Skip to main content

ஓட்டிங் மெஷின்களைக் குழப்பும் திட்டம்? – சமீபத்திய சர்ச்சைகள்!

Published on 08/12/2018 | Edited on 08/12/2018

தேர்தல் வரும்போதே, அதில் முறைகேடு புகார்கள் கிளம்புவதும் வழக்கமானதுதான். அதற்கு நடந்துமுடிந்திருக்கும் ஐந்து மாநில தேர்தல்களும் விதிவிலக்கில்லை. ஆனால், இம்முறை சில மாநிலங்களில் சந்தேகத்துக்குரிய சாட்சிகளும் சிக்கியிருப்பதுதான் நெருடல்களை எழுப்புகிறது.
 

மத்தியப்பிரதேச தேர்தலில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் 2,236 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், சுமார் 3% மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு காரணமாக மாற்றப்பட்டதாகக் கூறியுள்ளது. இது வழக்கமானதுதான் என்கிறது தேர்தல் ஆணையம்.
 

VVPT

 

 

 

அதேசமயம் தேர்தல் தினத்தன்று தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பி.ஜே.பி.யைச் சேர்ந்த ஹோட்டலொன்றில் தங்கியதாகவும், அவர்கள் கையோடு வாக்குப்பதிவு இயந்திரம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் (வி.வி.பி.ஏ.டி.) எந்திரத்தையும் கையோடு கொண்டுவந்திருப்பதையும் காட்டும் வீடியோ காட்சிகள் தேர்தல் தினத்தன்று வைரலாகியது.
 

பின் தேர்தல் ஆணையம் வரை புகார் போனதையடுத்து, அதில் பாதி செய்தி உண்மையெனத் தெரியவந்தது. சுஜல்பூர் மாவட்டத்தின் சுஜல்பூர் தொகுதியின் கிராமமொன்றில் வாக்குப்பதிவுக்காக வந்திருந்த அதிகாரிகள், கிராமத்தில் தங்கும் வசதி இருக்காதென சுஜல்பூரின் ராஜ்மகால் ஹோட்டலில் தங்க, அவர்களது அறையில் நுழைந்து மனோஜ் புரோகித் என்னும் பத்திரிகையாளர் தேர்தலுக்கு முந்தைய நாள் எடுத்த வீடியோ என்பது தெரியவந்தது.
 

பொதுவாக வாக்குப்பதிவுக்குச் செல்லும் முன்புதான் வாக்குப்பதிவு எந்திரத்தையும், யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்பதைக் காட்டும் எந்திரத்தையும் எடுத்துச் செல்லவேண்டும். கிராமம் தொலைவிலிருக்கிறது என்பதால் இரவே எந்திரத்தை எடுத்துவந்ததும், பி.ஜே.பி. பிரமுகரின் ஹோட்டலில் தங்கியதும் சர்ச்சைக்குக் காரணமாகிவிட்டது. அந்த வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என உறுதிகூறும் தேர்தல் ஆணையம், நான்கு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 
 

அதேபோல குறை சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் முடிந்து நாற்பத்தெட்டு மணி நேரம் கழித்து வாக்குப்பதிவு எந்திரமும் விவிபிஏடி எந்திரமும் வாக்குப்பதிவு எந்திரங்களைப் பாதுகாக்கும் இடத்துக்கு வந்ததற்கு எதிர்ப்புக் கிளம்பியது. அந்த தொகுதிக்கான தேர்தல் அலுவலர் விகாஸ் சிங்கைத் பொறுப்பிலிருந்து தூக்கிவிட்டு இன்னொருவரை நியமித்தது தேர்தல் கமிஷன். அந்த எந்திரங்கள் தேர்தலுக்குப் பயன்படுத்தியது போக கூடுதலாக இருந்த எந்திரங்கள். வாக்குப் பதிவில் பயன்படுத்திய எந்திரங்களல்ல என சமாதானப்படுத்தியுள்ளது தேர்தல் ஆணையம்.
 

மத்தியப்பிரதேசத்தின் போபால் கலெக்டர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்படும் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நவம்பர் 30-ஆம் தேதி மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள சிசிடிவி கேமராக்களும் லீட் டிஸ்ப்ளேக்களும் இயங்கவில்லை. இது தற்செயல் நிகழ்வில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
 

VOting machine

 

 

 

மத்தியபிரதேசத்தின் சாகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு, தேர்தல் நடந்த 48 மணி நேரத்துக்குப் பின் வாக்குப்பதிவு எந்திரத்தை ஒப்படைக்க வந்த, பதிவெண் இல்லாத பேருந்து ஒன்றும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. தேர்தல் ஆணையமோ, அந்தப் பேருந்திலிருந்தவை தேர்தல் ஆணையத்தால் கையிருப்பாக வைத்திருக்கப்படும் எந்திரங்கள். எனினும் அவை உரிய நேரத்துக்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அதற்குப் பொறுப்பான அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டடார்கள் என விளக்கமளித்தது. எதிர்க்கட்சிகளோ இந்த விளக்கத்தில் முழுத் திருப்தியடையவில்லை.
 

மத்தியப்பிரதேசத்தின் பிண்ட் மாவட்டத்தின் ஒரு தொகுதியில் யாருக்கு வாக்களித்தாலும், விவிபிஏடி மிஷின் பா.ஜ.க.வுக்கு வாக்களித்ததாக காண்பித்தது சர்ச்சையாகியுள்ளது. அந்த விவிபிஏடி எந்திரம் பழுதானதாக இருக்கவேண்டும் எனக் கூறப்பட்டாலும், தேர்தல் ஆணையம் அதுகுறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்கும்படி கேட்டுள்ளது.
 

சத்தீஸ்கர் மாநிலம் ஜகதல்பூரில் தேர்தலுக்குப் பின் வாக்குப் பதிவு எந்திரங்களை வைத்துப் பாதுகாக்கும் இடத்தில் இரண்டு ஜியோ நிறுவன ஊழியர்கள் லேப்டாப் சகிதமாக பிடிபட்டுள்ளனர். இந்த இடத்தில் சாதாரணமாக யாரும் நுழைந்துவிடமுடியாது. பாதுகாப்பு வீரர்களும், அவர்களைத் தவிர இங்கு நுழைய அதிகாரம் பெற்ற உரிய அடையாள அட்டை உள்ளவர்களும்தான் நுழையமுடியும். இங்கு ஜியோ ஊழியர்கள் நுழைந்திருப்பது சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலம் மட்டும் இளைத்ததா…. தேர்தல் தினத்தன்று கிஷான்கஞ்ச் தொகுதிக்கு உட்பட்ட சஹாபாத் பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சாலையில் கிடந்தது. போலீஸார் அதை மீட்டு தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த விவகாரத்தால், 2 அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் முடிவுக்கு இன்னும் இரண்டு தினங்களே இருக்கும் நிலையில், இன்னும் எத்தனை புகார்கள் வரப்போகிறதோ….