/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1-Recovered_225.jpg)
நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக கட்சி அதிமுக, பாஜக கட்சிகளுடன் இறுதிக்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. இறுதியாக தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நிறைவு செய்தது. நடைபெறும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. திருவள்ளூர் தனித் தொகுதி, மத்திய சென்னை, விருதுநகர், கடலூர், தஞ்சாவூர் ஆகிய 5 சீட்கள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டன. இதையடுத்து வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
அதில், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் தேமுதிக வேட்பாளராக மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, வேட்புமனு தாக்கலை நிறைவு செய்த விஜய பிரபாகரன் தான் போட்டியிடும் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட வருகிறார். விஜய பிரபாகரனின் பூர்விகம் விருதுநகர். தந்தையும் மறைந்த தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த்தின் சொந்த ஊர் விருதுநகர் என்பதால் அங்கு அரசியல் பயணத்தை தொடங்க இருக்கிறார் மண்ணின் மைந்தன். விஜயகாந்த் பிறந்த ஊர் விருதுநகர் என்பதால் அங்கு தேமுதிகாவிற்கு எப்போதுமே பேராதரவு இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதுவும் கட்சியின் தலைவரின் அனுதாப அலையாலும், விஜயகாந்தின் மகன் என்பதாலும் விஜய பிரபாகரன் எளிதில் வெற்றி பெறுவார் எனக் கூறப்படுகிறது.
விருதுநகர் மக்களவைத் தொகுதியை பொறுத்தவரை பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார், தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் போட்டியிடுவதால் ஸ்டார் தொகுதியாக விருதுநகர் மாறியுள்ளது. தற்போது, சிட்டிங் எம்பியான காங்கிரஸ் மாணிக்கம் தாகூரே மீண்டும் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் களம் காண்கிறார்.
விருதுநகர் தொகுதி குறித்து தேமுதிகவினர் பேசுகையில், விஜய பிரபாகரன் மண்ணின் மைந்தர். விருதுநகர்தான் அவரின் பூர்விகம். விருதுநகர் மக்களும் விஜய பிரபாகரனை தங்கள் வீட்டு பிள்ளையாக பார்க்கிறார்கள். அதனால் விருதுநகரில் விஜயபிரபாகரன் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. விஜய பிரபாகரன் நீண்ட ஆண்டுகளாக மக்கள் சேவை, அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வருவபர். மறைந்த தலைவர் விஜயகாந்த்தின் மகனான விஜய பிரபாகரன் தந்தை எதிர்கொண்ட சவால்களையும் பார்த்து வளர்ந்தவர். சொந்த தொகுதியான விருதுநகர் தொகுதியை சிறப்பாக கொண்டு வரவேண்டும் என்பதுதான் அவருடைய ஒரே நோக்கம். இப்போதே விருதுநகரில் தங்கி மக்கள் பணிகளை மேற்கொள்ள விஜய பிரபாகரன் வாடகைக்கு வீடு ஒன்றை பார்த்து வைத்துள்ளார்.
அதிமுக தற்போது கூட்டணி அமைத்து இருப்பதால் இந்த முறை தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகசாமாக அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த முறை அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதிமுக முழு ஒத்துழைப்பு வழங்கினால் வெற்றி நிச்சயம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் தேமுதிக களம் இறங்கியுள்ளது.
விருதுநகர் வேட்பாளர் விஜய பிரபாகரன் செல்லும் இடங்களில் கூட தந்தை வழியில் செயல்படுவேன் என உருக்கமாக பேசி வருகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, தொடர்ந்து இந்த முறை தேமுதிக விருதுநகரை கைப்பற்ற தேவையான களப்பணிகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
விருதுநகர் மண்ணின் மைந்தன் விஜய பிரபாகரன் போட்டியிடும் முதல் மக்களைத் தொகுதியில் வெற்றி வகையை சூடுவாரா? என்பதை ஜூன் 4 ஆம் தேதி தான் பதில் சொல்லும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)