Skip to main content

என்னை எதிர்த்து கூட்டமா...? கொதித்த இந்திரா காந்தி; ஆட்சியை கலைக்க ஒத்தக் காலில் நின்ற தமிழக காங்கிரஸ் - காந்தராஜின் நேரடி அனுபவங்கள்

Published on 28/11/2022 | Edited on 28/11/2022

 

ரகத

 

இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட சம்பவத்தை யாரும் அவ்வளவு மறந்திருக்க முடியாது. இந்தியாவில் கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் அமலிலிருந்த இந்த சட்டத்தை அப்போது பதவியிலிருந்த இந்திரா காந்தி நாட்டில் அமல்படுத்தினார். இந்தியாவில் பெரிய அளவிலான களேபரங்கள் நடைபெறுவதற்கு மூலகாரணமாக இருந்த இந்த அவசர நிலை பிரகடனம் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் இன்றளவும் இருந்து வருகிறது. இதன் அடிமூலம் எதிலிருந்து துவங்குகிறது; இதில் பாதிக்கப்பட்டவர்கள் யார் யார் போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் பிரபல அரசியல் விமர்சகர் காந்தராஜ். அவரிடம் இதுதொடர்பாக நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 


இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது அதனை அருகிலிருந்து பார்த்தவர், சிறைக்குச் சென்று அங்குக் கைது செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவம் பார்த்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறது. எதற்காக இந்த அவசர நிலை மேற்கொள்ளப்பட்டது, என்ன காரணம்?

 

இந்தியாவில் இந்திரா காந்தி ஆட்சியிலிருந்தபோது இந்த அவசர நிலை கொண்டு வரப்பட்டது. அவர் அதற்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் சட்ட விரோதமாகத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் எனக்கூறி ராஜ் நாராயணன் என்பவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மூன்று ஆண்டுகள் நடைபெற்ற இந்த விசாரணை நிறைவில் இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. ஏற்கனவே இந்திரா மீது அப்போது நாடு முழுவதும் அதிருப்தி அதிகம் இருந்த நேரம் என்பதால் என்ன செய்வது என்று பிரதமர் இந்திராவும் அவரது மகனுமான சஞ்சய் காந்தியும் தீவிரமாக யோசித்து வந்த நிலையில் மகனின் ஆலோசனைப்படி இந்திரா காந்தி இந்தியாவில் உள்நாட்டு பாதுகாப்புக்குப் பிற நாடுகளால் ஆபத்து எனக்கூறி அவசரநிலையை அமல்படுத்தினார்.

 

சிறப்புச் சட்டம் மூலம் நாட்டில் அவசரநிலையை எதிர்த்துக் கேள்வி கேட்ட அனைவரையும் சிறையில் அடைந்தார். எதிர்க்கட்சிகளின் குரல்வளைகள் நசுக்கப்பட்டது. எதிர்த்து எந்த பத்திரிகைகள் எல்லாம் கேள்வி எழுப்புகிறதோ அதை எல்லாம் தடுத்தார். நிர்வாகிகளைச் சிறையில் அடைந்தார். வட இந்தியத் தலைவர் அனைவரையும் சிறையில் தள்ளினார். சிறையில் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இது இந்தியா முழுவதும் இருந்தாலும், தமிழகத்தில் அதற்கு நேர்மாறான சூழ்நிலையே ஆரம்பத்திலிருந்து இருந்து வந்தது. தமிழகத்தில் அப்போது திமுக தலைமையிலான அரசு பதவியிலிருந்தது. அதனால் வட இந்தியத் தலைவர் கூட பாதுகாப்புக்காகத் தமிழகம் வந்து தங்கியிருந்தனர். மேலும் திமுக தலைமையிலான அரசு இதனைக் கண்டித்து கடற்கரையில் எதிர்ப்பு கூட்டம் போட்டது.

 

அந்தக் கூட்டத்தில் மூன்று லட்சம் பேர் வரை கலந்துகொண்டார்கள். அதில் நானும் ஒருவன். அந்தக் கூட்டத்தில் நாவலரின் உரை மிக உணர்ச்சிகரமாக இருந்தது. இதற்கு முன்பு அவர் அப்படிப் பேசி யாருமே பார்த்திருக்க முடியாது. பசு கன்றுக்குத்தான் பால் கொடுக்கும் என்று கூறி இந்திரா தனது மகனுக்குத்தான் எல்லாவற்றையும் செய்கிறார் என்று தனக்கே உரிய எதுகை மோனையில் பின்னி பெடலெடுத்தார். அங்குப் பேசிய அனைவரின் உரையுமே மிக ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் இருந்தது. கலைஞர் கடைசியில் தீர்மானம் வாசிக்க அதனை அங்குத் திரண்ட அனைவரும் திரும்பக் கூறி உறுதி ஏற்றுக்கொண்டோம். 

 

இந்த சம்பவம் டெல்லியிலிருந்த இந்திரா காந்திக்கு உறுத்தியது. நம்மைத் தமிழ்நாட்டில் எதிர்க்கிறார்கள் என்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அனுமதிக்கக் கூடாது என்ற எண்ணமும் அவர்களுக்கு ஏற்பட்டது.  குறிப்பாகத் தமிழக காங்கிரஸ் கட்சியினர் திமுக ஆட்சியைக் கலைத்தே தீர வேண்டும் என்று டெல்லிக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். இந்த செய்தி தமிழக அரசுக்குத் தெரிய வந்த நிலையில், என்ன நிலவரம் என்று டெல்லி சென்று பார்த்து வர அப்போதைய மந்திரியும் என்னுடைய அண்ணனுமான ராஜாராம் அவர்களை டெல்லி அனுப்பினார் கலைஞர். அவர் டெல்லி சென்று சூழ்நிலைகள் ஒன்றும் தவறான முறையில் இல்லை என்று கூறிய நிலையில், சரியாக ஆறு மணி அளவில் திமுக ஆட்சி கலைக்கப்படுவதாகச் செய்தி வெளியானது. அதன் பிறகு தமிழகத்தில் நடைபெற்றது எல்லாம் பெரிய வரலாறாக மாறிப்போனது.