ஏப்ரல் 1, முட்டாள்கள் தினம், ஒருவரை ஒருவர் விளையாட்டாக ஏமாற்றி மகிழும் தினமாகக் கொண்டாடுகிறோம். ஆனால், வாழ்க்கையில் நாம் ஒருவரை ஏமாற்றினால், நூறு பேர் நம்மை ஏமாற்றுவார்கள். வருடம் முழுவதும் அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் ஏமாற்றிக்கொண்டிருக்க எதற்கு தனியாக முட்டாள்கள் தினம் என்று கூறுபவர்களும் உண்டு.
நாம் பாபநாசம் படத்தில் சுயம்புலிங்கம் போலீசை ஏமாற்றியதையும், சதுரங்க வேட்டை படத்தில் காந்திபாபு அனைவரையும் ஏமாற்றியதையும் பார்த்திருப்போம். ஆனால் இது உண்மையாக நடந்தது என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம் அதே போன்ற சம்பவங்கள் உண்மையாகவும் நடந்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 27 மானாமதுரையில் ஒரு கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களை கைது செய்ய காரணம் என்னவென்று தெரியுமா... கண்ணாடி கற்களை வைரக்கற்கள் என்று கூறி ஏமாற்றியதுதான். இப்படி யாராவது ஏமாறுவங்களா அப்படினு கேக்காதீங்க அந்தளவிற்கு திட்டமிட்டு ஏமாற்றப்பட்டிருக்கிறார் பாதிக்கப்பட்டவர். ஏதாவது ஒரு பொது இடத்தில் நகையுடன், பணத்துடன் இருப்பவர்களில் ஏமாற்ற முடியும் என நினைப்பவர்கள் அருகில் இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் நிற்பார்கள். அவர்களிடம் ஒருவர் வந்து, நான் வெளிநாட்டிலிருந்து வருகிறேன், என்னிடம் ஊருக்குச் செல்ல பணம் இல்லை, வைரக்கற்கள் மற்றும் விலையுயர்ந்த கற்கள் மட்டுமே உள்ளன. நான் ஊருக்கு செல்ல வேண்டும், என்னிடம் பணம் இல்லை என்று கூறுவார். உடனே இவர்கள் கும்பலை சேர்ந்த சிலர் தங்களிடம் உள்ள பணம், நகைகளை கொடுத்து கல்லை பெற்றுக்கொள்வார்கள். இதைப்பார்க்கும் இந்த ஏமாந்தவரும் தன்னிடம் இருக்கும் நகைகள், பணத்தைக் கொடுத்து அந்தக் கற்களை வாங்கிவிடுவார். இப்படி இவர்கள் பலரை ஏமாற்றியுள்ளனர். கற்களைத் தவிர, போலி தங்க பிஸ்கட்டுகளும் இதில் அடக்கம்.
இரிடியம் என்பது ஒரு தனிமம். உலகில் மிக விலையுயர்ந்த ஆபரணமான பிளாட்டினத்திற்கு முந்தைய நிலை. பிளாட்டினம் கிடைப்பது அரிது என்றால், இரிடியம் கிடைப்பது அரிதிலும் அரிது. இதை வீட்டில் வைத்தால் செல்வம் கொழிக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இதனால் இதற்கு கள்ளச் சந்தையில் மதிப்பு அதிகம். இதை பயன்படுத்திக் கொள்ளும் ஏமாற்றுக்காரர்கள், பலரிடம் இரிடியம் இருப்பதாகக் கூறி ஏமாற்றுகிறார்கள். இந்த வரிசையில் நாம் பார்க்க போகிறவர் ஒரு மிகப்பெரிய விஞ்ஞானி. ஊர் திருவண்ணாமலை. ஆம், அப்படி கூறித்தான் ஊரை ஏமாற்றினார் அவர். இரிடியத்தைக் கண்டுபிடித்து தருவதாகக் கூறி ஏமாற்றியுள்ளார். எப்போதும் ஒரு செம்புப் பாத்திரத்தை வைத்து ஆராய்ச்சி செய்துகொண்டே இருந்தவர் ஒரு நாள் திடீரென காணாமல் போய்விட்டார். இதைத் தொடர்ந்து அவரிடம் ஏமாந்தவர்கள் காவல்துறையினரிடம் புகார் கொடுக்க அவர்கள் அவனை கைது செய்தனர். ஏமாற்றிய எட்டு இலட்சத்தில் அவனிடம் இருந்தது வெறும் 50,000 மட்டுமே இருந்தது. இன்னொருவர் ஒரு தொழிலதிபரிடம் இரிடியம் வாங்கித் தருவதாக கூறி 86 இலட்சம் மோசடி செய்துள்ளார், இன்னொருவர் 80 இலட்சத்தை பறிகொடுத்துள்ளார்.
கிரிஷ்ணதாஸ், கிறிஸ்துதாஸ், கிறிஸ்து மூர்த்தி... இத்தனை நபர்களும் என்ற உடன் இத்தனை நபர்களும் சேர்ந்தா ஏமாற்றினார்கள் என நினைக்க வேண்டாம். இத்தனை பெயர்களில் ஒருவன் ஏமாற்றியுள்ளான். ஒரு இலட்சம் கொடுத்தால் 15 சவரன் தங்க நகை தருவதாக கூறி ஏமாற்றியுள்ளான். இவனின் குறி பெண் குழந்தைகள் மட்டும் உள்ள குடும்பங்கள்தான். மாதம் ஐந்து சவரன் தருவதாக கூறி ஏமாற்றியுள்ளான்.
இவை மட்டுமல்ல ஈமு கோழி, காந்தப்படுக்கை, மந்திரப் பானை, அரசு திட்டங்களைப் பயன்படுத்தி மோசடி என இந்த வரிசை நீண்டுகொண்டே போகும்.
ஏமாறுபவன் இருக்கும்வரை ஏமாற்றுபவனும் இருக்கத்தான் செய்வான்...