Skip to main content

கரோனா தொடர்பாகத் தவறான தகவல்களைப் பரப்பினால் வழக்குப் பாயும் - அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி!

Published on 09/06/2020 | Edited on 09/06/2020

 

f


சென்னையில் எந்த மருத்துவமனையிலும் படுக்கைகள் இல்லை, என் நண்பருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் சென்னையில் அவரை மருத்துமனையில் அனுமதிக்க ஒரு மருத்துவமனையிலும் பெட் இல்லை என்று நேற்று முன்தினம் பிரபல செய்தி வாசிப்பாளர் வரதராஜன் தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையான நிலையில், இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அவர் இதுதொடர்பாக பேசியாதாவது, "சென்னையில் போதுமான அளவு மருத்துவமனைகளில் படுக்கைகள் இருக்கின்றன. சென்னையில் உள்ள நான்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்று இ.எஸ்.ஐ. அயனாவரம் மருத்துவமனைகளைச் சேர்த்து மொத்தம் 5,000 அளவிற்குப் படுக்கைகள் உள்ளன. எனவே தவறான தகவல்களை யாரும் பரப்பத் தேவையில்லை. திரு. வரதராஜன் மிகத் தவறான தகவல்களைக் கூறியுள்ளார். அவர் மீது வழக்குத் தொடரப்படும். அரசு மருத்துவமனைகளில் இடமில்லை, தனியார் மருத்துவமனைகளில் இடமில்லை என்று அவர் கூறுகிறார் என்றால், அவர் வேண்டும் என்றே தவறான தகவல்களை மக்களுக்குக் கூறுகிறார். அவரின் இந்தப் பேச்சை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. 
 


அவரின் இந்தப் பேச்சு என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. நோயாளிகளை ஐ.சி.யூ.வில் வைப்பதா அல்லது வார்டுகளில் வைப்பதா என்பது மருத்துவர்கள், நோயாளிகளின் உடல் நலத்தைப் பொறுத்து முடிவெடுப்பார். அவரின் உரிமையில் யாரும் தலையிட முடியாது. நேரடியாக அரசு செயலாளர்களிடம் உதவி கேட்டதாகச் சொல்கிறார். அப்படி எல்லாம் அவர் யாரையும் தொடர்பு கொள்ளத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும். பத்திரிகையாளர்கள் உங்களுக்கு எத்தனை பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்ற உங்களுக்கே தெரியும். அவர்களில் யாருக்காவது சிகிச்சைகளில் எந்தக் குறைபாடாவது ஏற்பட்டதா என்று நீங்களே சொல்லுங்கள். ஒரே பத்திரிக்கை அலுவலகத்தில் 42 பேருக்கு இந்தக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. யாருக்காவது கரோனா பாதித்து சிகிச்சை அளிக்கப்படாமல் காத்திருப்பில் இருக்கிறார்களா என்று கூறுங்கள். யாராவது ஒருவர் இருந்தால் கூட அவர்கள் பெயரை தைரியமாகக் கூறுங்கள். நாங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கின்றோம். எப்படி இந்த மாதிரி குற்றச்சாட்டுக்களை அவர் கூறுகிறார் என்று தெரியவில்லை" என்றார். 
 

 

Next Story

முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கில் குற்ற நடவடிக்கைக்கு ஆளுநர் ஒப்புதல்

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

Governor approves action in case against ex-ministers

 

தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 31 ஆம் தேதி அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி. ரமணா, சி. விஜயபாஸ்கர் ஆகியோருக்கு எதிராக ஊழல் வழக்குப்பதிவு செய்யக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அரசு அனுமதி கோரியது. இதற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரவில்லை. அதேபோன்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்ய கடந்த மார்ச் மாதம் அனுமதி கோரிய நிலையில் அதற்கும் இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை. டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் தொடர்பான கோப்புகளையும் ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகளுக்கு அரசு உரிய விளக்கத்துடன் மீண்டும் அனுப்பி வைத்தபோதும் ஆளுநர் ஒப்புதல் தர மறுத்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆளுநர் அலுவலகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், “அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி. ரமணா, சி. விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான வழக்கில் குற்ற நடவடிக்கைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ஜி. பாஸ்கரன் மீது வழக்கு தொடரவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தவிர எஞ்சிய அரசுப் பதவி நியமன கோப்புகளுக்கு ஆளுநர் அனுமதி அளித்துவிட்டார். 2021 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2023 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி வரை அனுப்பப்பட்ட துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் முன்னாள் அமைச்சர்கள் பி.வி. ரமணா, சி. விஜயபாஸ்கர் ஆகியோர் மீது சிபிஐ விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

Next Story

மாஜி அமைச்சர் ரெய்டு வளையத்திற்குள் மருத்துவக்கல்லூரி நிர்வாகம்… சிக்குகிறதா ஆவணங்கள்?

Published on 13/09/2022 | Edited on 13/09/2022

 

 

Anti-corruption department raids C.Vijayabaskar's house too...!

 

திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு விதிகளுக்கு முரணாக, தகுதிச் சான்று வழங்கியதாக எழுந்த புகார் தொடர்பாக, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அந்த மருத்துவக் கல்லூரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். 

 

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புகளைத் தொடங்குவதற்கு 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் செயல்படுவதாக போலியாக சான்றிதழ் வழங்கியது தான், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டு. முதல் தகவல் அறிக்கையில், சி.விஜயபாஸ்கருடன், தனியார் மருத்துவக் கல்லூரியின் தாளாளர் ஐசரி கணேஷ், கல்லூரியின் டீன் ஸ்ரீநிவாசராஜ் மற்றும் தகுதிச் சான்று வழங்கிய குழுவில் இருந்த மருத்துவர்கள் பாலாஜிநாதன், மனோகர், சுஜாதா மற்றும் வசந்தகுமார் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். 

 

இந்த மருத்துவக் கல்லூரிக்கு சான்று அளித்ததற்காக, கடந்த 2020- ஆம் ஆண்டில் பார்வையிட்ட குழுவினர், ரத்த வங்கி, அறுவைச் சிகிச்சை அரங்கங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருப்பதாக அறிக்கை அளித்தனர். ஆனால் இதே காலக்கட்டத்தில் மருத்துவமனை கட்டடத்தைக் கட்டுவதற்கு அனுமதி கோரப்பட்டது தெரிய வந்திருப்பதாகவும், இதன் மூலம் அடிப்படை வசதிகள் இல்லாத போதே சான்றிதழ் அளிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Anti-corruption department raids C.Vijayabaskar's house too...!

 

லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த நவம்பர் மாதம் நடத்திய திடீர் ஆய்வில் மருத்துவமனைவியில் போதிய வசதிகள் இல்லை என்பது தெரிய வந்திருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பதிவேடுகளில் இருந்ததை விட குறைவான நோயாளிகளே சிகிச்சைப் பெற்று வந்ததும், தெரிய வந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. 

 

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, ஆவணங்களைக் கைப்பற்றுவதற்காக சென்னையில் 5 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும், மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளூர் மற்றும் தாம்பரம் தலா ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.