Skip to main content

மய்யமா மையமா? இல்லை ரெண்டுமா - கமல் கட்சி, கொடி விளக்கங்கள்! 

Published on 23/02/2018 | Edited on 23/02/2018

கமல்ஹாசன் ஒரு வழியாக கட்சியைத் தொடங்கிவிட்டார். முன்னர் கமல் போடும் ட்வீட்களை பார்க்கும் மக்கள், "இது இதுவாக இருக்குமா, இது அதுவாக இருக்குமா, இவரைச் சொன்னாரா அவரைச் சொன்னாரா " என்று யோசித்துக்கொண்டிருப்பார்கள். ஆனால், கட்சி விஷயத்தில் நெடுநாட்கள் குழப்பாமல், தொடங்கிவிட்டார். இப்போது (கட்சி பெயரை அறிவித்தபின்) இது 'மையமா' இல்லை 'மய்யமா', 'மையம்'க்கும் 'மய்யம்'கும் என்ன வித்தியாசம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். நாங்களும் யோசித்த போது கிடைத்த விடை இது... 

மக்கள் நீதி மய்யம்
கமல் கட்சிப் பெயரை அறிவிக்க போகிறார் என்று சொன்னவுடனே பலரும் கட்சி, கழகம் என்று வழக்கமானதொரு பெயராக இருக்காது என்று யூகித்தனர். எதிர்பார்த்தபடியே கட்சி, கழகம் என இல்லாமல்  "மக்கள் நீதி மய்யம்" என்று வைத்தார். இந்த 'மய்யம்' என்ற சொல்லுக்குப் பின் ஒரு வரலாறு உள்ளது. பெரியார் 1935ல் தமிழ் மொழியில் எழுத்து சீர்திருத்தத்தை செய்தார். அதில் ஐ, ஒள மற்றும் அதன் வரிசை எழுத்துக்கள் இருக்காது. அந்த எழுத்துக்களுக்கு பதிலாக  அய், அவ் என பயன்படுத்தச் சொன்னார். இதன் மூலம்  எழுத்துக்களின் எண்ணிக்கை குறையும் என விளக்கினார். எழுத்துச் சீர்திருத்தத்தின் அடிப்படையில்தான்  "ஐயா" என்பது "அய்யா" எனவும்  "ஒளவை" என்பது " அவ்வை" எனவும் ஆனது.  இதனால்தான் இன்றுவரை விடுதலை உள்ளிட்ட திராவிடர் கழக ஏடுகளில் எழுத்துக்கள் மாற்றி பயன்படுத்தப்படுகிறது. அது போலத்தான்  "மையம்" என்பது "மய்யம்" என்றானது. கமலும் எழுத்து சீர்திருத்தத்தின் அடிப்படையில்தான் "மய்யம்" என பெயர் வைத்தார். தன்னை ஆரம்பத்திலிருந்தே பெரியாரை பின்பற்றுபவராக, பகுத்தறிவுவாதியாக வெளிப்படுத்தும் கமல், கட்சிக்கு பெயர் வைப்பதிலும் அதையே வெளிப்படுத்தியுள்ளார். பெரியார் சீர்திருத்தத்திற்கு முன்பே தமிழின் இலக்கணமான  தொல்காப்பியத்தில் , "ஐ" வரிசை எழுத்துகளுக்கு அருகில் உயிரெழுத்து வரும்போது அதை இரண்டு விதமாகவும் (மையம், மய்யம்) எழுதலாம் என்ற விதியும்  உள்ளதென்று தமிழறிஞர்கள் கூறியுள்ளனர். 

makkal needhi maiam


'மய்யம்' என்ற பெயர் நெடுங்காலமாக கமலுடன் பயணித்து வருகிறது. ஆரம்பத்தில் அவர் நடத்திய இதழுக்கும் பின்னர் அவர் தொடங்கிய இணைய இதழ், யூ-ட்யூப் சானல் அனைத்திற்கும் 'மய்யம்' என்ற பெயரையே பயன்படுத்தினார். அரசியலுக்கு வருவதை உறுதி செய்து கடந்த நவம்பர் 7 அன்று தனது பிறந்த நாளில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் அறிமுகப்படுத்திய ஆண்ட்ராய்ட் செயலியின் பெயர் 'மய்யம் விசில்' என்றே இருக்கிறது. அவர் ஒரு வார இதழில் எழுதும் தொடரும் 'என்னுள் மையம் கொண்ட புயல்' என்ற பெயரில் இருக்கிறது. இவ்வாறு 'மய்யம்' என்ற பெயர் கமலின் மனதுக்கு மிகவும் நெருக்கமான பெயர்.

கட்சியின் கொடி:
கட்சிக்கொடியில் ஆறு இணைந்த கைகளுக்கு நடுவில் ஒரு ஆறு முனைகள்கொண்ட நட்சத்திரம் இருக்கிறது. அதற்கு கமல் அளித்த விளக்கம், "ஆறு கைகள் தென்னிந்தியாவின் ஆறு மாநிலங்களை குறிக்கும் (தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி). இது தென்னிந்தியாவின் புது வரைபடம். நடுவில் இருக்கும் நட்சத்திரம்தான் மக்கள்" என்று கூறினார். 
மக்கள் நீதி மய்யத்தின் 'லோகோ' (இலச்சினை) போலவே ஏற்கனவே சில லோகோக்கள் உள்ளன. அவற்றையும் காண்போம். 

 

SEMBOOR

NFPE

மும்பை செம்பூரில் உள்ள தமிழ் பாசறையின் லோகோவும் ஆறு இணைந்த கைகள்தான். இது மும்பை தமிழ் மக்களை இணைக்கும் அமைப்பு. அந்த லோகோவில் இருக்கும் கைகள் சிவப்பு, மஞ்சள் நிறத்தில் இருக்கும். கைகளுக்கு நடுவே "அ" எழுத்து இருக்கும்.
தபால் ஊழியர்களின் கூட்டமைப்பு அமைப்பின் லோகோவும் இணைந்த கைகள்தான். அந்த கைகள் சிவப்பு நிறத்தில் இருக்கும். கைகளுக்கு நடுவே "NFPE" என இருக்கும். இந்த இரண்டு லோகோக்களிலும் கைகள் கடிகாரம் சுற்றும் திசையில் இருக்கும். மக்கள் நீதி மய்யத்தின் லோகோ அதற்கு எதிர்புறம் இருக்கும். சமூக ஊடகங்களில் சிலர், கமல்ஹாசன் சின்னத்தைக் கூட திருடியிருக்கிறார் என்று மீம்ஸ் போடுகின்றனர். 

RAJAபா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவும் இது தொடர்பாக ஒரு ட்வீட் போட்டார். "ஏக் பாரத் ஸ்ரேஷ்ட் பாரத்தி'ன் லோகோவை  anticlockwise ல் போட்டால் மநீம" என அந்த ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார். 

எது எப்படியோ தமிழக அரசியலில் ஒரு புதிய கட்சி, சமூக ஊடகங்களுக்கு ஒரு புதிய 'மீம் மெட்டீரியல்', தொலைக்காட்சிகளுக்கு ஒரு புதிய விவாதப் பொருள் கிடைத்திருக்கிறது. இது மக்களுக்குக் கிடைத்த மாற்றமாக ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

 

Next Story

லஞ்சம் லஞ்சம் லஞ்சம்... விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தைக் கதறவிட்ட ‘இந்தியன் 2’

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
 Villupuram Collectorate noticed with the name 'Indian 2' has been pasted

தமிழகம் முழுவதும் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு தங்களின் கோரிக்கைகள், புகார்கள், குறைகள் எனப் பலவற்றையும் மனுவாகக் கொடுத்துத் தீர்வு கண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த திங்கட்கிழமை விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் நடந்தது. 

அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆண்கள் கழிவறையின் கதவுக்குப் பின்னால் யாரோ ஒரு மர்ம நபர் ஓட்டிய நோட்டீஸில், “அலுவலகத்திற்கு வரும் ஏழை, எளிய, பாமர மக்களின் குறைகளைப் பூர்த்தி செய்யுங்கள்; ஏழை, எளிய மக்களின் கோரிக்கை மனுவை வாங்கி உதவி செய்யுங்கள். லஞ்சம் வாங்காமல் பணியை செய்யுங்கள்:” என்று குறிப்பிட்டு கடைசியாக இந்தியன் 2 என்று எழுதிவைத்துவிட்டுச் சென்றுள்ளார். இதனைப் பார்த்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

குறைத்தீர்க்கும் முகாமில் மனு அளித்தவர்களில் யாரோ ஒருவரின் கோரிக்கை நிறைவேறாததால்தான் இப்படி விரக்தியில் எழுதி வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான 'இந்தியன் 2' படத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதற்கும், வேலை வாய்ப்பை பெறுவதற்கும் மக்களிடம் லஞ்சம் கேட்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இந்தியன் தாத்தா தேடிச் சென்று பழி வாங்குவது போன்று கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். மேலும் 'இந்தியன்' முதல் பாகத்தில், 'லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் தண்டிக்கப்படுவார்கள்..' என்று கடிதம் இடம்பெற்றிருக்கும். தற்போது அதேபோன்று ஒரு கடிதத்தை யாரோ ஒரு மர்ம நபர் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஒட்டிச்சென்றுளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“கமல்ஹாசனின் நடிப்பை அதிகளவில் பார்க்க முடியும்” - இந்தியன் 2 குறித்து ஷங்கர்

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Shankar on Indian 2 to praise kamalhaasan

கமல் - ஷங்கர் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் இந்தியன் 2. இப்படம் இந்தியன் 3 ஆகவும் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் இசை வெளியிட்டு விழா, கடந்த ஜூன் 1ஆம் தேதி சென்னை உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. 

இந்த நிலையில், இந்தியன் 2 படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக இருக்கிறது. இது தொடர்பாக இன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில், இந்தியன் 2 படத்தின் படக்குழு கலந்து கொண்டது. அதில் பேசிய இயக்குநர் ஷங்கர், “இன்றைய காலக்கட்டத்தில் இந்தியன் தாத்தா வந்தால் எப்படி இருக்கும் என்பது தான் இந்தியன் 2. முதல் பாகமாக இந்தியன் படம் தமிழ்நாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்தியன் 2 தமிழ்நாட்டை தாண்டி மற்ற மாநிலங்களில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையாக எடுக்கப்பட்டுள்ளது. 

முதல் பாகத்தில், 40 நாட்கள் சிறப்பு மேக்கப் (பிராஸ்தெட்டிக் மேக்கப்) போட்டு கமல் நடித்திருந்தார். ஆனால், இந்த படத்தில், சுமார் 70 நாட்கள் சிறப்பு மேக்கப் போட்டு கமல் நடித்திருக்கிறார். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பின் இறுதி நேரம் வரை கமல்ஹாசன் மிகவும் அர்ப்பணிப்போடு நடித்தார். முதல் பாகத்தில் இந்தியன் தாத்தாவின் மேக்கப் கமல்ஹாசனின் நடிப்பை முழுமையாக பார்க்க விடாமல் செய்தது. ஆனால், இந்த படத்தில், கமல்ஹாசனின் நடிப்பை முதல் பாகத்தில் இருந்ததை விட அதிகளவில் பார்க்க முடியும்” என்று கூறினார்.