Skip to main content

“கொஞ்சம் சில் பண்ணு மாப்பி” ; தலைவா முதல் வாரிசு வரை - தவிக்கும் விஜய்

 

vijay movie controversy

 

தமிழ்நாட்டிலிருந்தும் தமிழ் மக்களிடமிருந்தும் பிரிக்கவே முடியாத இரு விஷயங்கள் அரசியலும் சினிமாவும். காலத்திற்கேற்ப அரசியலில் கொள்கைகளும் சினிமாவில் தொழில்நுட்பங்களும் மாறியிருந்தாலும் அன்றிலிருந்து இன்றுவரை மாறாமல் தொடரும் சில விஷயங்களும் உள்ளன. அதிலொன்று மூன்றெழுத்து செண்டிமெண்ட். எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி தனுஷ், சிம்பு வரை திரையுலகில் ஆளுமை செலுத்திய, செலுத்திக்கொண்டிருக்கிற மூன்றெழுத்துக்காரர்கள் ஏராளம். இதில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் ஆகியோர் செய்த சில சம்பவங்கள் சினிமாவை தாண்டி அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இப்படி முந்தைய தலைமுறை உச்ச நட்சத்திரங்கள் அக்கால சினிமாவிலும் அரசியலிலும் ஏற்படுத்திய தாக்கத்திற்குச் சற்றும் குறைவில்லாமல் இக்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறவர் விஜய். விஜய் செய்த சில செயல்கள் தமிழகத்தைக் கடந்து இந்தியா முழுவதுமே அதிர்வலைகளை ஏற்படுத்தின. அப்படி விஜய் செய்த சில முக்கியமான தரமான சம்பவங்களைப் பற்றி பார்ப்போம்.

 

பொதுவாக கோட்டைக்குச் செல்ல வேண்டும் என்றால் கோடம்பாக்கத்தின் உதவி தேவை என்ற பேச்சு தமிழக அரசியலில் காலங்காலமாகப் பரவலாகப் பேசப்பட்டு வரும் ஒரு சொல்லாடல். அந்த வகையில் எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த் வரிசையில் நடிகர் விஜய்யும் கோட்டை வாசலை மிதிக்க வேண்டுமென அவரது ஒரு தரப்பு ரசிகர்கள் பேசி வருகின்றனர். இதற்கேற்றார் போல 2010க்குப் பிறகு வெளியான விஜய்யின் பல படங்களில் அரசியல் வசனங்கள் ஆங்காங்கே அனல் பறக்கத் தொடங்கின. இது ரசிகர்களுக்கும் மிகப்பெரிய பூஸ்ட்டாக அமைந்தது. இந்த காலக்கட்டம் தான் தற்போது விஜய் செய்யும் சம்பவங்களுக்கான ஆரம்பப்புள்ளி எனலாம்.

 

தலையாய் அமைந்த தலைவா :

 

கடந்த 2013 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் தலைவா படம் வெளியானது. பொதுவாக விஜய் படம் வெளியாகும் போது அவ்வப்போது சிறு சிறு சர்ச்சைகள் வருவது வழக்கம் என்றாலும், 'தலைவா' வுக்கு படத்தின் தலைப்பிலேயே சர்ச்சை வந்தது. 'டைம் டு லீட்' என்ற டேக் லைனுடன் வெளியான தலைவா படத்தின் டைட்டில் அப்போது மிகப்பெரிய பேசு பொருளானது. இந்த டேக் லைன் விஜய்யின் அரசியல் வருகைக்கான முடிவை உறுதி செய்துள்ளது என ரசிகர்கள் பேசத் தொடங்கினர். இந்தப் பேச்சு பெரிதாகவே அப்போது இருந்த அதிமுக ஆட்சியால் படத்திற்கும் விஜய்க்கும் சில குடைச்சல்கள் கொடுக்கப்பட்டன. அதன்பின் அந்த டேக் லைன் நீக்கப்பட்டு சில காட்சிகள் கத்தரிக்கப்பட்டு படம் வெளியானது. இந்தப் பிரச்சனையின் போது ரசிகர்களிடம் இருந்து விஜய்க்குக் கிடைத்த ஆதரவு பிற்காலங்களில் அவர் செய்யப்போகும் சம்பவங்களுக்குத் தலையாய் அமைந்தது என்று கூடச் சொல்லலாம்.

 

அதிமுகவைத் தொடர்ந்து திமுக:

 

அதிமுகவுடன் ஏற்பட்ட சிக்கல் ஓரளவுக்குத் தீர்ந்திருந்த சூழலில், அதற்கடுத்த ஆண்டே கத்தி படத்தில் விவசாயிகள் பிரச்சனை குறித்து ஆழமாகவும் அழுத்தமாகவும் பேசியிருப்பார். மேலும், இப்படத்தில் 2ஜி வழக்குகள் குறித்தும் விஜய் வசனங்கள் பேசியிருப்பார். இது திமுக தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்தாலும் படத்தைக் கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள், மிகப்பெரிய வெற்றியை விஜய்க்கு பரிசளித்தனர்.


பான் இந்தியா பிரச்சனை:

 

அதுவரை தமிழகத்தில் மட்டுமே சம்பவம் செய்து கொண்டிருந்த விஜய், மெர்சல் திரைப்படம் மூலம் இந்திய அளவில் ட்ரெண்டானார். மருத்துவத் துறையில் நடைபெறும்  ஊழலை மையமாக வைத்து வெளியான இப்படத்தில் ஜி.எஸ்.டி க்கு எதிராக வசனம் பேசி மத்திய அரசைக் கண் சிவக்க வைத்தார். இது அன்றைக்கு மத்தியில் ஆளும் பாஜகவினர் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. பாஜக தலைவர்கள் தங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்தனர். இதற்கு எல்லாம் ஒரு படி மேலே சென்ற எச். ராஜா விஜய்யின் இயற்பெயரான ஜோசப் விஜய் என்பதைக் குறிப்பிட்டு அவர் மீது மத ரீதியிலான சாயத்தைப் பூசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் விஜய் மெர்சல் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டு கடிதம் ஒன்றை வெளியிட்டார். இந்த விவகாரத்தில் ஸ்டாலின் தொடங்கி ராகுல்காந்தி வரை விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர்.


சர்க்காரும் முதல்வரும்:

 

மெர்சலை தொடர்ந்து நடிகர் விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சர்க்கார் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியீட்டிற்கு முன்பே மீண்டும் வெடித்தது ஒரு அரசியல் சர்ச்சை. அதற்குக் காரணம் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய கருத்துக்கள் தான். ஆம், இந்த விழாவில், "எல்லாரும் கட்சி தொடங்கி, பிரச்சாரம் செய்துதான் தேர்தலில் நிப்பாங்க, ஆனால் நான் சர்க்கார் அமைத்துவிட்டுத் தேர்தலில் நிற்கிறேன். சர்க்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. நிஜத்தில் முதலமைச்சரானால் நான் நடிக்கமாட்டேன்" என்று பேசினார். இது பெரும் விவாதத்தை உண்டாக்கியது. இதுமட்டுமல்லாமல் படத்தில் வில்லியாக வரும் வரலட்சுமிக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி என்ற பெயரை வைத்ததற்காக அதிமுகவினர் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர். இப்படி ரீலிலும், ரியலிலும் நிகழ்கால அரசியலையும் எதிர்கால திட்டங்களையும் கூறி அரசியல்வாதிகளை அதிர வைத்தார் சர்க்கார் விஜய். 


பிகில் மேடைப் பேச்சு:

 

அடுத்ததாக மீண்டும் அட்லீயுடன் இணைந்த விஜய் பிகில் படத்தில் நடித்திருந்தார். வழக்கம் போல இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய பேச்சுக்கள் அடுத்த நாளே பெரும் பேசுபொருளானது. அந்த விழாவில், "யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ, மக்கள் அவர்களை அங்குதான் உட்கார வைக்க வேண்டும்" என்று கூறினார். அத்துடன் அதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற பெண் பலியானதை சுட்டிக்காட்டிய விஜய், "சுபஸ்ரீ விவகாரத்தில் யார் மீது பழி போட வேண்டுமோ, அதைச் செய்யாமல் லாரி ஓட்டுநர்கள் மீது பழி போடுகிறார்கள். சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி ஓட்டுநர் மீதும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுகிறார்கள்" என்றார். இது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், இதற்கு அப்போது தகவல் மற்றும் செய்தி தொடர்புத்துறை அமைச்சராக இருந்த கடம்பூர் ராஜு, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனிடையே வெளியான இப்படம் பெரும் ஹிட்டடித்து பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

 

 மாஸ்டருக்கு சோதனை:

 

இப்படி கிடைக்கிற கேப்பில் எல்லாம் அரசியல் பேசும் விஜய் அடுத்தாக மாஸ்டர் படத்தில் நடித்து வந்தார். அப்போது வருமான வரித்துறையினர் அதிரடியாக அவரது இடங்களில் சோதனை நடத்தினர். இதற்காக நெய்வேலி படப்பிடிப்பில் இருந்த விஜய் சென்னை அழைத்து வரப்பட்டு அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இறுதியாக நடைபெற்ற விசாரணையில் விஜய் வீட்டில் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நெய்வேலியில் நடந்த படிப்பிடிப்பில் விஜய்யை பார்க்க தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான ரசிகர்கள் ஒன்றாகக் கூடினர். இதைப் பார்த்த விஜய் அவர்களுடன் அங்கிருந்த வேன் ஒன்றில் ஏறி செல்ஃபி எடுத்துக்கொண்டார். இந்தப் புகைப்படம் இந்திய அளவில் வைரலானது.

ப்ளாஸ்ட்டான பீஸ்ட்:


கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியானது பீஸ்ட். பெரும்பாலும் விஜய் படத்தின் சர்ச்சை இசை வெளியீட்டு விழாவில் இருந்தே தொடங்கும். அவ்விழாவில் அவர் பேசும் அரசியலும், ரசிகருக்கு சொல்லும் குட்டி ஸ்டோரியும் பல சர்சைகளையும் விவாதத்தை கிளப்பும். ஆனால் இதனை தடுப்பதற்காகவே இசை வெளியீட்டு விழா நடத்தப்படாமல் தனியாக ஒரு பேட்டியை விஜய் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் சுமூகமாக சென்று கொண்டிருந்த பீஸ்ட் இறுதியாக ஒரு புதிய சிக்கலை சந்தித்தது. அது பிரமாண்டமாக இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கே.ஜி.எஃப் படத்துடன் பீஸ்ட் படம் வெளியானதுதான். இது ஒன்றும் புதிது அல்ல, இரண்டு பெரிய படங்கள் ஒரே நாளில் வெளியாவது வழக்கம்தான். ஆனால் பீஸ்ட் படம் தமிழ் வருடப் பிறப்பிற்கு வெளியாக இருந்த நிலையில், கே.ஜி. எஃப்- படத்தால் ஒரு நாளைக்கு முன்பே  அதாவது ஏப்ரல் 13 ஆம் தேதிக்கு வெளியிடும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.  இருப்பினும் விஜய், யஷ் இருவரின் ரசிகர்கள் மாறி மாறி சமூக வலைத்தளங்களில் சண்டையிடத் தொடங்கினர். பீஸ்ட் vs கே.ஜி.எஃப் என ரசிகர்கள் மாறிமாறி சண்டையிட ஒரு கட்டத்தில் விஜய் vs யஷ் என மாறிப்போனது. இதற்கு யஷ், “இரண்டுமே பெரிய படம்தான், விஜய் சார் மீது எப்போதும் எனக்கு மரியாதை இருக்கு. கே.ஜி.எஃப். Vs பீஸ்ட் என்று நினைக்கவில்லை; கே.ஜி.எஃப். அண்ட் பீஸ்ட் என்று நினைக்கிறேன்" என விளக்கமளித்திருந்தார். படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. 

 

வரிந்துக்கட்டும் வாரிசு: 

 

விஜய் முதல் முறையாக தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில்  வாரிசு படத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் நேரடி தெலுங்கு படமாக உருவாகியுள்ள வாரிசு, பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த முறை விஜய் படத்திற்கு சிக்கல் எழுந்திருப்பது தெலுங்கு திரை உலகத்தில் தான். படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரும் தெலுங்கு திரையுலகம் என்பதால் வாரிசு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால், "தெலுங்கு திரைப்படத் துறையைக் காப்பாற்ற வேண்டும் எனும் நோக்கில் சங்கராந்தி(பொங்கல்) மற்றும் தசரா(விஜயதசமி) ஆகிய பண்டிகைகளின் போது, திரையரங்குகளில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் உள்ளது என்பதை சுட்டிக்காட்டி போர்க்கொடி தூக்கியது. இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான், இயக்குநர்கள் லிங்குசாமி உள்ளிட்ட பலரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். இதுக்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற இயக்குநர் பேரரசு இந்த சிக்கலை தெலுங்கு திரையுலகம் தீர்க்காவிட்டால் வாரிசுக்கு முன் வாரிசுக்கு பின் என தென்னிந்திய திரையுலகம் பிரிக்கப்படும் என்ற சூழலுக்கு இந்த விவகாரம் எடுத்துச் செல்லும் என எச்சரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து நேற்று நடந்த பேச்சு வார்த்தையில் தெலுங்கில் வாரிசுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு வழியாக பிரச்சனை முடிந்து விட்டது என்று எண்ட் கார்ட் போட்டால், மீண்டும் புதிய சிக்கலை சந்தித்திருக்கிறது வாரிசு. இந்தப் படத்தில் விலங்குகளைத் துன்புறுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது விளக்கம் கேட்டு விலங்குகள் நல வாரியம் படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இப்படி ஒவ்வொரு படத்திற்கும் புதிய புதிய பிரச்சனைகள் வந்துகொண்டிருப்பதால், அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். இன்னும் சிலர் எங்களுக்கும், எங்க தளபதிக்கும் இது ஒன்றும் புதிதல்ல. ‘தடை அதை உடை’ என்பதுபோல ஒவ்வொரு முறையும் எத்தனை தடைகள் வந்தாலும், அதனைத் தகர்த்தெறிந்து வெற்றிக்கொடி நாட்டுவார் என மார்தட்டுகின்றனர்.

 


 

இதை படிக்காம போயிடாதீங்க !