காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் மோடியை கண்டித்தும் தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இன்று சென்னை வந்த அவருக்கு எதிர்க்கட்சிகளும், பல்வேறு தமிழ் அமைப்புகளும் கருப்பு கொடி காட்டின. இதுதொடர்பாக நம்மிடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் காங்கிரஸ் சட்டப்பேரவை கொறடா விஜயதாரணி.
காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீதி, நியாகத்திற்காக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து வருகிறார் பிரதமர் மோடி. இதுவரை ஆண்ட கட்சிகள் அப்போது எதையும் செய்யாமல் இப்போது போராட்டம் நடத்தி நாடகமாடுகின்றன. இதைவிட பெரிய எதிர்ப்புகளையெல்லாம் பார்த்தவர் மோடி. போராட்டத்தால் உணர்ச்சி கொந்தளிப்பை கொண்டு வர முடியும். ஆனால் காவிரியை கொண்டு வர முடியாது. பா.ஜ.,வும் மத்திய அரசும் தான் காவிரியை கொண்டு வர முடியும் என்று பாஜக கூறுகிறதே...
காவிரி மேலாண்மை வாரியம் ஆறு வாரத்திற்குள் அமைக்க சொல்லியும் அமைக்காததன் பின்னணி என்ன. ஏன் இதை நீட்டிக்கொண்டே போகிறார்கள். எனவேதான் அரசியல் கட்சிகளும், விவசாயிகளும், மக்களும் போராட்டத்தில் இறங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
காவிரி விவகாரத்தில் தீர்வு கண்டிருந்தால் கருப்பு கொடி போராட்டத்திற்கு அவசியமே இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது பாஜக. ஆனால் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தள்ளிக்கொண்டே செல்கிறார்கள்.
மாறக இதையெல்லாம் கண்டுகொள்ளலாமல் உண்ணாவிரத்தில் பாஜகவினர் ஈடுபடுகின்றனர். ஆட்சி பொறுப்பில், அதிகாரத்தில், நடைமுறைப்படுத்தக் கூடிய இடத்தில் இருக்கக்கூடிய அரசு உண்ணாவிரத்தில் ஈடுபடுகிறது என்றால் மத்திய அரசின் இயலாமையை காட்டுகிறது. இயலாமையை காண்பிக்கக்கூடியவர்கள் ஆட்சிக்கு தகுதியுள்ளவர்களா?
நாடகம் நடத்துவது தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அல்ல. நாடகம் ஆடுவது மத்தியில் உள்ள பாஜக அரசுதான். காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடக தேர்தலில் பாதிப்பு வரும் என்று பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க துணிவில்லாமல் வெளியே உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
உலகம் முழுவதும் சுற்றி வந்த மோடியால் அவரது நாட்டில் ஆட்சி நிர்வாகத்தை செயல்படுத்த முடியாமல் அவரே உண்ணாவிரதம் இருக்கிறார் என்று உலகத் தலைவர்கள் நகைக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சி கர்நாடகத்தில் நடந்து வருகிறது. இப்படியிருக்க காவிரி விவகாரத்தில் ராகுல் காந்திகூட பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக தீர்த்துவைக்க முயலலாம் என கூறுகிறார்களே...
கர்நாடகத்தின் அரசியல் கட்சிகளை பொறுத்தவரை, அந்த மாநில மக்களின் மனப்பக்குவம் போலதான் அரசின் மனப்பக்குவம் அமைந்திருக்கும். அதேபோலத்தான் தமிழ்நாட்டிலும். இது இரு மாநில பிரச்சனை என்பதால் அதிகாரத்திலுள்ள மத்திய அரசுதான் தீர்வு காண வேண்டும். தனிப்பட்ட அரசியல் கட்சிகள் தீர்வு காண்பதென்பது சாத்தியமற்ற ஒன்று. அதிகாரம் மத்திய அரசான பா.ஜ.கவிடம் உள்ளது.