நெல் ஜெயராமன், தமிழக விவசாயிகளில் மிக முக்கியமானவர், தமிழக விவசாயிகளுக்கும் மிகவும் முக்கியமானவர். தன்னை சுற்றியுள்ள மக்களுக்காகவும், அவர்களது எதிர்கால சந்ததிகளுக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்தவர். பாரம்பரியமற்ற நெல் மூலமும், அது வளர்க்கப்படும் முறைகள் மூலமும் வரும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர், இன்று அதே புற்றுநோயின் காரணமாக நம்மையும், அவர் நேசித்த விவசாயத்தையும் பாதியில் பிரிந்து சென்றுள்ளார்.
51 வயதான நெல் ஜெயராமன், 1968ஆம் ஆண்டு ஏப்ரல் 15ல் விவசாய பூமியான டெல்டாவின் திருவாரூர் மாவட்டத்தில் ஆதிரெங்கம் எனும் கிராமத்தில் பிறந்தார். சிறு வயது முதல் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில் நடந்த சூழலில் வளர்ந்த அவருக்கு இயற்கையாகவே அதன் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இளைஞராக இருந்த காலம் முதல் விவசாயத்தில் ஈடுபட்ட இவருக்கு, ஆரோக்கியமான பாரம்பரிய நெல்களை விடுத்து, கேடு தரும் புதிய வகை நெல்களுக்கு மாறுவதில் விருப்பம் இல்லை. மேலும் நெல் வளர்ப்பும் ரசாயன உரங்கள் இல்லாமல் இயற்கை முறையிலேயே வளர்க்க வேண்டும் என விரும்பினார்.
ரசாயன உரங்கள் மற்றும் பாரம்பரியமற்ற நெல் வகைகள் காரணமாகவே புற்றுநோய், மரபணு சம்பந்தப்பட்ட வியாதிகள் உள்ளிட்டவை வருவதாக அறிந்த அவர் இயற்கை மற்றும் பாரம்பரிய விவசாயம் நோக்கி மேலும் தீவிரமாக நகர ஆரம்பித்தார். விவசாயத்தை பற்றிய இவரின் தேடலின் பொழுது, இவரை போலவே விவசாயத்தின் மீது அக்கறை கொண்ட நம்மாழ்வாரின் நட்பு கிடைத்தது. அவருடனான உரையாடல்கள், அவரின் அறிவுரைகள் காரணமாக பாரம்பரிய நெல் வகைகளை மீட்க வேண்டும் என்ற திட்டம் தீவிர செயல் வடிவம் பெற்றது. இதன் காரணமாகவே நமது பாரம்பரிய நெல் ரகங்களை தேடித்தேடி சேகரிக்க ஆரம்பித்தார். பல ஊர்களுக்குச் சென்று , பலரை சந்தித்ததன் மூலம் பல நெல் வகைகளை திரட்டினார். அப்படித்தான் நாம் இழந்த 174 நெல் வகைகளை மீட்டெடுத்தார்.
இதனை அனைத்து விவசாயிகளுக்கும் பங்கிடும் பொருட்டு 2005ல் அவர் ஆரம்பித்ததே நெல் திருவிழா. இதன் மூலம் மீட்டெடுக்கப்பட்ட நெல் வகைகள் பல மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டன. 13 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த நெல் திருவிழாவில் பல மாவட்ட விவசாயிகள் பங்கேற்கின்றனர். வருடா வருடம் அவரது சொந்த ஊரான ஆதிரெங்கம் கிராமத்தில் நடைபெறுகிறது. மேலும் டெல்டா விவசாயிகளுக்கு பாரம்பரிய பயிர் வளர்ப்பு முறைகள் பற்றிய பயிற்சியும் அளித்து வந்தார். 90களின் பாதியில் நுகர்வோர் கூட்டமைப்பு என்ற என்.ஜி.ஓ அமைப்பில் சேர்ந்து, அதில் விவசாய பயிற்சி அதிகாரியாகவும் சேவையாற்றினார். 2011 ல் சிறந்த இயற்கை விவசாயி என்ற மாநில விருதையும், 2015 ல் சிறந்த பாரம்பரிய மரபணு காப்பாளர் என்ற இந்திய அரசின் விருதினையும் பெற்றார். கிட்டத்தட்ட 300 பள்ளி, கல்லூரிகளுக்கு மேல் சென்று மாணவர்கள் மத்தியில் விவசாயம் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி உரையாற்றியுள்ளார்.
இவரைப் பற்றி அறியாதவர்களுக்கு 'அப்படி என்ன செய்திருக்கிறார் நெல் ஜெயராமன்?' என்ற கேள்வி எழலாம். தற்காலிக லாபத்தை கருத்தில் கொள்ளாமல் ஒட்டுமொத்த சமூகத்தின் உடல்நலத்தை, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஒரு இயக்கமாக செயல்படுவது எல்லோரும் செய்வதல்ல. தோல் புற்றுநோய் காரணமாக இன்று இவர் நம்மை விட்டு சென்றிருந்தாலும், இவரின் சேவை பல தலைமுறைகளை காக்கும் ஆற்றல் கொண்டது. இவரின் விவசாயம் பற்றிய கொள்கைகளையும், செயல்முறைகளையும் பின்பற்றுவதே நாம் இவருக்கு செய்யும் இறுதி மரியாதையாக இருக்கும்.