங்கா காந்தி பைட்ஸ்

Published on 24/01/2019 | Edited on 24/01/2019
priyanka gandhi


"என்னுடைய வழக்கமான நாளில், காலை எழுந்து, என் குழந்தைகளையும் எழுப்பி அவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வேன். பள்ளியை விட்டு என் குழந்தைகள் திரும்பி வரும்போது, எப்போதாவது அவர்களுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றை சாப்பிட தருவேன். அவர்களுக்குப் பிடித்தது கப் கேக்தான், அடிக்கடி அதை செய்வேன். அவர்கள் வீட்டுக்கு வந்தவுடன் ஹோம்வொர்க் செய்ய உதவுவேன். இதுதான் என்னுடைய வழக்கமான நாள்" - கடந்த 2009ஆம் ஆண்டு ஒரு தனியார் பத்திரிகை பேட்டியில் பிரியங்கா காந்தி பகிர்ந்தது. ஆனால், இனி இத்தகைய வழக்கமானதொரு நாள் அவருக்கு சாத்தியமில்லை என்றுதான் சொல்லவேண்டும். நேற்று உத்திரப்பிரதேசத்தில் அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கோட்டை என்று சொல்லப்படும் அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளில் ‘இந்திரா பேக்’ (Indira Back), ‘எங்களின் துர்கா தேவி நீங்கள்... நீங்கள் துர்கா தேவியின் அவதாரம்’ என்று வரவேற்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. ஆம், பிரியங்கா காந்தி இனி கிழக்கு உ.பி. பொதுச் செயலாளர். 
 

கடந்த வாரம் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்தது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸுக்கு இடம் ஏதும் கொடுக்கப்படவில்லை. தொடக்கத்தில் காங்கிரஸ் சார்பாக பேசியபோது, வேண்டுமானால் காங்கிரஸுக்கு இரண்டு சீட்டுகள் தருகிறோம் என்று பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து உ.பி. காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் 80 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவித்தார். அப்போது காங்கிரஸின் முடிவை பலர் கேலி செய்தார்கள். இந்த முடிவு பாஜகவுக்குத்தான் சாதகமாகும் என்றார்கள். ஆனால், அங்குதான் ட்விஸ்ட் ஒன்றை காங்கிரஸ் மேலிடம் வைத்தது. இதுவரை தன்னுடைய அம்மாவுக்கு, அண்ணனுக்கு உட்பட வெகுசில பிரச்சாரங்கள் மட்டும் செய்து வந்த பிரியங்கா காந்திக்கு கிழக்கு உ.பி.  பொதுச் செயலாளர் பதவியை கொடுத்து, அவரை முழுதாக அரசியலுக்குள் நுழையச் செய்துள்ளது.
 

priyanka gandhi


யாரும் எதிர்பார்க்காத இந்த ட்விஸ்ட், பலரால் வரவேற்கப்பட்டது. ட்விட்டரில் உலகளவில் ட்ரெண்டாகினார் பிரியங்கா காந்தி. சோனியா காந்தி முதன் முதலாக தேர்தலில் போட்டியிட்டபோதே, அவருக்காக பிரச்சாரம் செய்யத் தொடங்கியவர் பிரியங்கா காந்தி. அந்தத் தருணத்திலிருந்து தற்போதுவரை மக்களிடம் அவருக்கு மிகப்பெரிய மாஸ் இருக்கிறது. காரணம் மக்களோடு மக்களாக ஒன்றி இவர் இருப்பார் என்பதுதான். இன்னுமொரு காரணம், அப்படியே இந்திரா காந்தியை உறித்து வைத்த சாயல், அதுவும் பலரை ஈர்த்திருக்கிறது. பாஜக இதை, 'ஒரு குடும்பமே ஒரு கட்சிக்குள் பதவி வகிக்கிறது, குடும்ப அரசியல் செய்கிறார்கள். ஆனால், பாஜகவில் தொண்டர்கள்தான் கட்சியை நடத்துகிறார்கள்' என்றது.
 

சமீபத்தில் நடந்த ஐந்து மாநில தேர்தலில், காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் ஆட்சியை பிடித்திருந்தாலும், ஏற்கனவே தக்க வைத்திருந்த மாநிலத்தில் ஆட்சியை விட்டது பலருக்கு யோசனையை கொடுத்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் அலை வீசுமா, வீசாதா என்பது உறுதியாக சொல்ல முடியாத ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், பிரியங்காவுக்கு இந்தப் பதவியை கொடுத்தபின் காங்கிரஸ் மிகப்பெரிய அடி எடுத்து வைத்திருக்கிறது. இதனால் சோர்வாக இருக்கின்ற காங்கிரஸ் தொண்டர்கள் குஷியாக கட்சி வேலைகளை எடுத்து செய்வார்கள், இது ஒரு மாற்றத்தை கொடுக்கவல்லது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை அடுத்து, வட இந்தியாவிலுள்ள காங்கிரஸ் தொண்டர்கள் பலர் பிரியங்காவுக்கு பதவி கொடுத்து அரசியலுக்கு அழைத்து வாருங்கள் என்ற கோரிக்கை இருந்தது. அது தற்போது காங்கிரஸ் மேலிடத்திற்கு கேட்டிருக்கிறது போல.
 

priyanka gandhi


காங்கிரஸ்காரர்கள் இவ்வளவு கொண்டாடும் பிரியங்கா காந்தி, ராஜிவ் - சோனியா மகள் என்பதைத் தாண்டி யார் என்று பார்ப்போம்...
 

பிரியங்கா காந்தி, 12ஆம் தேதி ஜனவரி 1972ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோருக்கு மகளாய் பிறந்தார். தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி இவருடைய அண்ணன் ஆவார். நேரு குடும்ப  வாரிசுகளான இவர்கள் அனைவரும் இந்திய அரசியலில் மிகப்பெரிய பங்காற்றி வருகிறார்கள். அதில் மறைமுகமாக பங்காற்றி வந்த பிரியங்கா தற்போது வெளிப்படையாக அரசியலில் குதித்துள்ளார். டெல்லியிலுள்ள மாடர்ன் ஸ்கூல் அண்ட் கான்வென்ட் ஆஃப் ஜீஸஸ் அண்ட் மேரி பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து ஜீஸஸ் அண்ட் மேரி கல்லூரியில் உளவியலில் இளநிலை படிப்பை முடித்தார். அதன் பின்பு 2010ஆம் ஆண்டில் புத்திசம் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறார். மேலும் புத்திஸ தத்துவத்தை ஆழ்ந்து பயின்றிருக்கிறார். விபஸன்னா தியான பயிற்சியும் பெற்றிருக்கிறார். தன்னுடைய 12 வயதிலிருந்து இவர் ஃபோட்டோகிராஃப்கள் எடுத்து வருகிறார், ராஜிவ் காந்திக்கும் ஃபோட்டோகிராஃபி மிகவும் பிடித்த ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1997ஆம் ஆண்டு ராபர்ட் வதேரா என்னும் பிசினஸ் மேனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உண்டு. தன்னுடைய அம்மா சோனியா காந்தி 1999ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்று,  அமேதி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவருக்காக முதன் முதலில் பிரச்சாரம் மேற்கொள்ளத் தொடங்கினார் பிரியங்கா காந்தி.  பிரச்சாரம் என்றால் சாதாரணமாக மேடையில் பேசிவிட்டு செல்வதல்ல, அந்தத் தொகுதியிலு்ள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று அந்த மக்களிடம் உரையாடி பிரச்சாரம் செய்தார். இதுபோல் 2004ஆம் ஆண்டில் ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட்டபோதும், அம்மாவுக்கும் அண்ணனுக்கும் உதவியாக பிரச்சாரம் மேற்கொண்டார். 2007ஆம் ஆண்டு ராகுல் உ.பி மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய, பிரியங்கா அமேதி, ரேபரேலி உட்பட பத்து தொகுதிகள் முழுவதும் இரண்டு வாரங்கள் தங்கி பிரச்சாரம் மேற்கொண்டார். தற்போது கட்சியிலேயே ஒரு முக்கியமான பதவி இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்...