Skip to main content

அரசியல் காரணம் தவிர்த்து பெட்ரோல், டீசல் விலை உயர காரணம் என்ன???

Published on 28/05/2018 | Edited on 28/05/2018

பெட்ரோல் விலை இனி தினமும் மாற்றியமைக்கப்படும் 2017 ஜூனில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கர்நாடகா தேர்தலின்போது மட்டும் எந்த மாற்றமுமில்லாமல் இருந்தது, அதன்பின் 15 நாட்களாக பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு அரசியல் காரணம் ஆயிரம் உண்டு. எனினும் நாம் இப்போது அரசியல் காரணங்களை விடுத்து மற்ற எந்தெந்த காரணங்களுக்காக பெட்ரோல், டீசல் விலை உயரும் என்பதைப் பார்ப்போம்.

 

petrol


 

 

 

கச்சா எண்ணெய் விலை:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் மாற்றம் ஏற்பட்டால்  அது நேரடியாக விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். பெட்ரோலின் விலை உயர்வுக்கு முக்கிய காரணியாக இருப்பது கச்சா எண்ணெய் விலைதான். சர்வதேச அளவில் பெட்ரோலின் தேவை அதிகரிக்கும்போதும், குறைவான உற்பத்தியின்போதும், விலை உயரும்.

 

அரசியல் காரணிகள்:
கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாட்டிற்கும், கொள்முதல் செய்யும் நாட்டிற்குமிடையே அரசியல் ரீதியாக ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அது உலகம் முழுவதிலும் பெட்ரோல், டீசல் விலையில் ஒரு சிறு மாற்றத்தை கொண்டுவரும்.

 

 

 

தேவை அதிகரிப்பு:
தற்போதைய இந்தியாவின் நிலை பெட்ரோல் மற்றும் ஏனைய எரிபொருள்கள் தேவையை அதிகரிக்க செய்கிறது. எடுத்துக்காட்டாக சொந்தமாக வாகனங்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதால் பெட்ரோல் தேவை அதிகரித்துள்ளது. இதுபோன்ற தேவைகளால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுகிறது. ஒரு பொருள் தேவை இன்றியமையாததாக மாறிவிட்டால், அது எவ்வளவு விலையாக இருந்தாலும் மக்கள் அதனை வாங்க முற்படுவர். அதுவும் விலை ஏற்றத்திற்கு காரணமாக அமைகிறது.

 

சரியான விநியோகம் செய்யாதது மற்றும் தேவை:
கச்சா எண்ணெய்யின் விலையால் இந்தியாவின் முழு தேவைக்குமான எண்ணெயை, எண்ணெய் நிறுவனங்களால் வாங்க இயலாது. அதனாலும் இங்கு ஒரு பற்றாக்குறை இருந்துகொண்டே இருக்கும் இதுவும் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். இது இல்லாமல், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும், சந்தை நிறுவனங்களும் கச்சா எண்ணெய்யை 6 வாரங்களுக்கு தேவையான பெட்ரோலிய பொருட்களை இருப்பு வைத்திருக்கும், இதுவும் பெட்ரோல் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

 

 

 

வரி:
மாநில அரசாங்கத்தின் வரிகளால் ஒவ்வொரு மாநிலத்திலும் பெட்ரோலிய பொருட்களின் விலை மாறுபடும். இந்திய அரசாங்கம் எப்பொழுது அதிக வரியை பெட்ரோலியத்துக்கு நிர்ணயித்ததோ, அப்பொழுதே நிறுவனங்கள் லாபம் பெறுவதற்காகவும், இழப்பை சரி செய்யவும் விலையை உயர்த்த தொடங்கிவிட்டன.

 

ரூபாய் மதிப்பில் ஏற்படும் மாற்றம்:
டாலருக்கு நிகரான இந்திய மதிப்பில் ஏற்படும் மாற்றம் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

 

போக்குவரத்து செலவுகள்:
அந்தந்த ஊர்களுக்கு பெட்ரோலிய பொருட்களை கொண்டுவர ஆகும் செலவுகளும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.